மரத்துப் போயிற்றா மனிதம்?
By தி. இராசகோபாலன் | Last Updated on : 29th September 2016 01:01 AM |
அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் வாழ்வதற்குத் தான் வழி தெரியவில்லை. ஆனால், விடுதலை பெற்ற நாட்டில் சாவதற்கும் வழி தெரியவில்லையே? சாரிசாரியாகச் செல்லுகின்ற எறும்புகளில் ஒரு எறும்பு செத்துப் போய்விட்டால், மற்ற எறும்புகள் செத்த எறும்பை எடுத்துக்கொண்டு செல்கின்றன. காக்கைக் கூட்டத்தில் ஒரு காக்கை மின்சாரக் கம்பியில் அடிபட்டு விழுந்தால், உடனே மற்ற காக்கைகள் எல்லாம் கரைந்து கூடி, அடிபட்ட காக்கையை உயிர்ப்பிக்க முயலுகின்றன.
ஆனால், ஒடிஸா மாநிலத்தில் ஆதிவாசி ஒருவருடைய மனைவி மருத்துவமனையில் மாண்டால், அவரே தன் தோளில் தூக்கிப் போக வேண்டியிருக்கிறது.
அண்மையில் கான்பூரிலும் நபரங்காபூரிலும் மருத்துவமனைகளில் செத்த பிணங்களுக்கு வாகன வசதி செய்து தரப்படாமல், உரியவர்களே தோளிலும், சைக்கிளிலும் தூக்கிக்கொண்டு போன நிகழ்ச்சிகள், மனித வர்க்கத்தின் மேல் படிந்த கரும்புள்ளிகள் எனலாம்.
"கத்தும் பறவை கனிமரத்தில் வந்து, ஒற்றுமை காட்டிடுதே - தலைப்பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி பேதம் வளர்த்திடுதே' எனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடிய பாடல், சாகாவரம் பெற்றதாகும்.
கான்பூரில் தரித்திரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளி, சுனில்குமார். அவருடைய 12 வயது மகன் அம்ஷ பிறவி நோயாளி. 26.08.2016 அன்று அம்ஷ உயிருக்குப் போராடும் நிலைமை ஏற்படவே, சுனில்குமார் அவனைக் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்.
அங்கிருந்த அரசு ஊழியர்கள் நிலைமையின் விபரீதத்தை உணராமல், அடுத்திருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படி பணித்தனர். குழந்தைள் நல மருத்துவமனையில் உடனடி சிகிச்சை தராமையால், அச்சிறுவன் அங்கேயே இறக்க நேர்ந்தது. அக்குழந்தையை எடுத்துச் செல்ல ஆம்புலன்சும் தர மறுத்தனர். அதனால், அம்மகனை அத்தந்தை தம் தோளில் சுமந்துகொண்டே வீடு சென்றிருக்கின்றார்.
ஊடகங்களில் செய்தி பரவிவிடவே, மாநிலமே அதிர்வலைகளைச் சந்தித்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அம்மருத்துவமனையின் தலைமை அதிகாரியை இடைநீக்கம் செய்தார். என்றாலும், மனிதம் மரத்துவிட்டதே!
மரித்த உடலை எப்படி மதிப்பது என்பதை உலகிற்குச் சொல்லிக் கொடுத்த நாடு, நம் நாடு. இராவணன் மாண்டவுடன், இராமபிரான் வீடணனை அழைத்து, "வீடணா! "நீ என் தம்பிதான் என்றாலும் வன்மத்தை விட்டுவிட்டு, விதி நூல்களில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அவற்றின்படி போர்க்களத்தில் மாண்டு கிடக்கின்ற உன் அண்ணனாகிய இராவணனுக்கு ஈமக்கடன்களைச் செய்வாயாக' எனக் கட்டளையிடுகிறான். வான்மீகியும், "பகைமைகள் மரணத்தை முடிவாக உடையன' என வீடணனை நோக்கி மொழிகிறார்.
உயிரற்றவர்களின் உடலை மதிக்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும் என அழுத்தமாக வற்புறுத்த நினைத்த ஈட்டுரையாசிரியர் நம்பிள்ளை ஓர் அற்புதம் செய்தார்.
இராவணன் அண்ணன் இல்லை இராமன்தான் அண்ணன் என்பதை வீடணன் "களவியல் அரக்கன் பின்னோ தோன்றிய கடன்மை தீர்ந்தது' (பாடல்: கம்பன், 6506) எனும் வாக்குமூலத்தின் மூலம் புலப்படுத்துகின்றான். இராவணன் அண்ணன் இல்லை என்றாகிவிட்டபிறகு எப்படி ஈமக்கடன் செய்வது எனத் தயங்குகின்றான் வீடணன்.
"வீடணா, இராவணனுக்குக் கைங்கர்யத்தை நீ செய்கிறாயா அல்லது நான் செய்யட்டுமா நீ என் தம்பி இவன் உன் அண்ணன் ஆகவே இவன் எனக்கும் உறவினன் ஆவான்' எனச் சொல்லி இராமபிரான் எழுந்தபோது, பதறிப்போன வீடணன் நீர்க்கடனை நிறைவேற்ற எழுந்தானாம். இது நம்பிள்ளையின் ஈட்டுரை.
இவர்கள் எல்லாம் மனிதம் உரத்துப் போன மாமனிதர்கள்; மரத்துப்போன மனிதர்கள் அல்லர்.
இராமாயணத்தைப் போலவே மகாபாரதமும் நீத்தார்க் கடனாற்றுவதை நேர்த்தியாக எடுத்துரைக்கின்றது. பத்தாம் நாள் போரின்போது, பீஷ்மருக்கு இவ்வுலக வாழ்வை நீக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து, வில்லைக் கீழே போடுகிறார்.
அர்ச்சுனனுடைய அம்புகள் ஒன்றன்மேல் ஒன்றாக அவர்மேல் தைக்கவே, "அர்ச்சுனா என்னுடல் மண்மகள் மீது படக்கூடாது. அதனால் சரப்படுக்கை அமைத்து, அதன்மேல் கிடத்துவாய் மேலும் இது தட்சணாயணம் உத்தராயணத்தில்தான் நான் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்' எனப் பணிக்கின்றார்.
பீஷ்மர் பகைவர்களின் கூடாரத்தைப் சேர்ந்தவர் என்றாலும், அர்ச்சுனன் ஆச்சாரியன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுச் சரப்படுக்கை (அம்புப் படுக்கை) அமைக்கிறான். சரப்படுக்கையில் நினைவற்று இருக்கும் உடலைப் பஞ்சபாண்டவர்கள் மாற்றி மாற்றிக் காவல் காக்கின்றனர்.
அந்நேரத்தில் பீஷ்மர் "விஷ்ணு சகஸ்ரநாம'த்தை வாய்விட்டு ஓதத் தொடங்குகிறார். அதனை கண்ணன் சரப்படுக்கைக்குக் கீழே கைகட்டி அமர்ந்து கேட்கத் தொடங்குகிறான். கண்ணன் அமர்ந்தவுடன் தருமன் உட்பட அனைவரும் கீழே அமர்ந்து செவிமடுக்கின்றனர்.
இதனால், உயிர்நீத்துக் கொண்டிருக்கும் உடலை, நம் மூதாதையர் மதிக்கக் கற்றதோடு, துதிக்கவும் கற்றவர் என்பது வெளிப்படுகின்றது.
இந்திய மரபினரைப் போலவே அயல்மரபினரும்கூட புகழுடம்புகளை மதித்தவர்கள்தாம்.
ஒருமுறை நபிகள் நாயகம் தம் சீடர்களோடு திண்ணையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவ்வழியே ஒரு யூதருடைய இறுதி யாத்திரை போய்க் கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட நபிகள் நாயகம் எழுந்து நின்று, தலை குனிந்து மெளனம் கடைப்பிடிக்கின்றார்.
அந்த ஊர்வலம் கடந்தவுடன் சீடர்கள், "பெருமானே அது நம்முடைய ஜென்மப் பகைவன் யூதனுடைய பிணமாயிற்றே அதற்கு எதற்கு மரியாதை' என்றனர். அதற்குப் பெருமானார், "பிணத்தையே மதிக்கத் தெரியாத நீங்கள் எப்படி மனிதனை மதிக்கப் போகிறீர்கள்' எனக் கடிந்து கொள்கிறார்.
இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்தில் இனம் தெரியாதவன் இறந்து கிடந்தால்கூட ஆங்கிலேயர்கள் அவ்வுடலைச் சகல மரியாதைகளோடு, "பெயர் தெரியாத வீரனுக்கு' என்று மலர்வளையம் வைத்து அடக்கம் செய்தனர்.
ஆனால், நம்முடைய புண்ணிய பாரதத்தில், ஒடிஸாவில் இரண்டு ஏழை இளைஞர்கள் இறந்துபோன தங்கள் குடும்பத்துப் பெண்ணை மருத்துவமனையிலிருந்து பருயமுண்டா கிராமத்திற்கு ஏற்றிக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வசதி கேட்டிருக்கின்றனர்.
அதற்கென விதிக்கப்பட்ட தொகையினைக் கேட்டு, ஏதுமில்லாத அந்த ஏழை இளைஞர்கள், சைக்கிளில் அவ்வுடலைக் கிடத்தி, 30 கி.மீட்டர் தொலைவுக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கின்றனர்.
இத்தனைக்கும் அம்மாநில முதல்வர் 'மஹாபிரயாணா' எனும் பெயரில் 40 ஆம்புலன்ஸ் வேன்களை வாங்கி, பெரிய மருத்துவமனைகளில் நிறுத்தியிருக்கிறார்.
இதயத்தை முள்ளின் முனையில் நிறுத்தக்கூடிய ஒரு கொடூரம், அதே ஒடிஸா மாநிலத்தின், நெடுவழிச்சாலையில் நிகழ்ந்தேறியிருக்கிறது.
ஒடிஸா மாநிலத்தில் கலாஹண்டி மாவட்டம், மெல்காரா கிராமத்தில் தனா மஜி எனும் ஆதிவாசி வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி அமாங்தீ ஒரு காசநோயாளி.
காசநோயால் கடும் பாதிப்புக்குள்ளான தம் மனைவியை 60 கி.மீ. தொலைவிலுள்ள பவானி பட்னா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார், தனா மஜி. அன்று இரவு அமாங்தீ, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
கலாஹண்டி மாவட்டம் வறண்ட பூமியில்லை என்றாலும், வாங்கும் சக்தியில்லாத காரணத்தால், அங்குள்ள பழங்குடியினர் கடந்த இருபதாண்டுகளாகப் பசி, பட்டினியில் மடிந்து வருகின்றனர்.
அத்தகைய பழங்குடியினத்தைச் சேர்ந்த தனா மஜி கையில் காசு கிடையாது. தம்மனைவியை 60 கி.மீ. தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வேண்டியிருக்கிறார். ஆனால், செக்யூரிட்டிகளும், ஆண் செவிலியரும் அவ்வசதியை மறுத்ததோடு, இரவோடு இரவாகப் பிணத்தை அப்புறப்படுத்தும்படியும் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.
வேறு வழி தெரியாத அந்த ஏழை அபலை, மனைவியின் உடலை ஒரு லுங்கியில் சுற்றி எடுத்துக்கொண்டு, தம்முடைய 12 வயது மகள் சானடெய் மன்கி பின்தொடர தம் கிராமத்தை நோக்கி இரவோடு இரவாக நடக்கத் தொடங்கிவிட்டார்.
அப்படி அவர் நடந்து 16 கி.மீட்டரைத் தாண்டிய பின், அந்த வட்டாரத்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் அதனை சட்டப்பேரவை உறுப்பினர் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர். அவர் உடனடியாக ஓர் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து, மெல்காரா கிராமத்திற்குப் பயணப்பட ஏற்பாடு செய்திருக்கிறார்.
மறுநாள் அச்சோகக் காட்சியைப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. என்றாலும், செக்யூரிட்டிகளுக்கும் மருத்துவமனைச் சிப்பந்திகளுக்கும் மனிதநேயம் எங்கே போயிற்று? மரத்துப் போயிற்றா மனிதம்?