காலமும், களமும் சரியில்லை என்கிறார் டி.ராஜேந்தர்
Added : மார் 27, 2021 23:17
சென்னை:'காலமும், களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என, முடிவு எடுத்து விட்டேன்' என, டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
லட்சிய தி.மு.க., தலைவர் ராஜேந்தர் அறிக்கை:துணை முதல்வர் பன்னீர்செல்வம்., என் நீண்ட நாள் நண்பர். வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு முன், மரியாதை நிமித்தமாக, பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். கண்ணியமாய் விடை பெற்று வந்தேன்.ஜெ., இல்லாமல், அ.தி.மு.க., சந்திக்கும் முதல் தேர்தல். அதேபோல், கருணாநிதி இல்லாமல், தி.மு.க., சந்திக்கும் முதல் களம். இரண்டு கட்சிகளுக்குமே, அவரவர் பலம் இருக்கிறது. கூட்டணியும் பக்கபலமாக இருக்கிறது.
இரண்டு கட்சிகளுமே பலப்பரீட்சையை சந்திக்கிறது. இதில், நான் போய் என்ன செய்யப் போகிறேன்?ஒருவருடைய வாக்கு வன்மை, வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிப் படும் உண்மை, இதையெல்லாம் முன்னாள் முதல்வர்கள் நம்பினர். அதன் அடிப்படையில், என்னை பிரசாரத்திற்கு அழைத்தனர். அது, ஒரு காலம். கொள்கையை சொல்லி, ஓட்டு கேட்ட தெல்லாம் அந்தக் காலம்.கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது, இந்தக் காலம்.
காலமும், களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று, வேடிக்கை பார்க்கலாம் என, முடிவு எடுத்து விட்டேன். பத்தும் பத்தாததற்கு, இது கொரோனா காலம். பாதுகாப்பு வேண்டு மென்றால், முகமுடி அணிய வேண்டும். பக்குவப்பட்டவனாய் வாழ வேண்டுமென்றால், வாய்மூடி அமைதி காக்க வேண்டும்.இந்த சட்டசபை தேர்தலில், லட்சிய தி.மு.க., யாரையும் ஆதரிக்கவும் இல்லை; அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம்.
நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு, ராஜேந்தர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment