மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண் ரத்து செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல்
பதிவு செய்த நாள்: ஆக் 12,2018 01:57
சென்னை:மருத்துவ தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய, விதிகளில் திருத்தம் கொண்டு வர, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லுாரி மாணவர்கள், தோல்வியடைந்த பாடத்தில், தங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவும், மருத்துவ படிப்பை முடிக்க அனுமதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, ஐந்து மதிப்பெண்கள் வரை, கருணை அடிப்படையில் வழங்கலாம்; அதுவும், கருணை மதிப்பெண் வழங்குவது, பல்கலையின் தனிப்பட்ட உரிமை. அந்த மாணவன், ஒரு பாடத்தில் மட்டுமே தோல்வியடைந்து, மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு முறைக்கு மேல் தேர்வு எழுதுபவர்களுக்கு, கருணை மதிப்பெண் பெற உரிமை இல்லை.கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி, உரிமை கோர முடியாது.
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மருத்துவ மாணவனிடம், மதிப்பெண் வழங்கியவரின் குடும்பத்தினரை, சிகிச்சைக்கு செல்லும்படி கூற வேண்டும். மருத்துவ கவுன்சில் விதிமுறைகள், சட்டத்தை மீறியதாக இருந்தால் ஒழிய, அதில் மாற்றம் செய்ய முடியாது.எனவே, கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி, பல்கலையிடம், மாணவர்கள் உரிமை கோர முடியாது. செய்முறை தேர்வுக்கும், கருணை மதிப்பெண் வழங்க முடியாது.
அதனால், கருணை மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்பது நியாயமற்றது.டாக்டர்கள், மருத்துவ மனைகள், காளான்கள் போல பெருகி வருகின்றன. உண்மையான டாக்டர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை, நோயாளிகளுக்கு ஒரு நாள் ஏற்படும். எனவே, டாக்டர்களாக பதிவு செய்வதை, அவ்வப்போது, மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் மற்றும் இதர அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அப்போது தான், முறையான டாக்டர்கள் வருவர்.
கருணை மதிப்பெண் வழங்குவதை ரத்து செய்ய, விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. கருணை மதிப்பெண் வழங்குவது, பல்கலையின் தனிப்பட்ட உரிமை தான் என, விதிகளில் தெளிவாக கூறியிருந்தாலும், தனிப்பட்ட உரிமை என்ற வார்த்தையை, மாணவர்கள் தவறாக பயன்படுத்த முயற்சிப்பர்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment