மனசு எல்லாம் மயிலு Added : பிப் 26, 2018 01:23
தமிழ் திரையுலகில் உதயமாகி, தேசிய அளவில் உச்சம் தொட்டவர் ஸ்ரீதேவி. நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்த இவர், அரை நுாற்றாண்டை கடந்து சரித்திரம் படைத்தார். அழகோவியமாக திகழ்ந்த இவர், தனது அசாத்திய நடிப்பால், உலக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தார்.
சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, 1969ல் வெளியான 'துணைவன்' என்ற ஆன்மிக படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின் தெலுங்கு, மலையாளம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1975ல் ஜூலி என்ற படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.
மூன்று முடிச்சு
கடந்த 1976ல் கே.பாலசந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' படத்தில், தன் 13வது வயதில் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். இதில் ரஜினி, கமலுடன் இணைந்து நடித்திருந்தார். மலையாள படங்களிலும் தனது, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ஆலிங்கனம், ஆத்யபாடம், 'ஆ நிமிஷம்' ஆகியவை சிறந்த மலையாள படங்கள்.
மனதில் 'மயிலு'
பாரதிராஜா இயக்கத்தில் 1977ல் வெளியான '16 வயதினிலே' படத்தில் இவர் நடித்த 'மயிலு' கதாபாத்திரம் இன்றளவும் பிரபலம். பின் சிவப்பு ரோஜாக்கள், பிரியா, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை, குரு, ஜானி, பட்டாக்கத்தி பைரவன், பகலில் ஒரு இரவு, தர்மயுத்தம், வாழ்வே மாயம், போக்கிரி ராஜா, நான் அடிமை இல்லை உள்ளிட்டவை வெற்றி படங்களாக அமைந்தன.
'லேடி சூப்பர் ஸ்டார்'
தமிழில் கலக்கிய இவர், 1979ல், 'சோல்வா சாவன்' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 1983ல் நடிகர் ஜிதேந்திராவுடன் நடித்த இரண்டாவது படமான 'ஹிம்மத்வாலா' பெரும் வெற்றி பெற்றதுடன், இந்தி திரை உலகில் நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. மூன்றாம் பிறை ரீமேக்கான 'சத்மா' இந்தியின் சிறந்த 10 படங்களுள் ஒன்று. 1980களில் மிகச்சிறந்த நடிகையாக திகழ்ந்ததுடன், இந்தியின் முதல் 'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டத்தையும் பெற்றார்.
'சாந்தினி' திரைப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது. பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்று தந்தது.
சின்னத்திரையில்
திருமணத்துக்கு பின் சில காலம் சினிமாவை விட்டு, விலகி இருந்தார். பின் இவரது கணவர் இயக்கிய 'மாலினி ஐயர்' என்ற 'டிவி' சீரியலில் நடித்தார். 'ஜீனா இஸி கா நாம் ஹாய்' உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்தார். சல்மான்கானுடன் '10 கா டும்', அமீர் கானுடன் 'சத்யமேவ் ஜெயதே' உள்ளிட்ட சில 'டிவி' நிகழ்ச்சிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
சிவகாசி டூ மும்பை
1963 ஆக., 13: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டிகிராமத்தில் பிறந்தார்.
1967 : சின்னப்பத்தேவரின் 'துணைவன்' என்ற தமிழ் சினிமாவில் 'முருகன்' வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்.
1969 : நம்நாடு படத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகனாக நடித்தார்.
1970 : 'மா நன்ன நிர்தோஷி' என்ற படத்தில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1971 : 'பூம்பாட்டா' படத்தில் மலையாளத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகம்
1975 : 'ஜூலி' என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்.
1976 : கே.பாலசந்தரின் 'மூன்று முடிச்சு' படத்தில்கதாநாயகியாக அறிமுகம்.
1979 : 'ேசால்வா சாவன்' படத்தில் இந்தியில் கதாநாயகியாக அறிமுகம்.
2017 : கடைசியாக நடித்த'மாம்', இவரது 300வது படம்.
2018 : 'ஜீரோ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாக
உள்ளது.
2018 பிப்., 24: துபாயில் மாரடைப்பால் மரணம்.
இரண்டு மகள்
ஏற்கனவே திருமணமான இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை, 1996 ஜூன் 2ல் திருமணம் செய்தார் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவைப்போல, பொறுப்புள்ள தாயாக வாழ்ந்து காட்டினார்.
எப்படி அறிமுகம்
ஸ்ரீதேவியின் தந்தையும் - கவிஞர் கண்ணதாசனும் நண்பர்கள், ஒருமுறை குழந்தை ஸ்ரீதேவியை பார்த்துவிட்டு, தயாரிப்பாளரும் நண்பருமான சின்னப்பத் தேவரிடம் 'தனது நண்பனின் குழந்தை, இந்த வேடத்தில் பொருத்தமாக இருப்பாள்' எனக் கண்ணதாசன் கூறியுள்ளார். பின் ஸ்ரீதேவியை பார்த்த நொடியிலேயே 'எனக்கு அந்த முருக பெருமான் கண்முன் நிற்பதுபோல் உள்ளது' எனக் கூறி, 1967ல், தனது 'துணைவன்' படத்தில் அறிமுகப் படுத்தினார் சின்னப்பத்தேவர்.
* கண்ணதாசன் சினிமாவுக்காக எழுதிய கடைசி பாடலான, கண்ணே கலைமானே, ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்றது.
ஜெ., உடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் திருமாங்கல்யம், கந்தன் கருணை, ஆதிபராசக்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஜெயலலிதாவின் பிறந்தநாளான,
பிப்., 24ல் ஸ்ரீதேவி மறைந்தார்.
1963 - 2018
ஸ்ரீதேவி பள்ளி படிப்பை மட்டுமே முடித்தவர். கல்லுாரிக்கு சென்று படித்தது இல்லை. ஆனால், அவருக்கு ஒன்பது மொழிகளில் பேசத் தெரியும். அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் அவரே செந்தக் குரலில் டப்பிங் பேசி நடித்துள்ளார்.
கமல் - ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி மிக பிரபலம். இருவரும் இணைந்து 27 படங்களில் நடித்துள்ளனர். இதில் முக்கியமானவை மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், 16வயதினிலே, மீண்டும் கோகிலா.
நடிகர் ரஜினியுடன் தமிழில் சுமார்13 படங்கள், இந்தியில் சில படங்களில் நடித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் இணைந்து 13 படங்களில் நடித்தார். பின் இவரது மூத்த சகோதரர் போனி கபூரை, ஸ்ரீ தேவி மணந்தார்.பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவுடன், 16 படங்களில் ஜோடியாக நடித்தார். இதில் 13 படம் வெற்றி பெற்றது.
சி.என்.என் - ஐ.பி.என், 2013ல் நடத்திய 'நுாறு ஆண்டுகளில் சிறந்த இந்திய நடிகை' என்ற கருத்துக்கணிப்பில், ஸ்ரீ தேவி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிப்படங்களில் நடித்தார்.
இந்தியில் 1993ல் வெளியான 'ரூப் கி ராணி சோரன் கா ராஜா' என்ற படத்தில் 'துஸ்மான் தில் கா வோஹ் ஹாய்' இந்தி பாடலில், 25 கிலோ எடையுள்ள ஆடையை அணிந்து நடித்தார்.
ஸ்ரீதேவி நடித்த கடைசி தமிழ் படம் புலி. 2015ல் வெளியான இப்படத்தில் விஜய்யுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழக அரசின் விருது, ஆந்திரா அரசின் நந்தி விருது, ஆறு முறை பிலிம்பேர் விருது, 2013ல் மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
'ஜூராசிக் பார்க்' ஹாலிவுட் படத்தில்(1993), நடிக்க, ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுத்தார் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஆனால் பாலிவுட்டில் 'பிசியாக' இருந்ததால் வாய்ப்பை மறுத்தார்.
நடிகர் சிவாஜியுடன் 1971ல் 'பாபு' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின் விஸ்வரூபம் (1980), சந்திப்பு (1983) ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார்.
சத்மா, சாந்தினி, கரஜ்னா, ஷானா ஷானம் ஆகிய நான்கு இந்தி படங்களில், பாடல் பாடியுள்ளார்.
ஸ்ரீதேவி ஓவியம் வரைவதற்கு ஆர்வம் காட்டுவார். 2010 மார்ச் மாதத்தில், அவரது ஓவியங்கள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைத்த பணத்தை நிதியுதவியாக வழங்கினார்.
அழகின் அழகே
அழகும், நடிப்பாற்றலும் ஒருங்கே அமைவது அபூர்வம், அப்படியொரு அபூர்வமான நடிகை தான் ஸ்ரீதேவி. 'இவரை மாதிரி பொண்ணு வேணும்..' என அந்தக் காலத்து இளைஞர்கள் கூறும் அளவுக்கு வசீகரம் கொண்டவர். தனது மூக்கு, உதடு ஆகியவற்றை 'ஆப்பரேஷன்' செய்து சர்ச்சை கிளப்பினார். கடைசி வரை தன் உடல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். ஜிம், டென்னிஸ், யோகாவில் கவனம் செலுத்தி 'பிட்டாக' இருந்தார்.
மூன்று தலைமுறை
மனோரமாவுக்குப்பின், எம்.ஜி.ஆர், - சிவாஜி, ரஜினி - கமல், தொடர்ந்து விஜய் - அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை இவர்தான்.
சப்பாணின்னு கூப்பிட்டா...
தமிழ் சினிமாவில் புரட்சி ஏற்படுத்திய 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் 'மயிலு' கதாபாத்திரம் ஆழமானது. 'ஆத்தா நான் பாசாயிட்டேன்' என, துள்ளி வருவார். 'ஹீரோவாக' வரும் கமல், வெற்றிலை பாக்கு போட்டுபுளிச் புளிச் என்று துப்பிக் கொண்டு சப்பாணியாக நடித்திருப்பார். அவரிடம் 'இனி யாராவது உன்னைச்சப்பாணின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறை' என, ஸ்ரீதேவி சொல்லும் வசனம் மறக்க முடியாதது.
சுப்ரமணி...சுப்ரமணி
ஸ்ரீதேவியை உச்சத்திற்கு கொண்டு சென்ற 'மூன்றாம் பிறை' படத்தில், விபத்தில் தன்னைப் பற்றிய நினைவுகளை மறந்த விஜி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பார்வையிலே குமரியாகவும் பழக்கத்திலே குழந்தையாகவும் இருப்பார். கமல் - ஸ்ரீதேவி இடையில் ஓடிக்கொண்டிருக்கும் நாய்க்குட்டி (சுப்ரமணி) அன்பின் அடையாளம். அதை ஸ்ரீதேவி செல்லமாக சுப்ரமணி...சுப்ரமணி என்று அழைக்கும் காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவை.
'இங்கிலீஷ் விங்லீஷ்'
திருமணத்துக்குப்பின் 2012ல் வெளியான 'இங்கிலீஷ் விங்லீஷ்' படம் மூலம் சினிமாவில்
'ரீ என்ட்ரி' கொடுத்தார் ஸ்ரீதேவி. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. 2017ல் வெளியான 'மாம்' திரைப்படமே, இவர் வெள்ளித்திரையில் தோன்றிய கடைசி படம். 54 வயதிலும் இப்படத்தில், சிறந்த நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஜூலை
ஸ்ரீதேவியின் திரைப்பயணம் ஜூலையில் தொடங்கி ஜூலையில் முடிந்துள்ளது. முதல் படம் துணைவன், ஜூலை 4ல் வெளியானது. கடைசி படம் 'மாம்', ஜூலை 7ல் வெளியானது. நாகினா ஸ்ரீதேவி 1986ல் 'இச்சாதாரி பாம்பு' வேடத்தில் நடித்த 'நாகினா' திரைப்படம் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர். இவர் 1987-ல் பத்திரிகையாளராக நடித்த'மிஸ்டர் இந்தியா' படம் மெகா ஹிட்டானது.