வரும் கல்வியாண்டு முதல்.. டிகிரி படிக்க இனி 3 வருசம் , 4 வருசம் தேவையில்லை.. யுஜிசி மேஜர் அறிவிப்பு
By Velmurugan P
Published: Thursday, November 14, 2024, 17:53 [IST]
சென்னை: யுஜிசி சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நடந்தது . இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய யுசிஜி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று கூறினார். தேசிய கல்விக் கொள்கை (National Policy on Education) கல்வியை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு அவ்வப்போது உருவாக்கி வருகிறது. அந்த வகையில் முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு உருவாக்கியது. அடுத்ததாக இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டது. அந்த கல்வி கொள்கை தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டது.
இந்த கல்வி கொள்கை இந்தியா முழுவதும் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.. இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.ஆனால் இதில் மும்மொழி கொள்கை இருப்பதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. அதேநேரம் மும்மொழி கொள்கை தவிர மற்ற பல்வேறு விஷயங்களை அமல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் இன்று நடந்தது. இதில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்பட கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கை யுஜிசி தலைவர் எம்.ஜெகதிஷ் குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நமது இந்தியா மிக வலிமையான, தரமான உயர்கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இத்தகைய கல்வி நிறுவனங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு உறுதுணையாக உள்ளது. இன்றைக்கு தொழில்நுட்ப ரீதியாக மிக வேகமாக நாம் வளர்ந்து வருகிறது. இதற்கு இங்குள்ள இளைஞர்களே காரணம். 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அதற்கு நாம் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் வேகமாக முன்னேற வேண்டியது அவசியம் ஆகும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சமூக, பொருளாதார ரீதியில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இத்தகைய சூழலில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்வது என்பது உண்மையிலேயே பெரிய சவாலான விஷயம் தான். தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் சேர்ந்து கல்வி பயிலும் வகையில் பிரதமரின் வித்யா லட்சுமி கல்விக்கடன் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் ஏழை மாணவர்கள் எந்தவித பிணையும் இன்றி வட்டியில்லா கடன் பெற முடியும். இத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். உயர்கல்வியில் சேர ஆங்கில மொழி பிரச்சினை பெரும்பாலான மாணவர்களுக்கு பெரும்தடையாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு தாய்மொழியில் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆங்கிலத்தை தகவல் தொடர்புக்காக ஒரு மொழிப்பாடமாக படித்தாலே போதும். உலகில் முன்னேறிய நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் உயர்கல்வியை வழங்கி வருகின்றன. மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கு திறன் சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தான் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளிலும் நாம் சிறந்து விளங்க வேண்டியது அவசியம் ஆகும்.
சில மாணவர்கள் ஏதேனும் ஒரு தொழில் துறையில் சிறந்து விளங்குவார்கள். அப்படிப்பட்டவர்களின் தொழில் அறிவை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் படிப்பில் தொழில் அறிவுக்கு குறிப்பிட்ட கிரெடிட் வழங்கலாம் என்று யுஜிசி கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறோம். அதேபோல், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. இதன்படி மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். அதேபோல், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்தும் படிக்கலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வர உள்ளது" இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment