Sunday, August 12, 2018


புல்லட் ரயில்! 


சென்னை - மும்பை உட்பட 6 புதிய வழித்தடங்கள் தேர்வு
சாத்தியங்களை ஆய்வு செய்வதாக லோக்சபாவில் தகவல் 


dinamalar 12.08.2018

புதுடில்லி: சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையில், ஆறு வழித்தடங்களில், புல்லட் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக, லோக்சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது.



மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை, குஜராத்தின் ஆமதாபாத் இடையே, ஜப்பான் நாட்டின் உதவியுடன், புல்லட் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டம், 2022 ஆகஸ்டில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.மும்பை - ஆமதாபாத் இடையிலான ரயில் பயணத்துக்கு, தற்போது, ஏழு மணி நேரம் ஆகிறது. புல்லட் ரயில் மூலம் செல்வதற்கு, இரண்டு மணி நேரமே ஆகும்.மும்பை - ஆமதாபாத் இடையே, புல்லட் ரயில் திட்டத்துக்கு, ஜே.ஐ.சி.ஏ., எனப்படும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஏஜன்சி, 88 ஆயிரம் கோடி ரூபாயை, குறைந்த வட்டி கடனாக அளிக்கிறது.

ரூ.1.10 லட்சம் கோடி :

இந்த தொகையை, 50 ஆண்டுகளில், 0.1 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தினால் போதும். கடனுக்கான முதல் தவணையை, 15 ஆண்டுகளுக்கு பின் செலுத்தத் துவங்கலாம். இந்த திட்டத்துக்கு, 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களை, புல்லட் ரயில் சேவை மூலம் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இதன்படி, டில்லி - மும்பை; டில்லி - கோல்கட்டா; மும்பை - சென்னை ஆகிய வழித் தடங்களில் புல்லட் ரயில் திட்டத்தை துவக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

திட்டம் :

மேலும், டில்லி - நாக்பூர் - சென்னை; மும்பை - நாக்பூர் - கோல்கட்டா; சென்னை - பெங்களூரு - மைசூரு ஆகிய வழித்தடங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.'ஆய்வுகள் முடிந்த பின், புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும்' என, அரசு அதிகாரிகள் கூறிஉள்ளனர்.முக்கிய நகரங்களை புல்லட் ரயில் மூலம் இணைக்கும் திட்டம் தொடர்பாக, பிரான்ஸ், ஸ்பெயின், சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியை, மத்திய அரசு நாடியுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே ஸ்டேஷன்களில், 'டிஜிட்டல் மியூசியம்':

சமீபத்தில், ரயில்வே டிவிஷனல் மேலாளர்கள் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரயில்வே வாரிய இயக்குனர், சுப்ரதா நாத், 8ல், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும், 22 ரயில்வே ஸ்டேஷன்களில், சுதந்திர தினத்தன்று, டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளன.ரயில்வே ஸ்டேஷன்களின் சுவர்களில், டிஜிட்டல் அருங்காட்சியகங்களை எளிதில் அமைத்து விட முடியும். எனவே, டிஜிட்டல் அருங்காட்சியகங்களை அமைக்க, முதலீடுகள் தேவை இல்லை. ரயில்வே அருங்காட்சியகத்தில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வரலாற்றையும், நடப்பு நிலவரங்களையும் காட்சிப்படுத்த முடியும்.டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் அமையவுள்ள, 22 ரயில்வே ஸ்டேஷன்களில், 'டிஜிட்டல் மல்டிமீடியா' திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹவுரா, லக்னோ, வாரணாசி, ரேபரேலி, டில்லி, ஜெய்ப்பூர், ஈரோடு, கோவை, செகந்திராபாத், விஜயவாடா, பெங்களூரு ஆகிய ஸ்டேஷன்களில், டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் துவக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024