ரூ.267 கோடி கேட்டு கல்லுாரி நிர்வாகி வழக்கு
Added : மார் 22, 2021 23:43
சென்னை : கொரோனா சிகிச்சைக்காக, மருத்துவக் கல்லுாரியை பயன்படுத்தியதற்காக, 367 கோடி ரூபாய் செலுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்லுாரி நிர்வாகி வழக்கு தொடுத்துள்ளார்.
மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், குன்னவலத்தில் உள்ள டி.டி., மருத்துவக் கல்லுாரி தலைவர் டி.டி.நாயுடு தாக்கல் செய்த மனு:போதிய வசதிகளுடன், டி.டி., மருத்துவமனை இயங்கி வந்தது. கொரோனா சிகிச்சைக்காக, 3,000 படுக்கை வசதியை, மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தியது. மொத்தத்தில், எங்கள் கல்லுாரி, மருத்துவமனையில் உள்ள வசதிகளை, மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.இந்நிலையில், 12.78 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தும்படி, மின் வாரியத்திடம் இருந்து கடிதம் வந்தது.
எங்கள் மருத்துவமனையை பயன்படுத்தியதற்காக, அரசிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை. தற்போது, கல்லுாரி மற்றும் மருத்துவமனையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டியதுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், மருத்துவ சாதனங்கள் வாங்கவும், முழுமையாக சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கவும், எங்களுக்கு நிதி தேவை.மருத்துவமனையை பயன்படுத்திய வகையில், எங்களுக்கு, 367 கோடி ரூபாய் தர, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்சார்பில், வழக்கறிஞர் சரவணன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஏப்., 16க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment