2ம் தேதி முதல் வெயில் கொளுத்தும் 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
Added : மார் 30, 2021 23:28
சென்னை:தமிழகத்தின், 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை மறுதினம் முதல், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 3ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வடமேற்கு திசையில் இருந்து, தமிழக பகுதி நோக்கி, தரைக்காற்று வீச சாத்தியக் கூறுகள் உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், சேலம், தர்மபுரி. கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை ஆகிய, 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்.
தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும்; கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில், நாளையும், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
அதேபோல, குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில், வரும் 2, 3ம் தேதிகளில், தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment