Wednesday, April 6, 2016

காணும் இடங்களில் எல்லாம் தெரிய வேண்டும்

காணும் இடங்களில் எல்லாம் தெரிய வேண்டும்

வ்வொரு ஆட்சியின்போதும், பெயர் சொல்வதற்கு ஏதாவது திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்த ஆட்சியின் பெயர் காலம்காலமாக நிலைத்து நிற்கும். அந்த திட்டத்தை எத்தனை ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும், அதை அறிமுகப்படுத்திய அரசாங்கம்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், 2004–ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு பெயர் வாங்கிக்கொடுத்த திட்டம் என்றால், அது 2006–ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டமாகும்’. பா.ஜ.க. அரசாங்கமும் இதை தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. சாதாரண கிராம மக்களுக்கு இதை 100 நாள் வேலைத்திட்டம் என்றால்தான் தெரியும். கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மக்கள், திறன் பயிற்சிபெறாத மக்கள், தங்கள் உடல் உழைப்புகளைக்கொண்டு வேலைபார்க்க முன்வரும் ஆண், பெண் இருவருக்கும், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைதருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், இப்போது மாநில அரசுகளுக்கான நிரந்தர சொத்துகள் உருவாக்கப்பட்டால், மத்திய அரசாங்கம் 75 சதவீத தொகையையும், மாநில அரசு 25 சதவீத தொகையையும் ஏற்கும்.

தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒருநாள் சம்பளம் 64 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு இந்தத்தொகை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 183 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆண்டுக்கு இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த ஒருநாள் சம்பளம் 183 ரூபாயிலிருந்து 203 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் 229 ரூபாயிலிருந்து 240 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, கர்நாடகத்தில் 204 ரூபாயிலிருந்து 224 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த தொகையை கேரளா அளவுக்கு 240 ரூபாயாக உயர்த்த மத்திய அரசாங்கத்தை, தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில், 85 லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்கள் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான கார்டு வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் கிராம மக்களுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாகும்.

ஆனால், இந்த திட்டத்திலும் பல குறைபாடுகள் கூறப்படுகின்றன. இந்த திட்டம் வந்தபிறகு, கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு இதைவிட அதிக கூலி கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஏனெனில், விவசாய வேலைகளுக்குச்சென்றால் கொடுக்கும் கூலிக்கு வேலை வாங்கிவிடுவார்கள். ஆனால், 100 நாள் வேலைத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக வேலை செய்யாமலோ, அல்லது பெயருக்கு கொஞ்சம் வேலை பார்த்துவிட்டோ, நிர்ணயிக்கப்பட்ட கூலியில் ஒருபங்கை சம்பளமாக வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிவிடலாம். மீதித்தொகை வேலைவாங்கும் பொறுப்பில் உள்ளவர்கள் பைக்கு போய்விடும். இத்தகைய முறைகேடுகளால்தான் இந்த திட்டத்துக்கு இதுவரையில் ஒதுக்கப்பட்ட, செலவழிக்கப்பட்ட தொகைக்கான பலன்களைப்பார்க்க முடியவில்லை. இப்போது ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது. அனைவருக்கும் கூலியை இதன்மூலம் வங்கிக்கணக்கில் செலுத்துவதை உறுதி செய்யவேண்டும். மொத்த வேலைகளையும் நிரந்தர சொத்துகளாக்கவேண்டும். பார்த்த இடமெல்லாம் இது 100 நாள் வேலைத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள், கட்டிடங்கள், கழிப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், வளர்க்கப்பட்ட மரங்கள், கட்டப்பட்ட பாலங்கள் என்று பெயர் சொல்லவேண்டும். இதற்கு பொறுப்பான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் எங்கள் பஞ்சாயத்தில் இவ்வளவு தொகை செலவழித்தோம், அதன் பயனாக இவ்வளவு நிரந்தர சொத்துகளை உருவாக்கினோம் என்று கணக்குகாட்டவேண்டும். அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும். குறிப்பாக, இந்த வேலைகளை விவசாய வேலை இல்லாத நாட்களில் மேற்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...