ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பு : சுவர் ஏறி குதித்து 'எஸ்கேப்'
Added : மார் 27, 2021 23:55
புதுக்கோட்டை : ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள், மதிய இடைவேளையில், சுவர் ஏறி குதித்து தப்பிஓடினர்.புதுக்கோட்டை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது.
காலை, 9:30 மணி முதல், மாலை வரை பயிற்சி வகுப்பு நடைபெறும், என அறிவிக்கப்பட்டிருந்தது.பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, மதிய உணவு, பொட்டலமாக வழங்கப்பட்டது. உணவு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு, சிலர் வெளியே செல்ல முயன்றனர். இதனால், பள்ளியின் நுழை வாயில் பூட்டப்பட்டது. ஒரு சிலர், வெளியில் சென்று, மதிய உணவு சாப்பிட வேண்டும் எனக் கூறி, நுழைவாயிலை திறந்து விடுமாறு வலியுறுத்தினர்.அங்கிருந்த வருவாய்த் துறை ஊழியர்களிடமும், பள்ளி நிர்வாகத்தினரிடமும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'உணவு இடைவேளைக்கு பின், ஒரு மணி நேரம் பயிற்சி நடைபெறும். அதில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என, அவர்கள் சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே, நுழை வாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததால், பள்ளியின் பக்கவாட்டு சுவரில் ஏறிக் குதித்து, சிலர் வெளியே சென்றனர். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பலரும், சுவர் ஏறி குதித்து வெளியில் சென்றனர். வெளியே சென்ற சிலர் கூறுகையில், 'இந்த பயிற்சி, ஏற்கனவே வழங்கப்பட்டது தான். அதனால், மதியத்திற்கு மேல் இருக்கத் தேவையில்லை. எங்களுக்கு, தேர்தல் நடைமுறைகள் நன்கு தெரியும்' என்றனர்.
No comments:
Post a Comment