பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு... வரவேற்பு! மருத்துவப் பணியாளர்கள் தரம் உயரும் என எதிர்பார்ப்பு
Added : மார் 27, 2021 22:08
மருத்துவப் பணியாளர்களின் படிப்பு மற்றும் சேவை தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள, மருத்துவப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், 25ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
பூர்த்தி செய்யவில்லை
இதில், மருத்துவப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கும் சட்ட மசோதா, அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.மருத்துவத் துறையில் உள்ள டாக்டர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை தவிர, இதர மருத்துவப் பணியாளர்கள் ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளனர். அவர்களின் திறன்களுக்கு ஏற்ப, தரப்படுத்தப்படுவதும் இல்லை. மருத்துவத் துறையில், 10 ஆயிரம் பேரில், 29 சதவீதம் பேர், மருத்துவப் பணியாளர்கள் இருக்கவேண்டும். எனினும், நம் நாட்டில், 10 ஆயிரம் பேரில், 16 சதவீதம் பேர் மட்டுமே, மருத்துவப் பணியாளர்களாக உள்ளனர்.உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட, 22.8 சதவீத குறைந்தபட்ச மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையையும், நம் நாடு இதுவரை பூர்த்தி செய்யவில்லை.
பரிசோதனை
மருத்துவப் பணியாளர்களின் விகிதாச்சாரம் மற்றும் தகுதி உள்ளிட்டவற்றால், நம் நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன.இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் தான், மருத்துவப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கும் சட்ட மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும் நடைமுறைகளுக்கு உதவியாக இருக்கும் மருத்துவப் பணியாளர் கள், இந்த மசோதாவால் பயனடைவர்.
இதில், 'பிசியோதெரபி, ஆக்குபேஷ்னல் தெரபி, ஆப்தால்மிக் சைன்சஸ், நியூட்ரீஷன் சைன்சஸ், மெடிக்கல் லேபரேட்டரி, மெடிக்கல் ரேடியாலஜி, இமேஜிங், தெரபெடிக் டெக்னாலஜி.'மெடிக்கல் டெக்னாலஜி, சர்ஜிக்கல் அனஸ்தீசியா சார்ந்த தொழில்நுட்பம், கம்யூனிட்டி கேர், பிஹேவியரல் ஹெல்த் சயின்சஸ், ஹெல்த் இன்பர்மேஷன் மேனேஜ்மன்ட் மற்றும் ஹெல்த் இன்பர்மேட்டிக்ஸ்' உள்ளிட்ட மருத்துவ துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளடங்குவர்.இந்த பிரிவுகளில் பணியாற்றுவோரின் படிப்பு மற்றும் சேவை தரத்தை உயர்த்த, இந்த மசோதா வழிவகுக்கும். இதற்காக, தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
அனுமதி
இந்த ஆணையத்தில், தலைவர், துணை தலைவர் அங்கம் வகிப்பர். இவர்களைத் தவிர, மத்திய அரசு துறைகளின், இணை செயலர்கள் ஐந்து பேர், உறுப்பினர்களாக இருப்பர்.மேலும், சுகாதார சேவைகள் இயக்குனரகத்தின் பிரதிநிதி ஒருவர், டில்லி எய்ம்ஸ், ஏ.ஐ.ஐ.பி.எம்.ஆர்., எனப்படும், அகில இந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின், மூன்று துணை இயக்குனர்கள் அல்லது மருத்துவ கண்காணிப்பாளர்கள், சுழற்சி முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களைத் தவிர, மாநில கவுன்சில்களில் இருந்து, பகுதிநேர உறுப்பினர்களாக, 12 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.மருத்துவ பணியாளர்களின் கல்வி மற்றும் சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கைகளையும், வழிமுறைகளையும், இந்த ஆணையம் வகுக்கும்.
இதைத்தவிர, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்காகவும், 'ஆன்லைன்' பதிவேட்டின் பராமரிப்பு, கல்வி, ஊழியர்களின் தகுதிகள், தேர்வுகள், பயிற்சிகள், கட்டணம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் தரத்தையும், இந்த ஆணையம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆறு மாதங்களுக்குள், அனைத்து மாநில அரசுகளும், இதற்காக தனி மருத்துவ கவுன்சில்களை உருவாக்கும். மாநிலத்தில் மருத்துவ பணியாளர் தொடர்பான புதிய நிறுவனங்கள் அமைப்பது, படிப்புகளை சேர்ப்பது மற்றும் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது என அனைத்துக்கும், இந்த கவுன்சிலிடம் இருந்து அனுமதி பெறவேண்டியது கட்டாயம்.
அபராதம்
தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தி குற்றங்கள் செய்வோர், சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறுவோர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கவும், இந்த மசோதா வழிவகுக்கிறது. விதிமீறல்களில் ஈடுபடு வோருக்கு, ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை விதிக்கப்படும் அல்லது
5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.இந்த மசோதாவால், இந்தியர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் சிகிச்சை பெறும் வெளிநாட்டினரும் பயனடைவர் என்பதால், இதை, அனைத்து தரப்பினரும் வரவேற்றுஉள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -