காமராஜர்: மக்கள் தலைவர்
ஞானத் தந்தைக்கு மரியாதை!
பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் அவருடைய கீர்த்தி உயருகிறதே அன்றி குறையவில்லை. தமிழகம் இன்றைக்கு எவற்றையெல்லாம் பெருமையாகக் கொண்டாடுகிறதோ அவற்றில் பெரும்பாலானவற்றுக்குத் தன்னுடைய வெறும் 9 ஆண்டுகள் (1954-1963) ஆட்சிக் காலகட்டத்தில் விதை போட்டவர்.
காமராஜரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவருடைய எளிமையை, நேர்மையை, தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்பாடுகளைக் கொண்டாடிப் பேசுவதும், அவரை இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு, ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்துவதும் நம்முடைய இயல்பு. அரசியலில் மட்டும் அல்ல; ஒவ்வொரு துறையிலும் காமராஜர்கள் இன்றைக்குத் தேவைப்படுகிறார்கள். காந்தியம் உருவாக்கிய தமிழகத்தின் மகத்தான ஆளுமைகளில் ஒருவரான காமராஜரிடம் நாம் வியந்து பேசும் பண்புகள் நாடு மட்டும் கோரும் பண்புகள் அல்ல; ஒவ்வொரு வீடும் கோருபவை.
காமராஜர் ஆட்சிக்குப் பிந்தைய இந்த அரை நூற்றாண்டில், ஏன் இன்னொரு காமராஜரை நம்மால் உருவாக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதில் நம்முடைய மதிப்பீடுகளின், விழுமியங்களின் வீழ்ச்சியில் இருக்கிறது. வரலாற்றை மறக்கும் சமூகம் வரலாற்றைத் தனதாக்க முடியாது. இதை 'தி இந்து' உணர்ந்திருக்கிறது. கூடவே, இளைய தலைமுறையினரிடம் நம் வரலாற்றையும் வரலாற்று நாயகர்களின் சாதனைகளையும் தொடர்ந்து பேச வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறது. தொடர்ந்து வரலாறு பேசுவோம்! புதிய வரலாறுகளை உருவாக்குவோம்!
காமாட்சி ராஜா!
இன்றைய விருதுநகருக்கு அன்றைய பெயர் விருதுபட்டி. 1903 ஜூலை 15-ல் பிறந்தார் காமராஜர். அப்பா குமாரசாமி, தேங்காய் வியாபாரி. அம்மா சிவகாமி. இவர்களுடைய குலதெய்வத்தின் பெயர் காமாட்சியம்மன். அதனால், பிள்ளைக்குக் காமாட்சி என்று பெயர் வைத்தார்கள். சிவகாமியோ பிள்ளையை எப்போதும் செல்லமாக 'ராஜா' என்றே அழைத்தார். காமாட்சியும் ராஜாவும் கலக்க 'காமராஜர்' ஆகிவிட்டார். காமராஜருக்கு ஒரு தங்கை உண்டு. நாகம்மாள். காமராஜருக்குத் தன் தங்கை மீது கொள்ளைப் பாசம்!
அழைத்தது தேசம்!
விருதுபட்டியில் திண்ணைப் பள்ளி நடத்தியவர் வேலாயுதம் வாத்தியார். அவரிடம்தான் காமராஜர் முதலில் படித்தார். பிறகு, ஏனாதி நாயனார் வித்யாசாலை. பிறகு சத்திரிய வித்யாசாலை. படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்துவிட்டார் காமராஜர். விளைவாக, படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்திவிட்டு, மாமன் துணிக்கடைக்கு வேலைக்கு அனுப்பினார்கள். அங்கும் காமராஜரின் கவனம் அரசியலை நோக்கியே போனது. பக்கத்தில் எங்கு கூட்டம் நடந்தாலும் போய் விடுவார். காமராஜரின் இன்னொரு மாமன் திருவனந்தபுரத்தில் மரக் கடை வைத்திருந்தார். அங்கே அனுப்பினார்கள். ஆனால், அங்கேயும் காந்தியின் காங்கிரஸ் காமராஜரைத் துரத்தியது.
சுயம்பு!
காமராஜரைப் 'படிக்காதவர்' என்று சொல்லிவிட முடியாது. கல்விக் கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட சுயம்பு அவர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றார். கேரளத்தில் இருந்த கொஞ்ச காலத்தில் மலையாளத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார். தெலுங்கும் தெரியும். இந்தியும் பேசுவார். நாடாளுமன்றத்தில் அவர் ஒரு முறை ஆங்கிலத்தில் உரையாற்றியதை 'மாசற்ற ஆங்கிலம்' என்று புகழ்ந்து எழுதியது 'தி இந்து' ஆங்கில நாளிதழ். ஆனாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மாநாடுகளில் பேசும்போது தலைவர் பேசுவது என்னவோ தமிழில்தான். கையெழுத்தும் தமிழில்தான்!
காந்தி தரிசனம்!
காந்தி 1921-ல் மதுரைக்கு வந்தபோது அவரைப் பார்த்தார் காமராஜர். காந்தியே தனது வழிகாட்டி என்று முடிவெடுத்தார். காமராஜரிடம் வெளிப்பட்ட சுயமரியாதை, எளிமை, நேர்மை இப்படிக் கொண்டாடத் தக்க பல பண்புகளுக்கு உந்துசக்தி காந்தி. பின்னாளில் நேருவையும் தனது மனதில் உயர்ந்த பீடத்தில் வைத்திருந்தார் காமராஜர். இளம் வயதிலேயே அவருக்குள் இருந்த ஊக்கம் மிக்க தலைவனை அடையாளம் கண்டவர் சத்தியமூர்த்தி. தன்னுடைய தலைவராக சத்தியமூர்த்தியையே வரித்துக்கொண்டார் காமராஜர்.
படைக்கு முந்து!
போராட்டங்களுக்கு அஞ்சாத மனிதர் காமராஜர். கேரளத்தின் வைக்கத்தில் 1923-ல் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, பிற்காலத் தமிழகத்தைச் செதுக்கிய இரு தலைகள் அதில் பங்கேற்றன. ஒருவர் பெரியார்; இன்னொருவர் காமராஜர்! சிறைக்கும் அஞ்சியதில்லை. தன் வாழ்வில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் காமராஜர். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் காமராஜரின் பூர்விகச் சொத்துகளைச் செல்லரித்தன. தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை திருமணம் செய்துகொள்ளவதில்லை என்று நண்பர்களுடன் சபதம் எடுத்துக்கொண்டவர், கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. காமராஜர் அகராதியில் தியாகம் இல்லாத பொது வாழ்வுக்கு எந்த அர்த்தமும் இல்லை!
பூசல்களிடையே பூத்த பூ!
ஆங்கிலேயர் கால இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தல்களை ஆரம்பத்தில் காங்கிரஸ் புறக்கணித்தது. பிறகு, தேர்தலில் பங்கேற்பது என்று முடிவெடுத்தது. 1934-ல் நடந்த தேர்தலில் வெற்றிகளைக் குவித்தது தமிழ்நாடு காங்கிரஸ். 1936-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சத்தியமூர்த்தி தலைவர் ஆனார். காமராஜர் பொதுச்செயலர் ஆனார். 1937-ல் சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் ஏற்பட்ட அதிகாரச் சண்டை தீவிரமானது. ராஜாஜியை எதிர்கொள்ள காமராஜர்தான் பொருத்தம் என்று முடிவு செய்தார் சத்தியமூர்த்தி. 1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆனார் காமராஜர்.
மக்களின் முதல்வர்!
தமிழக காங்கிரஸில் சத்தியமூர்த்தி, ராஜாஜி என்று இரு மையங்கள் இருந்தன. முதல்வராக ஆட்சியை ராஜாஜி வைத்திருந்தாலும், கட்சியைத் தன் வசம் வைத்திருந்தார் சத்தியமூர்த்தியின் சீடரான காமராஜர். ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிவித்தபோது கடும் எதிர்ப்பு உருவானது. காலையில் பள்ளியில் படிப்பு: மாலையில் அவரவர் குலத்தொழிலை மேற்கொள்வது எனும் முறை இது. எதிர்ப்பை எதிர்கொள்ள பதவி விலகும் முடிவெடுத்தார் ராஜாஜி. இக்கட்டான இந்தச் சூழல்தான் காமராஜரை முதல்வர் இருக்கையை நோக்கி நகர்த்தியது. முதல்வரான உடனேயே குலக்கல்வி முறையை ஒழித்தார்.
சீர்திருத்த முதல்வன்!
சமூக நீதி இல்லாமல் இந்தியாவில் முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்பதை முழுமையாக உணர்ந்தவர் காமராஜர். அரசியல் சாசனத்தில் அவர் முன்முயற்சியால் செய்யப்பட்ட முதல் திருத்தம் இதற்குச் சிறந்த உதாரணம். "கல்லூரியில் எங்களுக்கு இடம் கிடைக்காததற்குக் காரணம் இடஒதுக்கீடு முறை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என்று ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சீனிவாசன், செண்பகம் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணமூர்த்தி ஐயரே அவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். சென்னை உயர் நீதிமன்றமும் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் போனது தமிழக அரசு. அங்கும் கதவு அடைக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்று முழங்கினார் பெரியார். பிரதமர் நேருவிடம் பேசினார் காமராஜர். முதல் முறையாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. இன்றும் இடஒதுக்கீட்டு முறையைக் காக்கும் அரணாக அது நீடிக்கிறது.
கல்விப் புரட்சி!
காமராஜரின் சாதனைகளிலேயே மகத்தானது, தமிழக வரலாற்றிலேயே கல்வித் துறையில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொடுத்தவர் அவர் என்பது. அனைவருக்குமான இலவச கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். 1957-1962 இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. இந்தச் சாதனையைப் போற்றும் வகையிலேயே 2008 முதல் கல்வி வளர்ச்சி தினமாக காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.
முடியாது.. அது அகராதியில் கிடையாது!
அரசு அதிகாரிகளை காமராஜர் கையாளும் விதம் சுவாரஸ்யமானது. விவசாயம், வளர்ச்சித் திட்டம் என்று எதுவாகயிருந்தாலும் "இதைச் செய்ய முடியாது" என்று எந்த அதிகாரியும் அவரிடம் சொல்ல முடியாது. "முடியாதுன்னு சொல்ல நீ எதுக்குன்னேன்?'' என்பார். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், சாதிக்க வேண்டும்; சாக்குபோக்கு சொல்லக் கூடாது!
கல்விப் பசியாற்றியவர்!
காமராஜர் கொண்டுவந்த புரட்சித் திட்டமான மதிய உணவுத் திட்டம்கூட இப்படியான தடைகளைத் தாண்டியே வந்தது. பள்ளிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும் திட்டமிட்டு 1956-57-ல் இத்திட்டத்தைக் கொண்டுவந்தார். அன்றைக்கெல்லாம் இப்படியான திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்கு அரசாங்க கஜானாவில் பணம் கிடையாது. ஆனாலும் மக்களின் ஆதரவோடு இந்த மகத்தான திட்டத்தைத் தொடங்கினார். விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பங்கை இத்திட்டத்துக்குத் தந்தனர். ஊர் கூடி தேர் இழுத்த திட்டம் இது.
ஆவடி சோஷலிஸம்!
சென்னை, ஆவடிக்கு அழியாப் புகழைத் தந்தவர் காமராஜர். அவர் முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் தேசிய மாநாட்டை அங்கே 1955-ல் நடத்தினார். சோஷலிஸம்தான் காங்கிரஸின் சமூகக் கொள்கை என்பதை உரக்கச் சொல்லிய மாநாடு அது. மாநாட்டை நடத்தியதோடு மட்டும் அல்லாமல், சோஷலிஸத்துக்கான முன்னுதாரண மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தை வளர்த்தெடுத்தார். தமிழகத்திலுள்ள பெரும்பாலான தொழிற்பேட்டைகள், பொதுத்துறை நிறுவனங்கள் காமராஜர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவையே. இன்றைக்குத் தெற்காசிய அளவில் பிரம்மாண்டமானதாகக் கருதப்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கான விதை ஆவடி மாநாட்டின் தொடர்ச்சி.
மின்னிய பொற்காலம்!
தமிழகத்தின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட காமராஜர், தொழில் சூழலுக்கு மின் உற்பத்தி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியவர். பெரியார் நீர் மின்னுற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின்னுற்பத்தித் திட்டம் எல்லாம் அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. இன்றைக்கு தேசிய அளவில் கொண்டாடப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டமும் காமராஜரின் பொற்கால ஆட்சியின் விளைவேயாகும். மின்னுற்பத்தியில் சென்னை மாகாணத்துக்கு மூன்றாவது இடம் பெற்றுத் தந்ததும் அவரது சாதனைகளுள் ஒன்று!
விவசாயிகளின் ஒளிவிளக்கு!
ஒரு நல்ல ஆட்சியாளர் முதலில் விவசாயிகளைத்தானே கொண்டாடுவார்? காமராஜர் ஆட்சிக்கு வந்த உடனே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1962-ல்
நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும் மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்க வழிவகுக்கப்பட்டது. நீர்வளத்தைப் பெருக்க மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்தார். தமிழகத்தின் பெரும்பாலான நதிநீர்த் திட்டங்கள் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.
தமிழ்த் தொண்டர்!
தமிழில் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தவர் காமராஜர். அவரது ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி வெளியிடப்பட்டது. தமிழ் ஆட்சி மொழிச் சட்டம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், 'தமிழ்ப் பாடநூல் வெளியீட்டுக் கழகம்' என்று தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். 'மெட்ராஸ் ஸ்டேட்'டைத் தமிழில் தமிழ்நாடு என்று மாற்றி எழுத 1962-ல் அவரது ஆட்சியில் மசோதா கொண்டுவரப்பட்டது. அது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை என்றாலும், 1969-ல் அண்ணா ஆட்சியில் பெயர் மாற்றம் நிறைவேற அதுவும் ஒரு முக்கியக் காரணி எனலாம்.
பஞ்சாயத்து ஆட்சி!
கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரங்களும் நிதி ஆதாரமும் உட்கட்டுமான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.
மக்களில் ஒருவர்!
காமராஜர் ஒன்பது ஆண்டு காலம் முதல்வராக இருந்தார். அதற்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் எப்போதும் அவருக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியே இருந்ததில்லை. மக்களால் எளிதில் அணுகக் கூடிய தலைவராகவே இறுதிவரை இருந்தார். முக்கியமாக, அரசு அதிகாரத்தின் பல்வேறு மட்டங்கள் தனக்கும் மக்களுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது என்று உறுதியுடன் இருந்தார்.
கே.பிளான்!
'மூத்த தலைவர்கள் அரசுப் பொறுப்புகளிலிருந்து விலகி கட்சிப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைய தலைவர்களை அரசுப் பதவிகளில் அமர்த்த வேண்டும்' என்பது காமராஜர் முன்வைத்த திட்டம். காங்கிரஸ் இயக்கத்தை மேலும் பலமடங்கு பலப்படுத்துவதற்காக இதைக் கொண்டுவந்தார். அவரது பெயரிலேயே 'கே.பிளான்' என்று நாடு முழுவதும் இத்திட்டம் பேசப்பட்டது.
தானே ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதால் முதல்வர் பதவியை துறப்பதற்கு காமராஜர் தயாரானார். ஆனால், அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த பெரியார் இதைக் கடுமையாக எதிர்த்தார். இது ஒரு அரசியல் தற்கொலையாக அமையும் என்று எச்சரித்தார். எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த காமராஜர் பதவி விலகியதுடன், பக்தவத்சலத்தைப் பதவியில் அமர்த்தினார். இறுதியில் பெரியார் சொன்னதுபோலவே நடந்தது. காமராஜரோடு சேர்ந்து தமிழகத்தில் காங்கிரஸும் அதோடு சரிந்தது.
கிங் மேக்கர்!
நேருவின் மறைவுக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கான போட்டி எழுந்தது. லால் பகதூர் சாஸ்திரி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்ன ணியில் காமராஜரின் பங்கு அளப்பரியது. அடுத்த 20 மாதங்க
ளில் சாஸ்திரி மரணம் நிகழ மீண்டும் பிரதமருக்கான போட்டி தொடங்கியது. கடந்த முறை போலவே மொரார்ஜி தேசாய் இம்முறையும் நேரடியாகக் களத்தில் நின்றார். பிரதமர் பதவியில் காமராஜரே அமர வேண்டும் என்ற குரல்களும் ஒலித்த காலகட்டத்தில் இந்த முடிவுகளை எடுத்தார் காமராஜர். இந்திய அரசியலில் 'கிங் மேக்கர்' எனும் வார்த்தைக்கு அழுத்தமான அர்த்தம் கொடுத்தவர் காமராஜர்தான்!
எதிரிக்கட்சி அல்ல!
காங்கிரஸைத் தமிழ்நாட்டை விட்டு ஒழித்துக்கட்டுவேன் என்று சபதம் போட்டவர் பெரியார். அவரே பின்னாளில், "இன்றைய காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்திராதது" என்று தள்ளாத வயதிலும் ஊர் ஊராக காமராஜர் ஆட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். அரசியல்ரீதியாக காமராஜருக்குக் கடும் சவாலாக இருந்த திமுக நிறுவனர் அண்ணா தனிப்பட்ட வகையில் காமராஜரைக் கொண்டாடினார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்துடனும் நெருங்கிய நட்பு காமராஜருக்கு இருந்தது. எதிர் தரப்பாக இருந்தாலும், எதிரி மனப்பான்மை காட்டாத காமராஜரின் அரசியல் பண்பு அது.
ஏன் காமராஜர் நமக்குத் தேவை?
மனிதன் என்பவன் பணம் காய்ச்சி மரம் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் தன்னாலான பங்களிப்பை நிறைவேற்ற எத்தனிக்கும் ஒரு சமூக ஊழியன். இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் ஒவ்வொரு சந்தோஷத்துக்கும் பின்னும் காமராஜரைப் போன்ற எண்ணற்ற ஆளுமைகளின் தியாகம் இருக்கிறது. ஒரு சமூகத்தை உயிரோட்டத்தோடு அடுத்த தளத்தை நோக்கி நகர்த்துவது இந்தத் தியாகம்தான். இந்தத் தியாகத்தைப் போற்றுவதன் மூலம் உண்மையில் நமக்கு நாமே எரிபொருள் ஊற்றிக்கொள்கிறோம். உந்துசக்தி பெறுகிறோம்.
காமராஜரைத் தரிசிக்க!
காமராஜரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சென்னையிலுள்ள அவரது நினைவில்லத்துக்குச் செல்லலாம். விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த வீடும், கன்னியா
குமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபமும் பார்க்க வேண்டிய இடங்கள். இங்கெல்லாம் காமராஜர் பயன்படுத்திய பொருட்களும், ஏராளமான புகைப்படங்களும் அவரது உன்னத வாழ்வின் சாட்சியங்களாக இருக்கின்றன. ஆ.கோபண்ணா எழுதிய 'காமராஜ் ஒரு சகாப்தம்' புத்தகம் காமராஜர் வாழ்க்கை தொடர்பான அரிய ஆவணம்!