எம்ஜிஆர் 100 | 36 - M.G.R. ஆத்திகரா? நாத்திகரா?
M.G.R. ஆத்திகரா? நாத்திகரா? இந்தக் கேள்வி குறித்து அந்தக் காலத்தில் திண்ணைகளில் பட்டிமன்றமே நடக்கும். கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் என்றாலும் லட்சக்கணக்கானோர் பின்பற்றக் கூடிய ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை விவாதிக்கப்படுவது இயல்புதான். அதுவும் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தவர் என்னும்போது இந்தக் கேள்வியின் வீரியம் கூடியது.
திமுக ஒரு ‘நாத்திகக் கட்சி' என்று அந்தக் காலத்தில் மட்டுமல்ல; இப் போதும் கூட தவறான கருத்து சில ரிடம் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா வைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறை யில் அவர் நாத்திகர். ஆனால், அவர் தொடங்கிய திமுக ‘நாத்திகக் கட்சி' என்று அவர் அறிவித்தது இல்லை. 1953-ல் தந்தை பெரியார் ‘பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம்’ அறிவித்தார். அப்போது, அந்தப் போராட்டம் குறித்து அண்ணாவிடம் கேட்கப்பட்டது. அவர் அதற்கு ‘‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’’ என்று பதிலளித்தார்.
எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது கழுத்தில் மணிமாலையுடன் நெற்றியில் திருநீறு அணிந்து இருப்பார். அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்த பிறகு மதச் சின்னங்களை அணிவ தில்லை. மேலும், திமுகவில் சேர்ந்த பிறகு புராண, பக்திப் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். இதனால், தேடி வந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தார்
ஆண்டவனின் பெயரால் மூடநம்பிக் கையைப் பரப்புவதும் மக்களை ஏமாற்று வதுமான காரியங்கள் கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர். கருதினாரே தவிர, கடவுள் மறுப்பு கொள்கையை அவர் பிரச்சாரம் செய்தது இல்லை. ‘கோயில் கூடாது என் பது அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது’ என்பது தானே திராவிட இயக்கத்தின் நோக்கம்.
எந்த மதத்தினரின் நம்பிக்கைகளை யும் எம்.ஜி.ஆர். புண்படுத்தியதும் இல்லை. தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதை அவர் மறுத்ததும் இல்லை. நாடகக் கம்பெனி யில் நடித்துக் கொண்டிருந்தபோது திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்திருக்கிறார். ‘மர்மயோகி’ படம் வெளியானபோது இரண்டாவது முறையாக திருப்பதி போய்வந்ததை எம்.ஜி.ஆரே கூறியிருக்கிறார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது நண்பரும் தீவிர முருக பக்தருமான சாண்டோ சின்னப்பா தேவர், தினமும் கோயிலில் எம்.ஜி.ஆர். பெயருக்கு அர்ச்சனை செய்து மருத்துவமனை சென்று பிர சாதம் கொடுப்பார்.
பின்னர், குணமாகி ‘விவசாயி’ படப் பிடிப்பின்போது மருதமலை சென்று முருகன் கோயிலில் சின்னப்பா தேவரால் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு வசதியையும் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத் தார். ‘தனிப்பிறவி’ படத்தில் ஜெய லலிதா பாடும் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். முருகன் வேடத்தில் தோன்றுவார். அது ஜெயலலிதா காணும் கனவுக் காட்சி. ‘உழைக்கும் கரங் கள்’ படத்தில் சிலை திருட்டை தடுப்பதற் காக சிவன் போல வேடம் அணிந்து வந்து வில்லன்களை விரட்டுவார்.
‘பொம்மை’ இதழின் இரண்டா வது ஆண்டு மலருக் காக, எம்.ஜி.ஆரை ஜெயலலிதா பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் ‘‘உங் களுக்கு கடவுள் நம் பிக்கை உண்டா?’’ என்ற ஜெயலலிதா வின் கேள்விக்கு கொஞ்சமும் தயங் காமல் ‘‘நிச்சயமாக உண்டு’’ என்று எம்.ஜி.ஆர். பதி லளித்தார். தனது கடவுள் நம்பிக் கையை அவர் மூடி மறைத்ததே இல்லை. அதற்காக, பரிவாரங் கள் புடைசூழ, சகல மரியாதைகளுடன் ஆர்ப்பாட்டமாக அவர் கோயிலுக்குச் சென்றதில்லை.
பின்னாளில், படப் பிடிப்புக்காக கர் நாடகா சென்றிருந்த போது, இயக்குநர் சங்கர் அவரை கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு பலமுறை மூகாம்பிகை கோயி லுக்குப் போய் தரிசித்திருக்கிறார். ‘‘மூகாம்பிகை வடிவில் என் தாயை பார்க்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ படத்துக் காக ‘ஆனந்த விகடன்’ இதழில் அவரது சிறப்பு பேட்டி வெளியானது. அந் தப் பேட்டியில் எம்.ஜி.ஆரின் கருத்துகள் கடவுள் நம்பிக்கை பற்றிய அவரது தெளிவான சிந்தனையைக் காட்டியது.
அந்தப் பேட்டியில், ‘‘பக்தி பரிசுத்த மானது. பக்தன் பரிசுத்தமானவன். முன்பெல்லாம் மக்கள் கடவுளை தங்கள் மனதில் வைத்திருந்தார்கள். இப்போதோ, கடவுள் கோயில்களில் இருப்பதாகத்தான் நினைக்கிறார்கள். இதனால்தான் பிரச்சினைகளே வந்தன’’ என்று எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வரானதும் வித்தியாசமான முறையில், ‘பொம்மை’ இதழுக்காக அவரை நடிகை லதா பேட்டி கண்டார். ‘‘காஞ்சிப் பெரியவரை சமீபத்தில் தரிசித்துப் பேசினீர்களா?’’ என்று லதா ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஒரு நல்ல துறவியை, பற்றில்லாத மனத்தினரை, பிறருக்காக வாழ்வதே மாந்தர் கடமை என்ற தத்துவத்தின் ஒட்டுமொத்த உருவமாக காட்சியளித்த ஒரு பெரியவரை நான் கண்டேன்’’ என்று பரமாச்சாரியாரைப் பற்றி கூறினார்.
எம்.ஜி.ஆர். ஒருபோதும் தன்னை நாத்திகராகக் காட்டிக் கொண்டது இல்லை.
எல்லோரையும் தனது சொந்தங் களாகக் கருதிய எம்.ஜி.ஆர். நடித்த ‘தொழிலாளி’ படத்தில் அவர் பாடி நடித்த அருமையான பாடல் இது…
‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி…’
- தொடரும்...
படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
தனது தலைவரான அண்ணாவுக்கு தலைவராக விளங்கிய தந்தை பெரியார் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. 1978-79ல் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரியார் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது.
பெரியாரின் பொன்மொழிகள் நூல் வடிவில் கொண்டுவரப்பட்டன. அவரது வாழ்க்கை வரலாறு மாவட்ட தலைநகரங்களில் ஒளி-ஒலி காட்சியாக நடத்தப்பட்டது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார். 1979-ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளில் ஈரோட்டை தலைநகராகக் கொண்டு பெரியார் மாவட்டத்தை உருவாக்கினார். இருவருக்குமே டிசம்பர் 24-ம் தேதிதான் நினைவு நாள்!