Thursday, May 10, 2018

பதின் பருவம் புதிர் பருவமா? 8 - இதுதான் காதல் என்பதா?

Published : 07 Nov 2015 14:15 IST

டாக்டர் ஆ. காட்சன்
 




‘நான் எனது குழந்தைகளை வெளியில் படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உறவு வைத்துக்கொள் என்றே சொல்லி அனுப்புவேன்’ என்று சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கூறினார். அந்த நேரத்தில் அவர் கூறியது எனக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. ஆனால், இப்போது செக்ஸ் சார்ந்து ஏற்பட்டுவரும் மாற்றங்கள், அவர் கூறியதைவிட நெருடலாக இருக்கும் அளவுக்குப் போய்விட்டன.

மேற்கத்தியக் கலாச்சாரத்தால் உலகெங்கும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றங்களில் நம்மில் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய ஒன்று: வளர் இளம்பருவத்தில் கர்ப்பமாதல்!

மேற்கத்திய நாடுகளில் இரு பாலினத்தவரும் 16 அல்லது 17 வயதில் முதன்முறையாகப் பாலியல் அனுபவத்தைப் பெறுகிறார்கள். அங்கு எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே தங்களுடைய முதல் உடலுறவு அனுபவத்தைப் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அது போன்ற விரிவான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும், பல விஷயங்களில் மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் நமது இளைஞர்களுக்கு இந்த அனுபவம் முற்றிலும் புதிது அல்ல.

டீன்ஏஜ் கர்ப்பப் பாதிப்புகள்

இந்தப் பின்னணியில் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் உடலுறவு கொள்ளும்போது, வளர் இளம்பருவத்திலேயே கர்ப்பமடையும் நிலைக்குச் சில பெண்கள் தள்ளப்படுகின்றனர். ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றாமல் உடலுறவு கொள்வதால், பாலியல் நோய்களுக்கும் ஆளாகின்றனர்.

இதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்புகளும், ஆதரவற்று விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் பெருகிவருவது வருந்தத்தக்க உண்மை. தொடர்ச்சியாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வளர்இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். சிலர் அவமானத்தால் தற்கொலைகூடச் செய்துகொள்கின்றனர்.

இங்கிலாந்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பின்படி, தங்களுடைய ஆண் நண்பர் விரும்பியதால்தான் காதல் விளையாட்டுகளுக்கும் உடலுறவுக்கும் ஒப்புக்கொண்டதாக நான்கில் மூன்று பங்கு வளர்இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர். இதில் யாருக்கு முன்புத்தி, பின்புத்தி என்ற வீண் வாதம் தேவையில்லை. முடிவில் அதிகப் பாதிப்புக்குள்ளாவது என்னவோ பெண்கள்தான். எனவே, இதனால் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகரீதியான பின்விளைவுகளைப் பற்றி பெற்றோர்களும், கல்வி மூலமாக ஆசிரியர்களும் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

நிழல் உண்மைகள்

காதல், பாலியல் குறித்த சினிமா காட்சிகள் சமீபகாலமாகக் கூசவைக்கும் அளவுக்கு மாறிவிட்டன. இளம்வயதினர் பாலியல்ரீதியாகக் கெட்டுப்போவதைக் குறித்துக் கருத்து சொல்கிறோம் என்று சொல்லியே, பல படங்களில் பாலியல் உணர்வைத் தூண்டும் காட்சிகளை அதிகமாக்குகின்றனர்.

குடிக்கும் காட்சிகளில் ‘குடி உடல் நலத்துக்குக் கேடு’ என்ற வார்த்தைகளை ஓட விடுவதால் எப்படி மாற்றங்கள் நிகழ்வதில்லையோ, அதுபோலத்தான் இந்த வகை சினிமாக்களும். ஏற்கெனவே, Identity crisis என்றழைக்கப்படும் சுயஅடையாளம் பற்றிய குழப்பத்தில் இருக்கும் வளர்இளம் பருவத்தினர், இளம் வயது காதல் காட்சிகளால் கவர்ந்து இழுக்கப்பட்டு, தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

வெட்கமும் நெளிவும்

‘என் மகன் டி.வி.யில் காதல் காட்சிகள் வரும்போது மிகவும் வெட்கப்படுகிறான், ஒருமாதிரியாக நெளிகிறான், சிரிக்கிறான்' என்று ஒருமுறை கூறினார் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனின் அம்மா. அம்மா உன் மீதும், நீ அம்மா மீதும் வைத்திருப்பது, தாத்தா - பாட்டி உன்னை நேசிப்பதும்கூடக் காதல் - பாசம்தான் என விளக்கம் சொல்லிப் புரிய வைக்கப் பெரிதும் கஷ்டப்பட்டேன்.

இந்த சினிமா காட்சிகள் சிறுவர்களையே இந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்றால், வளர்இளம் பருவத்தினரைப் பாதிக்க வாய்ப்பில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? சினிமாவில் வருவதுதான் உண்மையான காதல் என்று நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசத்தை முழுமையாக உணர முடியாத நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினருக்குப் பெற்றோர்தான் தெளிவான ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஏனென்றால், வளர்இளம் பருவத்தினரின் காதலும் பாலுணர்வும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்.

பிரச்சினையாகும் காதல்

வளர்இளம் பெண்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த ஒரு பெண் மனநல மருத்துவர் சொன்ன சேதி பெரும் அதிர்ச்சி அளித்தது. பெரும்பாலான பெண்கள் சினிமாக்களின் மூலமாகவே காதலைப் பற்றி தெரிந்துகொள்வதாகவும், நிஜ வாழ்க்கையிலிருந்து அதைப் பிரித்தறியத் தெரியாத பக்குவத்தில் அவர்கள் இருப்பதாகவும் கூறினார்.

பெரும்பாலான விடலைக் காதல்கள் காதல் விளையாட்டுகளிலும், சாத்தியமிருந்தால் உடலுறவில் முடிவதாகவும் தெரிவித்தார். ஆண் நண்பர்களிடமிருந்து உடல்ரீதியான தொடுதல்களைத் தவிர்க்கும் பெண்கள் மட்டுமே, இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.

காதலுக்குக் கடிவாளம்

விடலைக் காதல்கள் தொலைநோக்குப் பார்வையுடன் அமைவதில்லை. மாறாக அந்தக் கணத்தில் தோன்றும் உணர்ச்சிகள், இனக்கவர்ச்சியின் அடிப்படையிலேயே அமைகின்றன. வளர்இளம் பருவத்தில் காதல் உணர்வு வருவதைத் தடுக்க முடியாதுதான். ஆனால், அதை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

பெற்றோருடன் அதிக நேரம் செலவழித்தல், ஆண் - பெண் நட்பை ஆரோக்கியமான முறையில் அணுகுதல், எல்லைகளை வரைமுறைப்படுத்துதல், எல்லைகள் மீறப்படும்போது கவனமாக விலகிக்கொள்ளுதல், படிப்பை முதன்மையாகக் கருதுதல் என்பது போன்ற அறிவுறுத்தல்கள் இந்த வயதினருக்கு அவ்வப்போதுத் தேவை.

வாழ்க்கையையும் வாழ்க்கைத் துணையையும் தனியாகத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய வயதும் காலமும் இது கிடையாது. இந்த விடலை காதல்கள் பெற்றோருக்குத் தெரியவரும்போது உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதித்து, வீண் ஆர்ப்பாட்டம் செய்வதைவிட அந்தப் பருவத்தில் உள்ளவர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு தெளிவான ஆலோசனைகள் வழங்கும் பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், இந்த வயதில் எங்கு அதிகக் கரிசனை கிடைக்கிறதோ, அந்தப் பக்கம்தான் மனசு சாயும்.

(அடுத்த முறை: அவசியம் கற்க வேண்டிய பாடம்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024