இது பிளிப்கார்ட் வளர்ந்த கதை! - பூஜ்யத்தில் தொடங்கி ரூ.1,50,000 கோடி குவித்த இந்திய இளைஞர்கள்
Published : 10 May 2018 13:11 IST
புதுடெல்லி
பிளிப் கார்ட் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் - படம்; ட்விட்டர்
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டை விலைக்கு வாங்க, அமெரிக்க ஆன்லைன் நிறுவனமான அமேசானும், வால்மார்ட்டும் ஆர்வம் காட்டின. இறுதியாக இந்த போட்டியில் வென்றுள்ளது வால்மார்ட். பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது வால்மார்ட்.
அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் போட்டியாக வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் அமேசானின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனம் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.
11 ஆண்களுக்கு முன்பு துடிப்பான இளைஞர்களான பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகிய இருவரும் அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமோசானில் பணியாற்றி ஊழியர்கள். டெல்லி ஐஐடியில்படித்த இருவரும், ஆன்லைன் வர்த்தகத்தின் நடைமுறைகளை நடந்து அறிந்து கொண்டிருந்த அவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினர்.
சாதாரண அளவில் சிறிதாக பிளிப்கார்ட் நிறுவனத்தை பெங்களூருவில் 200-ம் ஆண்டு உருவாக்கினர். ஆன்லைன் வர்த்தக துறையில் தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்களை சேர்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வர்த்தகத்தை விரிவாக்கினர்.
‘ஸ்டார்ட் ஆப்’ நிறுவனமாக, பூஜ்யத்தில் இருந்து உருவானது பிளிப்கார்ட். இரு இளைஞர்களின் அபாரத் திறமையால் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்தது பிளிப்கார்ட்.
11 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் அதிகமாக பிரபலமடையாத சூழல், ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்களுக்கு இருந்த அச்சம் என பல தடைகள் இருந்தன.
இவற்றையெல்லாம் கொஞ்ம், கொஞ்சமாக கடந்த அவர்கள், தங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்தினர். எலெட்ரானிக்ஸ் பொருட்கள் வர்த்தகம் அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.
குறிப்பாக மொபைல் போன் சந்தை பெரிய அளவில் இந்தியாவில் விரிவடையத் தொடங்கியது பிளிப்கார்ட்டுக்கு பெரிய உதவியாக அமைந்தது. ஷோரூம் விலையை விட குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்வது வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்தது.
ஆன்லைனில் பணம் செலுத்தினால் அது உரிய முறையில் சென்றடையுமா? என்ற பயம் மக்களிடம் இருந்த நிலையில், 2010-ம் ஆண்டு கேஷ் ஆன் டெலிவரியை அறிமுகம் செய்தது பிளிப்கார்ட்.
சரியான சேவையும், இருந்த இடத்தில் இருந்தே பொருட்களை வாங்கும் வசதியும், இந்தியாவில் புதிதாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அது, வரப் பிரசாதமாக அமைந்தது. மக்கள் சிறிது சிறிதாக ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறத் தொடங்கினர். பிளிப்கார்ட் நிறுவனமும் வேகமாக வளரத் தொடங்கியது.
பிளிப் கார்ட் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் - படம்: ட்விட்டர்
பிளிப்கார்ட் நிறுவனத்தை முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக வளர்த்த பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகிய இருவருக்கும் நிறுவனத்தில் தலா 5 சதவீதம் என்ற அளவில் தான் பங்குகள் இருந்தன. முதலீடு செய்ய அவர்களுக்கு அதிகமானோர் தேவைப்பட்டதால் மற்றவர்களின் முதலீட்டை பெற்று நிறுவனத்தை நடத்தினர்.
11 ஆண்டுகளில் இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் முதலிடத்தை பிளிப் கார்ட் பிடித்தது. ஆன்லைனில் விற்காத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான பொருட்களை விற்கும் நிறுவனமாக பிளிப் கார்ட் உயர்ந்துள்ளது.
விழா கால சலுகைகள், விலை குறைப்பு என, சில்லறை வர்த்தகத்தில் உள்ள வர்த்தக நுணுக்கங்களை இங்கும் பயன்படுத்தியதால் பிளிப் கார்ட்டின் வளர்ச்சி அபாரமானது.
இந்திய சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என கடும் முயற்சியில் இறங்கிய அமேசான் நிறுவனத்திற்கு, தனது முன்னாள் ஊழியர்களால் தொடங்கப்பட்ட பிளிப் கார்ட்டே பெரும் போட்டி நிறுவனமானது. இதனால் பிளிப்கார்ட்டை வளைக்கும் நடவடிக்கையில் அமேசான் நேரடியாக இறங்கியது.
பிளிப் கார்ட் நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை வாங்க முன் வந்த அமேசான் நிறுவனம், அதற்காக பல கோடி ரூபாய் பணத்தை தருவதாக பேரம் பேசியது. இந்த நிலையில் தான் மற்றொரு வர்த்தக அரசியல் அமேசானை தாக்கியது.
அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமும், அமேசானுக்கு பெரும் போட்டியாளராக விளங்கும் வால்மார்ட் களத்தில் இறங்கியது. இந்திய சந்தையை அமேசான் பிடித்துக் கொண்டால் உலக அளவில் அதன் வர்த்தகம் பெருகும் என்பதால் இதற்கு தடைபோட முன் வந்தது.
உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையான இந்தியாவில் அமேசான் கொடிகட்டி பறப்பதை விருப்பாத வால்மார்ட், பிளிப் கார்ட்டை வாங்க, போட்டிக்கு விலை பேசியது.
அமேசான் தருவாக அறிவித்த தொகையை விட கூடுதல் தொகை; கூடுதல் பங்குளை வாங்கவும் வால்மார்ட் முன் வந்தது. சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிளிப் கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்க தயார் என அறிவித்தது வால்மார்ட். பிளிப் கார்ட்டின் மொத்த சொத்து மதிப்பு 145 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டது.
பூஜ்யத்தில் இருந்து தொடங்கி சுமார் 1 லட்சத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் வளர்ந்துள்ள பிளிப் கார்ட்டுக்கு இது பெரிய தொகை. எனவே வால்மார்ட்டுக்கு, பிளிப் கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை விற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் பிளிப் கார்ட்டில் தனக்கு மொத்தமாக உள்ள 7 சதவீத பங்குகளையும் சச்சின் பன்சால் விற்று விட்டார். பினய் சிறிய பங்கை வைத்துக் கொண்டு மற்றவற்றை விற்று விட்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பினய் மற்றும் சச்சின் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆயிரம் கோடி ரூபாய் தனிப்பட்ட முறையில் கிடைக்கும் என தெரிகிறது.
இருவரின் உழைப்பை நம்பி பிளிப் கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த அவர்களது நண்பர்கள், வர்த்தக பங்குதாரர்களுக்கும் எதிர்பாராத அளவிற்கு கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும், தாங்களும் சம்பாதித்து, மற்றவர்களை சம்பாதிக்க வைத்துள்ளனர். பிளிப் கார்ட் நிறுவனத்தை விற்று விட்ட இவர்கள் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்கள்? என்பது தான் தற்போதுள்ள கேள்வி.
பிளிப் கார்ட் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் அவர்கள் இனிமேலும் பங்கேற்க வாய்புள்ளதா? அல்லது வேறு ஏதேனும் தொழில் ஈடுபடுவார்களா? என்பதை தெரிந்த கொள்ள மேலும் சில காலம் ஆகலாம்.