Wednesday, April 6, 2016

வருகிறது `ஆர்கானிக் காபி’!

வருகிறது `ஆர்கானிக் காபி’!


காலை எழுந்தவுடன் காபி, அது இல்லையேல் நம்மில் பலருக்கு பைத்தியம் பிடித்தது போலாகிவிடும். காபி என்ற பெயரில் ஏதேனும் ஒன்றை சூடாகக் குடிப்போர் சிலர். ஆனால் பெரும்பாலும் டிகாஷன் காபிக்கு அடிமையானோர் ஏராளம். இத்தகைய டிகாஷன் காபியின் சுவையை சிலாகித்து பேசுவோரும் உண்டு. காபியில் கஃபீன் என்ற பொருள் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்ற மருத்துவ ஆலோசனை கூறுவோரில் பலரும் காபியின் சுவைக்கு அடிமை என்பதுதான் நிஜம்.

விரைவிலேயே ஆர்கானிக் காபி விற்பனைக்கு வர உள்ளது. இத்தகைய காபியை அளிக்கப் போவது கேரள மாநிலத்தில் உள்ள கூட்டுறவு அமைப்பினர்தான்.

கோட்டயத்தைச் சேர்ந்த விவசாயிகள் முற்றிலும் ரசாயன உர கலப்பில்லாத இயற்கை உரங்களின் மூலம் விளைவிக்கப்படும் ஆர்கானிக் காபி-யை விற்பனை செய்ய நாடு முழுவதும் விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

மன்னர்காடு சோஷியல் சர்வீசஸ் சொசைட்டி (மாஸ்) என்ற கூட்டுறவு அமைப்பு இந்த காபி விற்பனையகத்தைத் தொடங்க உள்ளது. சங்கிலித் தொடர் விற்பனையகமாக நாடு முழுவதும் தொடங்க உள்ள இந்த விற்பனையகத்துக்கு `காபி டே மோன்ட்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலாவது விற்பனையகம் கேரளத்தில் தொடங்கப்பட்டு பிறகு படிப்படியாக விரிவாக்கம் செய்யப் போவதாக `மாஸ்’ அமைப்பின் தலைவர் பிஜுமோன் குரியன் தெரிவித்துள்ளார்.

வெறுமனே ஆர்கானிக் காபியை மட்டும் இங்கு விற்பனை செய்யாமல் பிற ஆர்கானிக் தயாரிப்புகளான பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்யவும் `மாஸ்’ திட்டமிட்டுள்ளது.

2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டுறவு அமைப்பில் 5 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு 3,110 ஹெக்டேராகும். உறுப் பினர்கள் 18 கிராமங்களில் பரவியுள்ள னர். காபி, கோகோ பிற நறுமண பொருள்களை ஐரோப்பிய நாடுகளுக்கு `மாஸ்’ ஏற்றுமதி செய்கிறது.

இந்த சங்கம் ஆண்டுக்கு 4,000 டன் நறுமணப் பொருள்கள், 6 ஆயிரம் டன் கோகோ, 2,600 டன் காபி மற்றும் 1,850 டன் பழ வகைகளை உற்பத்தி செய்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தமிழகத்திலும் ஆர்கானிக் காபியை பயிரிடுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ரசாயன உரக் கலப்பில்லாத பொருள்களை ஏற்றுமதி செய்யும் அங்கீகாரம் பெற்ற சங்கமாக `மாஸ்’ திகழ்கிறது. கடந்த ஆண்டு ரூ. 30 கோடியை ஏற்றுமதி வருமானமாக இது திரட்டியுள்ளது.

இந்த சங்கத்தின் உற்பத்திகளுக்கான தேவை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வருடந்தோறும் 20 சதவீத வளர்ச்சியை பெற்று வருவதாக குரியன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் காபி கொட்டை களின் விலை வீழ்ச்சியடைந்து வந்த போதிலும், ரசாயன உரக் கலப்பில்லாத தங்கள் சங்கத்தின் ஆர்கானிக் காபி கொட்டைகளுக்கு கடும் தேவை இருப்பதாக பெருமையோடு குறிப்பிடுகிறார் குரியன். ஆர்கானிக் காபி கொட்டைகளுக்கு அதிக விலை கிடைப்பதால் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு அதிக விலை தர முடிகிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குரியன் தெரிவித்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் ஆர்கானிக் பொருள்களை சாகுபடி செய்வதற்கான மையத்தை உருவாக்கி அதை ஊக்குவித்தும் வருகிறது மாஸ். இங்கு 12 வகையான ரசாயன கலப்பில்லாத பொருள்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் உரக் கலப்பில்லாத பொருள்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் இத்தகைய பொருள் களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் குரியன்.

சுதேசியாக உருவாக்கப்பட்டுள்ள ரசாயன உரக் கலப்பில்லாமல் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் காபி-க்கு அமோக வரவேற்பிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

``மாஸ்’ முயற்சிக்கு மிகப் பெரும் ``மாஸ்’’ உருவாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024