Sunday, August 12, 2018

பணி பதிவேடு தராமல் 2 ஆண்டுகளாக அலைக்கழிப்பு அரசு மருத்துவக்கல்லூரி நர்ஸ் தற்கொலை முயற்சி : மனிதாபிமானமற்ற அதிகாரிகளே காரணம் என கடிதம்


2018-08-12@ 02:45:05

திருவண்ணாமலை: பணி பதிவேடு தராமல் அதிகாரிகள் 2 ஆண்டுகளாக அலைக்கழித்ததால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நர்ஸ் தற்கொலைக்கு முயன்றார். திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (46). இவரது மனைவி மீரா (38). இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், அரசு பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும் மீராவுக்கு ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. இவருக்கு பிறகு பணியில் சேர்ந்த நர்ஸ்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மீரா, தனது பணி பதிவேட்டில் தான் பணியாற்றிய விபரங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய திருவண்ணாமலை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகினார்.

ஆனால், அதிகாரிகள் சரிவர பதில் தெரிவிக்காமல் மீராவை அலைக்கழித்ததுடன், உங்களது பணி பதிவேட்டை சென்னை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அங்கு சென்று விசாரித்ததில் பணி பதிவேடு எங்களுக்கு வரவில்லை என அதிகாரிகள் கூறினார்களாம். கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கும், சென்னைக்கும் மீரா அலைக்கழிக்கப்பட்டார். இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று முன்தினம், உடன் பணிபுரியும் நர்சுக்கு போன்செய்து, தான் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மீராவின் கணவர் செல்வராஜூக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது மீரா மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மீரா மயங்கி கிடந்த அறையில், சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் இயக்குனருக்கு எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில், 2 ஆண்டுகளாக பணி பதிவேடு தேடி அங்கும்இங்கும் நடந்து கொண்டிருக்கிறேன். எனது பணி பதிவேடு உள்ளதா, இல்லையா? என்பது தெரியவில்லை. என்னை யாரும் மனிதாபிமானத்தோடு நடத்தவில்லை. அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனு கொடுத்தும் பலனில்லை. எனது தற்கொலையிலாவது நர்ஸ் சமூகத்திற்கு விடிவு பிறக்கட்டும். எனது மரணத்திற்கு மருத்துவத்துறை அதிகாரிகளே காரணம் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தண்டாரம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

HC orders govt to issue recognition to nursing colleges

HC orders govt to issue recognition to nursing colleges  16.11.2024 TIMES OF INDIA BHOPAL. Bhopal/Jabalpur : A division bench of MP high cou...