அமெரிக்காவில் படிப்பு காலம் முடிந்து தங்குவது... சட்டவிரோதம்! : புதிய குடியேற்ற கொள்கையால் மாணவர்கள் அதிர்ச்சி
மாற்றம் செய்த நாள்: ஆக் 12,2018 00:00
மும்பை: வெளிநாட்டு மாணவர்களுக்கான, அமெரிக்க அரசின் குடியேற்றக் கொள்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. 'படிப்பு முடிந்தவுடன், மாணவர் அந்தஸ்து பறிக்கப்படும்; அதற்கு மேல் அமெரிக்காவில் இருந்தால், சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கருதப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது; இது, இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இதில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில், இந்தியாவும் உள்ளன. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, 1.86லட்சம் இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் படிக்கின்றனர்.அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், 2016ல் பதவியேற்ற பின், அமெரிக்காவின் குடியேற்ற கொள்கை மற்றும் விசாவில், அதிக கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.
அனுமதி :
இதனால், இந்திய மாணவர்களும், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அமெரிக்க அரசின், வெளிநாட்டு மாணவர்களுக்கான, புதிய குடியேற்ற கொள்கை, ஆக., 9ல் வெளியானது. இது, இந்தியா உட்பட அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு, 'மாணவர் அந்தஸ்து' வழங்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு,
அமெரிக்காவில் தங்குவதற்கான, 'விசா'வும் வழங்கப்படுகிறது.படிப்பு முடிந்த பின், விசா காலம் முடியும் வரை, அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க, முந்தைய குடியேற்ற கொள்கையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஆனால், அமெரிக்க அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய குடியேற்ற கொள்கையில், பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அமெரிக்காவில் தங்குவதற்கான விசா காலம் இருந்தாலும், படிப்பு முடிந்தவுடனே, அந்த மாணவருக்கு வழங்கப்பட்ட மாணவர் அந்தஸ்து, ரத்து செய்யப்படுகிறது. அத்துடன், அவர், அமெரிக்காவில்தங்கிஇருப்பது, சட்ட விரோதமாக கருதப்படும்.அமெரிக்காவில், 180 நாட்களுக்கு மேல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள், அதன்பின், அமெரிக்காவில் மீண்டும் நுழைய, 3 - 10 ஆண்டு வரை தடை விதிக்கப்படும் என, புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவில், ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர், ஒரு வாரத்தில், குறிப்பிட்ட மணி நேரம், வகுப்புக்கு வந்திருக்க வேண்டும் என, விதி உள்ளது. அப்போது தான், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
குடியுரிமை :
கல்வி நிறுவனம் விதித்துள்ள, குறைந்தபட்ச வருகை நேரத்தை பூர்த்தி செய்யாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், படிப்பு முடிந்து விட்டால், அவர்களின், மாணவர் அந்தஸ்து பறிக்கப்பட்டு விடும். அதனால், அவர்களால், மீண்டும் தேர்வை எழுத முடியாமல் போய்விடும். எனினும், 'படிப்பு முடிந்து மாணவர் அந்தஸ்தை இழக்கும் மாணவர்கள், மீண்டும் அந்தஸ்து வழங்க கோரி, ஐந்து மாதத்துக்குள் மனு கொடுக்க வேண்டும். 'மனு மீதான விசாரணை முடியாவிட்டால், அவர்கள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்' என, அமெரிக்க குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே, விசா வழங்குவதில், அதிபர் டிரம்ப் காட்டும் கெடுபிடியால், அமெரிக்கா சென்று படிக்கும், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
குறைய வாய்ப்பு :
இந்தியாவிலிருந்து, 2016-ல், 65 ஆயிரத்து, 257 மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்க சென்றனர். ஆனால், 2017-ல், 47 ஆயிரத்து, 302 மாணவர்கள் மட்டுமே, அமெரிக்காவிற்கு சென்றனர்.அதேபோல், சீனாவிலிருந்து, 2016-ல், 1.52 லட்சம் மாணவர்கள், அமெரிக்கா சென்ற நிலையில், 2017-ல், 1.16 லட்சம் மாணவர்களே சென்றனர். தற்போது, அமெரிக்காவின் புதிய குடியேற்ற கொள்கையால், அமெரிக்கா சென்று படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
'உரிமைகள் பறிபோகும்' :
அமெரிக்காவின் புதிய குடியேற்ற கொள்கை குறித்து, நியூயார்க்கில் செயல்படும், சட்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாக பங்குதாரர், டி.மேத்தா கூறியதாவது:கல்வி மையத்துக்கு மாணவர்கள் வரும் நேரத்தை கணக்கிட்டு பதிவிடுவதில், தவறுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவர். எப் - 1 விசாவின் படி, படிப்பு முடிந்து, 60 நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.பணி நேரம் கணக்கிடுவதில் ஏற்படும் தவறால், இவர்கள், ௬௦ நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, அவர்கள், சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவர். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும், அதன் மீதான விசாரணை முடிய, நீண்ட காலமாகும். இதனால், அமெரிக்காவுக்கு அவர்களால் மீண்டும் வர முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது, அவர்களின் வாழ்க்கையையே பாதித்துவிடும்.அமெரிக்காவின் புதிய கொள்கை, மாணவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment