Friday, May 11, 2018

கர்நாடகா,அடுத்த முதல்வர்,யார்?,15ல் தெரியும்,ஆட்சி,தக்க வைப்பாரா,சித்தராமையா?
பெங்களூரு : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், நாளை நடக்கவுள்ளது. மாநிலம் முழுவதும், ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம், நேற்றுடன் முடிவடைந்தது. கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா, ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது பா.ஜ.,வின் எடியூரப்பாவிடம், முதல்வர் நாற்காலியை பறிகொடுப்பாரா என்பது, வரும், 15ல் தெரிந்து விடும்.




கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையா அரசின் பதவிக் காலம், இம்மாதம், 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை, மார்ச், 27ல், வெளியிடப்பட்டது.

ஜெயநகர் தொகுதி, பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், மாரடைப்பால் இறந்தார். அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள, 223 தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.


பா.ஜ., சார்பில், 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்., சார்பில், 221 பேரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், 200 பேரும் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் உட்பட, மொத்தம், 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அனைத்து தொகுதிகளுக்கும், நாளை காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த மாவட்ட கருவூலங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இன்று மாலை, அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அவை எடுத்துச் செல்லப்படும்.

மாநிலம் முழுவதும், 56 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றும், 600 சாவடிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலில், ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காங்கிரசும், பா.ஜ.,வும், ஒரு மாதத்துக்கு மேலாக, அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன.

பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் சார்பில், கட்சி தலைவர், ராகுல், மூத்த தலைவர், சோனியா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரத்தில் ஈடுபட்டார். தினமும் பொது கூட்டங்கள், பாதயாத்திரை, பேரணி, தெருமுனை பிரசாரங்கள் என, மாநிலம் முழுவதும், தேர்தல்பிரசாரம் களைகட்டியது.

அனல் பறந்த சூறாவளி பிரசாரம், நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனால், சாலைகள், தெருக்கள் வெறிச்சோடின. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், கர்நாடக மாநிலத்தை விட்டு வெளியேறினர். முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை, தேர்தலில், 1.50 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும், 15ல் எண்ணப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது, அன்று தெரிந்து விடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024