7-வது சம்பள கமிஷனால் உணவு பொருள் விலை உயரும்: ரகுராம் ராஜன் கருத்து
7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 0.40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2016-17 நிதியாண்டின் இரண் டாவது காலாண்டில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜிடிபி அதிகரிக்க வாய்ப்பு
இதன் காரணமாக நுகர்வோர் விலை குறியீடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் பிரதிபலிப்பு அடுத்த 24 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக ரகுராம் ராஜன் கூறினார்.
நடப்பு கணக்கிலிருந்து சுமார் 0.40 சதவீதம்வரை ஜிடிபி அதிகரிக்கும் வாய்ப்புள் ளது.
இதன் விளைவாக உணவுப் பொருட்கள் விலை உயரும் வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
அரசின் உணவு கையிருப்பு கொள்கைகள் மற்றும் கொள் முதல் விலை, குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கணித் துள்ளது.
5 மாநில தேர்தல் பணப்புழக்கம் ரூ.60 ஆயிரம் கோடி
சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களின் பணப்புழக்கம் சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று குறிப்பிட்டார். தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் கையில் சாதாரணமாக பணப் புழக்கம் அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களிடம் ராஜன் குறிப்பிட்டார். மக்களிடம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி வரை புழங்குகிறது, இது சாதாரணமானதல்ல என்றும் கூறினார்.
இதன் பாதிப்பு தேர்தல் நடக்கும் மாநிலத்தில் மட்டுமல்ல, பக்கத்து மாநிலத்துக்கும் நீள்கிறது என்றார். தேர்தல் நேரத்தில் பணப் புழக்கம் எப்படி நிகழ்கிறது என்பது குறித்து ராஜன் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளி விவரங்கள்படி பணப்புழக்கம் 48 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment