ஆறாண்டாகியும் முடியாத அகல ரயில் பாதை பணி பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே ரயில் ஓடுமா? Added : ஆக 12, 2018 01:38
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 'மீட்டர் கேஜ்' பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, ஆறு ஆண்டுகளாகியும் முடியா ததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து, பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வரையிலான, 187 கி.மீ., மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, 2012 முதல் நடந்து வருகிறது. இதற்கான, திட்டச்செலவு, 1,700 கோடி ரூபாய்.
இதில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, 73 கி.மீ., பாதை பணி முடிந்து, ஜூலை, 2 முதல், ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே, அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. இதில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 76 கி.மீ., பாதை பணியை விரைவாக முடித்து, ராமேஸ்வரம் - காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - சென்னை இடையே, ரயில் போக்குவரத்தை துவக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பாதையின் நிலை
பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதையில், 12 ரயில் நிலையங்கள் உள்ளன. பெரிய நிலையமான, அதிராம்பட்டினத்தில், 80 சதவீத பணி முடிந்துள்ளது. நடைபாதை மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையங்களின் கட்டுமான பணியும், 80 சதவீதம் முடிந்துள்ளது. நடைபாதைக்கு மண் நிரப்பப்பட்டு, மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.முத்துப்பேட்டையில், ரயில் நிலைய பணி முடிந்து, டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டு உள்ளது.
நடைபாதையில், மண் நிரப்பப்பட்டு, மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது. திருநெல்லிக்காவல் நிலைய கட்டுமான பணி, மந்த கதியில் நடக்கிறது. திருவாரூர் ரயில் நிலையத்தில், இணைப்பு நடைபாதை பணிகள் முடிந்துள்ளன. மின் விளக்குகள் அமைக்கும் பணி முடியவில்லை.
இந்தப் பாதையில், மணலி, ஆலத்தம்பாடி, அம்மனுார், மாவூர் ரோடு, மாங்குடி நிலையங்களின் கட்டுமான பணிகள், மந்த கதியில் நடக்கின்றன. அவற்றில், பாலப் பணிகள் முடிந்துள்ளன. ரயில்வே கேட், சிக்னல் பணி இன்னும் துவங்கவில்லை. பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை இடையே, 19 கி.மீ., ஜல்லி நிரப்பி, தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் - திருநெல்லிக்காவல் இடையே, 13 கி.மீ., மற்றும் திருநெல்லிகாவல் - தில்லைவிளாகம் இடையே, 27 கி.மீ., துாரத்திற்கு, ஜல்லி நிரப்பப்பட்டு, தண்டவாளம் அமைக்கும் பணி, மந்த கதியில் நடக்கிறது.
கடும் அதிருப்தி
இப்பாதையில் உள்ள, லெவல் கிராசிங் கேட்டுகளில் சிக்னல் கட்டட பணி நடந்து வருகின்றன. பாதையில், சிக்னல் அமைக்கும் பணிகள் இன்னும் துவங்கவில்லை. எந்த, 'கேட்'டும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இப்பாதை பணி மந்தகதியில் நடப்பதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலர், பாஸ்கரன் கூறியதாவது:பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், சென்னையில் வசிக்கின்றனர். அவர்கள், ரயிலில் சென்னை செல்ல வேண்டுமெனில், தஞ்சை அல்லது திருவாரூர் சென்று, அங்குஇருந்து செல்ல வேண்டும்.
'நான்கு ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்; ஆறு ஆண்டு களாகியும், பாதை பணி முடியவில்லை.திருவாரூர் - காரைக்குடி மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணியை, முதலில் காரைக்குடியில் இருந்து துவங்காமல், திருவாரூரில் இருந்து துவங்கியிருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால், பட்டுக்கோட்டை வரை பாதை பணி முடிந்து, சென்னை - பட்டுக்கோட்டை வரை ரயில் போக்குவரத்து துவங்கிஇருக்கும். பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தால், ரயில்வேக்கு வருவாய் கிடைத்திருக்கும்; மக்களுக்கும், பயண செலவு குறைந்து இருக்கும்.தற்போது, 'பாதை பணி டிசம்பருக்குள் முடிக்கப்படும்' என, அதிகாரிகள் கூறுகின்றனர். பணிகள் மந்தகதியில் நடப்பதாலும், இனி, மழைக்காலம் என்பதாலும், வேலைகள் தாமதமாக வாய்ப்புள்ளது.
பணிகளை முடுக்கிவிட்டு, 2019 மார்ச் முதல், ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடியில் இருந்து, திருவாரூர் வழியாக, சென்னைக்கு ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
'கடவுளுக்கே வெளிச்சம்'
மல்லிபட்டினம், அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை மீனவர்கள் கூறியதாவது:சேதுபாவா சத்திரம், மல்லிபட்டினம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில், மீன், இறால், கருவாடு வியாபாரிகள் அதிகம் உள்ளனர். மீட்டர் கேஜ் பாதையில், ரயில் போக்குவரத்து இருந்தபோது, ராமேஸ்வரம் - சென்னை இடையே இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்; முக்கிய ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட்ட பயணியர் ரயில்களில், மீன், இறால், கருவாடு, தேங்காய், நெல், அரிசி போன்றவை, அதிகம் அனுப்பப்பட்டு வந்தன.
இப்பாதை மூடப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும் பணி முடியாததால், பொருட்களை சென்னைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல, சரக்கு லாரிகள் மற்றும் ஆம்னி பஸ்களில் கூடுதல் செலவாகிறது. இந்த பாதையில், ரயில் ஓடினால், வியாபாரிகள் அதிகம் பயன்பெறுவர். ஆனால், எப்போது ரயில் ஓடும் என்பது, அந்த கடவுளுக்கே வெளிச்சம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
'இது தான் நவீன தொழில்நுட்பம்'
''காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே உள்ள, 36 ரயில்வே கேட்களில், நான்கு கேட்களில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். மற்ற, 32 கேட்டுகளை திறந்து மூட, ரயிலிலேயே ஊழியர்கள் வருகின்றனர். அவர்கள் ரயில் அந்த இடத்தை அடைந்ததும் இறங்கி, ரயில்வே கேட்டை மூடி, ரயில் சென்றதும், மீண்டும் திறந்து விடுகின்றனர்.
''இந்த காட்சிகளை பதிவு செய்யும் சிலர், சமூக வலைதளங்களில் பரப்பி, 'இந்தியன் ரயில்வேயின் நவீன தொழில்நுட்பம் இது தான்' என, கிண்டலடிப்பது வேதனையாக உள்ளது. கேட்களில், தேவையான ஊழியர்களை நியமித்திருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. இனியாவது, ரயில்வே நிர்வாகம், இந்த பிரச்னையை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும்.
ஏ.வி.காந்தி, அரிமா சங்க மாவட்ட தலைவர், தஞ்சாவூர்
'மாப்பிள்ளை ரயில்'
பேராவூரணி ரயில் பயணியர் சங்க தலைவர் பழனிவேல், செயலர் கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:காரைக்குடி - பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே, ஜூலை, 2ல் இருந்து, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு, 3:15 மணி நேரமாகிறது. ஆனால், பஸ்சில், 2:15 மணி நேரத்தில் செல்ல முடியும்.
ரயில் வேகம் குறைத்து இயக்கப்படுவதால், 'மாப்பிள்ளை அழைப்பு' ரயில் என, பயணியர் கிண்டலடிக்கின்றனர். எனவே, கட்டணம் குறைவாக இருந்தும், பயண நேரம் அதிகம் என்பதால், இந்த ரயிலில் செல்ல பயணியர் ஆர்வம் காட்டவில்லை.ரயிலின் வேகத்தை அதிகரித்து, தினமும் ரயிலை இயக்கவும், பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணியை விரைவாக முடிக்கவும் வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் அலுவலகம் முன், போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
ஒரு நாள் மழைக்கே மின் தடை
சீசனை சமாளிக்குமா வாரியம்?
- நமது நிருபர் -