அரிதாரம் பூசிய பலூன்கள் விரைவில் வெடித்து சிதறும்: ஓ.பன்னீர்செல்வம்
By சென்னை, | Published on : 25th February 2018 12:53 AM
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையைத் திறந்து வைத்த பிறகு அவர் பேசியது:
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத் திட்டங்களால் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தாய்மார்களுக்காக ஜெயலலிதா உருவாக்கிய திட்டங்கள் ஏராளம். அப்படி அவர் வழங்கிய திட்டங்களில் ஒன்றுதான் மானிய விலையில் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்.
ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்தபோது, திசை தெரியாத பறவைகளாகத் திகைத்துக் கிடந்தோம். ஆனால், அவர் தந்த ஆசியும், கற்றுத் தந்த பயிற்சியும் நம்மை வழி நடத்துகிறது. இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் அதிமுக அழியாது மக்கள் பணியாற்றும் என்று ஜெயலலிதா சூளுரைத்தார். அதை நிறைவேற்ற ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்ற கனவோடு ஏற்கெனவே பலர் அலைந்து கொண்டிருக்கின்றனர். இப்பொழுது சிலர், மக்களைக் காப்பாற்றப்போகும் ரட்சகர்கள் தாங்கள்தாம் என்று வீரவசனம் பேசி வருகின்றனர்.
அரிதாரம் பூசிய பலூன்கள்: புதிதாக அரசியல் அவதாரம் எடுத்திருக்கும் அவர்கள் பேசும் வசனங்கள் எல்லாம், வெறும் புஸ்வாணமாக மாறி, ஆரவாரம் இல்லாமல் அடங்கிப் போய்விடும். நல்லவர்களைப் போல அவர்கள் போடும் வேஷம், வெகு விரைவில் கலைந்து போய்விடும். அவர்களுடைய கூடாரமும் கூடிய சீக்கிரம் கலகலத்துப் போய்விடும்.
ஏற்கெனவே, தமிழகத்தில் அதிமுகவை வெல்ல நினைத்த அரசியல் கட்சிகள் எல்லாமே, காற்றுப்போன பலூன் போல சுருண்டு போய்க் கிடக்கின்றன. இப்பொழுது அரசியல் வானத்தில், புதிது புதிதாக சில காற்றடைத்த பலூன்கள் பறக்கத் தொடங்கியிருக்கின்றன. அரிதாரம் பூசிய அந்த வண்ணப் பலூன்கள் பார்ப்பதற்கு அழகாகத்தான் தெரியும். அந்தப் பலூன்களும் வெகுவிரைவில் வெடித்துச் சிதறி வீழ்ந்து போவதை, இந்த நாடு பார்க்கப் போகிறது.
சதித் திட்டங்களை உடைத்தெறிவோம்: ஜெயலலிதா இல்லாத நிலையைப் பயன்படுத்தி, குழப்பம் விளைவித்து விடலாம், ஒற்றுமையைச் சீர் குலைத்து விடலாம், வெற்றிகளைத் தடுத்து விடலாம் என்று எதிரிகளும் துரோகிகளும் சதித் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த சதித்திட்டங்களை உடைத்தெறிவோம். வஞ்சக வலைகளை அறுத்தெறிவோம். ஜெயலலிதாவின் ஆட்சியையும் கட்சியையும் கட்டிக் காப்போம். எத்தனை தேர்தல்கள் வந்தாலும், எப்பொழுது வந்தாலும் அத்தனையிலும் வெற்றி கொள்வோம் என்றார் பன்னீர்செல்வம்.
No comments:
Post a Comment