3வது கொரோனா தடுப்பூசி:'கோவாவாக்ஸ்' செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டம்
Updated : மார் 27, 2021 23:44 | Added : மார் 27, 2021 22:35
புதுடில்லி :நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிராக, ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது தடுப்பூசி தயாராகி உள்ளது. 'கோவாவாக்ஸ்' என, பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை துவங்கியுள்ளது; இதை, வரும் செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு எதிராக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகள் தயாரித்துள்ளன.நம் நாட்டில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் 'ஆஸ்ட்ராஜெனகா' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற தடுப்பூசியை மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'சீரம் இந்தியா' நிறுவனம் தயாரித்துள்ளது.தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.
அனுமதி
இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜன., 16ம் தேதி முதல், மக்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணிதுவங்கியது.முதலில், மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, பிப்., முதல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வரும், ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும், சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. பல நாடுகள், இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளை வாங்கி வருகின்றன,
இந்நிலையில், சீரம் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக, இரண்டாவது தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது பற்றி, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது:கோவிஷீல்டு தடுப்பூசி நல்ல பலன் அளித்து வருகிறது. தற்போது, ஒரு மாதத்துக்கு, 7 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகள் தயாரித்து வருகிறோம்.
அடுத்த மாதம் முதல், இது, 10 கோடியாக உயர்த்தப்படும். அதனால், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும், அமெரிக்காவின், 'நோவாவாக்ஸ்' மருந்து நிறுவனத்துடன் இணைந்து, சீரம் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக, இரண்டாவது தடுப்பூசியை தயாரித்துள்ளது; இதற்கு, கோவாவாக்ஸ் என, பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட, பிரிட்டன் மற்றும் ஆப்பிரிக்க மக்களுக்கு செலுத்தி, சோதனை நடத்தப்பட்டது. இதில், 89 சதவீதத்துக்கு மேல் பலன் கிடைத்துள்ளது.
சோதனை
இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை, இந்தியாவில் சமீபத்தில் துவக்கப்பட்டது.இந்த சோதனையில், டில்லியைச் சேர்ந்த ஹம்டார்டு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்துள்ளது. இந்தியாவில், 19 இடங்களில், 1,140க்கும் அதிகமானோரிடம், இந்த தடுப்பூசி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த இரண்டாவது தடுப்பூசியை சோதனைக்கு உட்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், ஜனவரியில் அனுமதியளித்தது. இதையடுத்து, இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து சோதனைகளும் முடிந்து, செப்டம்பரில், கோவாவாக்ஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment