பித்ரு தோஷமா? கவலை வேண்டாம்! மஹாளய பக்ஷம் வருகிறது!
By - அஸ்ட்ரோ சுந்தரராஜன் | Published on : 09th September 2019 06:24 PM
வரும் சனிக்கிழமை (14/9/2019) முதல் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகியிருக்கிறது. இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்பூவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி கூடுதுரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், திருவள்ளூர் வீரராகவர் ஆலயம் மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் சிராத்தங்கள் செய்வது சிறப்பு.
மஹாளய பக்ஷம்
மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பக்ஷம். "பக்ஷம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15 நாட்கள் (சில சமயங்களில் 14 அல்லது 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பக்ஷம். இது புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மஹாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மஹாளய பக்ஷ காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை.
இறந்தவர்கள் பித்ருக்களாவது எப்படி?
சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகத்தான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீரூற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்குப் பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது.
சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன. பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள். இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர்.
இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்பத் தந்துவிடுகிறார். நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
முன்னோர்களின் ஆசி
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழத் துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள்
நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான தக்ஷிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீர்வதிக்கப் பூலோகத்திற்கு வருவதாகவும் பின் உத்தராயண புண்ணிய காலத்தில் தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். பித்ரு தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ரு தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம் என்பதும், பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும் என்பதும், பித்ரு கடன் செய்யாமல் இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை.
இந்த மஹாளய பக்ஷத்தில் பதினைந்து நாட்களிலும் பூலோகத்திற்கு தங்கள் சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்றுகொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.
வசு ருத்ர ஆதித்யர்கள்
பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ், வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவிப் பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.
பித்ரு வழிபாடு
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர். நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது. ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம் என பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், கருடபுராணம், பவிஷ்ய புராணம் போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன.
ஷன்னவதி தர்ப்பணம்
ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ணிய கால தர்பணம், வருஷ ஸ்ரார்தம், மஹாளய பக்ஷம் என 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அதனை ஷன்னவதி தர்பணம் என சிறப்பாக கூறுகிறது. இன்று வேலை மற்றும் தொழில், வாழும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 96 நாட்களும் தர்ப்பணம் செய்வது அனைவருக்கும் இயலாத காரியமாகும் என்றாலும் ஓய்வு பெற்ற பிறகு செய்யலாம். என்றாலும் முக்கியமான தர்ப்பணங்களையாவது தவறாமல் செய்வது நல்லது, அந்த வகையில் தக்ஷிணாயனத்தில் வரும் மஹாளய பக்ஷமும் முக்கியமான ஒன்றாகும்.
இறந்தவர்களுக்கும் எள்ளுக்கும் உள்ள தொடர்பு
சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு (எலும்போடு சேர்ந்த கட்டுமானம்) சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தானியமான எள்ளை பித்ரு சிரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ருரூபமாகவும் பார்க்கிறது. நமது வேதங்கள். மேலும் எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்குப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது நமது வேதம்.
பித்ரு தோஷம்
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் அக்னி ஸ்வரூபமாகவும் பிராமண ஸ்வரூபமாகவும் பித்ருக்களை வரித்து அக்னிக்கும் பிராமணர்களுக்கும் ஒரே நேரத்தில் போஜனமளித்து பின் பிண்ட ரூபத்தில் இருக்கும் பித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்ப்பணம் செய்வதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதேதோ காரணங்களால் கொலை அல்லது தற்கொலை மற்றும் விபத்தினால் அகால மரணம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி செயற்கையான முறையில் இறந்தவர்ளுக்கு முறையாக கர்ம காரியங்களைச் செய்து அந்த ஆத்மாவை கரை சேர்ப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்தம் ஆகியன செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் விடும்போது அந்த ஆத்மாக்கள் நற்கதி அடையமுடியாமல் பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்திர தோஷங்களாக வடிவெடுத்து, நமது பிறக்கும் நேரத்தில் ராகு மற்றும் கேதுவாக திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன.
அதனால் ஜாதகருக்கும் அவரின் சந்ததியினருக்கும் .திருமணம் தடை, குழந்தையின்மை, தெய்வானுக்ரஹம் இல்லாத நிலை, பூர்வீக சொத்துக்களில் பிரச்சனை மற்றும் வில்லங்கம், தீராத நோய், அடிக்கடி சண்டை போன்றவை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எத்தனை கோயில்களுக்குச் சென்று அன்னதானம், ஆடை தானம், பசு தானம், ருத்ராட்ச தானம், தண்ணீர் தானம், விளக்கு தானம், கும்பாபிஷேகம் செய்தாலும் பலன் கிடைக்காது. நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச்சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.
ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?
1. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணியம் ஆகும். அதே ஐந்தாமிடம் தான் அவர்களுடைய சிந்தனைஸ்தானம், புத்திரஸ்தானம், குல தெய்வஸ்தானம், மன உறுதி ஸ்தானம் ஆகும்.இங்கே ராகு அல்லது கேது இருக்க ஒரு ஆணோ பெண்ணோ பிறந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.
2. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.
3. சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரஹண தோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.
4. ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ருஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பந்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.
பித்ரு தோஷ பரிகாரங்கள்
1. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.
2. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். திருப்பூவணத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்கிறார்கள். காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு ). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.
3. திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.
இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.
4. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பனம், ஸ்ரார்தம் செய்து
"தேவதாப்ய: பித்ருப்ய: மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" என்றும் யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ: | தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை:
எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
காருண்ய பித்ருக்கள்
”மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு” என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக்கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மஹாளய பக்ஷ விரத நாட்களில் தான். இவர்கள் 'காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''.
புனிதமான மஹாளய பக்ஷத்தில், முன்னோரையும் மறைந்த தாய், தந்தையர் மட்டுமின்றி காருண்ய பித்ருக்களையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தைச் சேர்க்கும் என்பது நம்பிக்கை.
இலவச சேவை
இந்த மஹாளய பக்ஷ தினங்களில் தங்கள் முன்னோர்களின் திதி எந்த நாளில் வருகிறது என அறிய வேண்டுமா? தங்கள் முன்னோர்களின் இறந்த தேதி, இறந்த நேரம் ஆகிய விவரங்களை எமது வாட்ஸ் அப் எண்ணிற்கு (9841595510) அனுப்பிவைத்தால் உங்களுக்கு முன்னோர்களின் திதி விவரங்கள் அனுப்பிவைக்கப்படும்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510