Sunday, August 12, 2018

மாநில செய்திகள்

நாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை




இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நேற்று மீண்டும் நிரம்பியதால், அணையில் இருந்து வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் நாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 05:45 AM மேட்டூர்,

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த மாதம் நிரம்பின.

இதனால் அந்த அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து, கடந்த மாதம் 23-ந் தேதி பகல் 12 மணிக்கு அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணையின் 84 ஆண்டுகால வரலாற்றில் 39-வது ஆண்டாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் அவற்றில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், கடந்த இரு வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக குறைந்தது.

இந்த நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை மீண்டும் தீவிரம் அடைந்தது. இதைத்தொடர்ந்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் மீண்டும் நிரம்பியதால், அவற்றில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 233 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருபுறமும் கரைகளை தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. நேற்று இந்த உபரிநீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 44 ஆயிரத்து 519 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல் அருவி பகுதி 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்ததை அடுத்து, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் 116.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 119 அடியாக உயர்ந்தது. பின்னர் பகல் 12 மணியளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பியது. நேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர், உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் அணையையொட்டி உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி நீரும், ஒரு லட்சத்து ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் 16 கண் பாலம் வழியாக உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 23-ந் தேதி முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய நிலையில், இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி உள்ளது.

அணையின் வரலாற்றில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு, 2005-ம் ஆண்டில் 4 முறையும், கடந்த 2007-ம் ஆண்டில் 5 முறையும் மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதையொட்டி, திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் ஆகியோர் நேரில் வந்து அணையை பார்வையிட்டனர்.

நீர்வரத்து அதிகரித்ததையொட்டி, அணை நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி, அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அணையின் வலதுகரை, இடதுகரை, 16 கண் பாலம் உள்பட முக்கிய பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணை மீண்டும் நிரம்பியதால், 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று அங்கு வந்தனர்.

16 கண் பாலத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும், பாதையையொட்டி உள்ள 2 வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி அங்கு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்கமாபுரி பட்டணம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மூலம் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...