கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.
சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. தனியார் பள்ளிகள் ஒருசில இயங்குகின்றன. கடைகள் பரவலாக அடைக்கப்பட்டுள்ளது. தனியார் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் ரயில் மறியல் நடைபெற்றதால் மின்சார ரயில்கள் தாமதமாகின.
சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் | படம்: ரகு.
பொதுப் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் பாதுகாக்க மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் மறியல், பேருந்து மறியலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் வகையில் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாகக் கடைகள் மூடப்பட்டிருக்கிறன.
கர்நாடக அரசுக்கு சொந்தமான பள்ளிகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கோயம்பேட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துகள் | படம்: ம.பிரபு.
கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது | படம்:ம.பிரபு.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது:
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். காவேரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட கனிமொழி | படம்:எல்.சீனிவாசன்.
இதேபோல் சென்னை அண்ணாசாலையில் கனிமொழி தலைமையில் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கனிமொழி கைது செய்யப்பட்டார்.
திருமாவளவன் கைது:
சென்னை பேசின்பிர்ட்ஜ் அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார். நவஜீவன் ரயிலை மறிக்க முயன்றபோது திருமாவளவனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ | படம்: எம்.மூர்த்தி
புதுச்சேரியில் இயல்பு நிலை பாதிப்பு:
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் பந்த் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடவில்லை. பெட்ரோல் பங்குகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி | படம்: செ.ஞானப்பிரகாஷ்
புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக, பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடந்தது. அப்போது கர்நாடக மாநிலத்தில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் கண்னாடி உடைக்கப்பட்டது.
கோவை நிலவரம்:
கோவை மாவட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் சில திறக்கப்படவில்லை. சில பள்ளிகளில் மாணவர்கள் வந்த பிறகு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் சிரமத்துக்குள்ளாகினர். அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்க சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதால் ஆட்டோக்கள் இயங்கவில்லை. காலை 11 மணி அளவில் கோவை ரயில்வே சந்திப்பில் ரயில் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் காலை 10.30 மணிக்கு கோவை தெற்கு வட்டார ஆட்சியர் முன்னதாக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மதுரை:
மதுரையில் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கினாலும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளும் ஒரு சில பள்ளிகள் மட்டுமே இயங்குகின்றன. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கிறது.
தேமுதிகவினர் உண்ணாவிரதம்:
தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரேமலதா, தேமுதிகவினர் | படம்:ம.பிரபு.
90 ஆயிரம் போலீஸார்:
மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம், ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதால், தமிழகம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய இடங்களில் அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
படப்பிடிப்பு, காட்சிகள் ரத்து
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி, திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உட்பட அனைத்து பணிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எதற்காக பந்த்?
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. பெங்களூரு உட்பட பல இடங்களிலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நூற்றுக் கணக்கான வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் 16-ம் தேதி (இன்று) முழு அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்தனர். இப்போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.