Thursday, May 10, 2018


13ம் தேதி வரை இடியுடன் கன மழை தொடரும்;
பருவமழைக்கு நிகராக கொட்டுது கோடை மழை 


dinamalar 10.05.2018

'தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், வரும், 13ம் தேதி வரை, கனமழை கொட்டும்; வட மாவட்டங்களில், நாளை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



தமிழகத்தில், கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 10 நாட்களாக பல்வேறு இடங்களில், கோடை மழை பெய்து வருகிறது. மதுரை, திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், சேலம், நாமக்கல், ஈரோடு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், கடும் வெயில் நிலவுகிறது.

திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 10 நாட்களுக்கு மேலாக, ஏதாவது ஒரு இடத்தில், கன மழை பெய்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன், ஒரே நாளில், சிவகங்கையில், அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பெய்தது. திருச்சி, வால்பாறை, தென்காசி, அம்பை, தேனி, விருதுநகர், மதுரை உள்பட பல இடங்களில், கோடை மழை கொட்டியது. இதில், திருச்சியின் சில பகுதிகளில், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்தது. மேலும், கேரளா, கர்நாடகாவிலும் பல இடங்களில் மழை பெய்கிறது.

இடியுடன் கன மழை :

'கர்நாடகாவின் வட மாவட்டங்கள் முதல், கேரளா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வரை, மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில், கனமழை தொடரும். இன்று முதல், 13ம் தேதி வரை, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மிதமானது முதல், இடியுடன் கனமழை பெய்யும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

'நாளை முதல், வட கடலோர மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், அதிகபட்சம், 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.


'திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, கரூர், திருச்சி மற்றும் பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்' என, வானிலை மையம் கணித்துள்ளது.

திருத்தணியில் உக்கிரம்:

நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னை விமானநிலையம், 38; கரூர் பரமத்தி, திருச்சி, 37; சென்னை, கடலுார், பாளையங்கோட்டை, சேலம், 36; காரைக்கால், மதுரை, நாகை, புதுச்சேரி, 35; பாம்பன், பரங்கிப்பேட்டை, 34; கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, 33; துாத்துக்குடி, 32; குன்னுார், 24; கொடைக்கானல், 20 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024