Sunday, August 12, 2018

தேசிய செய்திகள்

ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது : ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு



ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை, அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரத்து செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 05:30 AM
புதுடெல்லி,

டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்தின் கீழ், ரெயில் விபத்தில் உயிரிழக்கும் பயணிகளின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது.

இதைப்போல ஊனமடையும் பயணிகளுக்கு ரூ.7½ லட்சமும், காயமடைந்தால் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் உடலை எடுத்துச்செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கைவிட ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது என ரெயில்வேத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக இன்சூரன்ஸ் திட்டம் இனிமேல் விருப்ப தேர்வாக அமைகிறது. அதாவது இன்சூரன்ஸ் தேவை என்றால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அதை தேர்வு செய்ய வேண்டும்.

இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண விவரம் குறித்து இன்னும் சில நாட்களில் ரெயில்வேத்துறை அறிவிப்பு வெளியிடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக டெபிட் கார்டு மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பதிவு கட்டணத்தை ரெயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024