27.03.2021
சென்னை :''பொது மக்களிடம் முக கவசம் அணியும் வழக்கம், அறவே இல்லை; மருத்துவமனைகளுக்கு உள்ளேயும், விதிகள் பின்பற்றப்படுவதில்லை,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:தமிழகத்தில் மார்ச், 1ம் தேதி முதல், கொரோனா படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தவே, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களிடையே, முக கவசம் அணியும் வழக்கம், அறவே இல்லாமல் போய் விட்டது.விதிகளை முறையாக பின்பற்றாததால், காஞ்சிபுரம், கிண்டியில் உள்ள, கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது.
பெரும்பாலான மக்கள்,போலீசை பார்த்த பின்னரே, முக கவசம் அணிகின்றனர். மருத்துவமனைகளுக்கு உள்ளேயே, கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. பலர், முக கவசம் அணியாமல் அமர்ந்து உள்ளனர்.தமிழகத்தில் இதுவரை, உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை. இரட்டிப்படையும் வேகமும் இல்லை. கிராமப்புறங்களில், 1.28 லட்சம் குடியிருப்புகளில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பாதிப்பு உள்ளது. நகரங்களில், 1.22 லட்சம் தெருக்களில், 3,960ல் பாதிப்பு உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தமாக, 512 இடங்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன. அன்றாட பாதிப்பு மேலும் உயர்ந்து, 2,000த்தை தொட வாய்ப்புள்ளது; அதன்பின் குறைய துவங்கும். 'ரெம்டிசிவிர்' உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் போதுமான அளவில் உள்ளன.தமிழகத்தில் இதுவரை, 39.70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும், 10 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வர உள்ளன.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில், 357 கிலோ லிட்டரில் இருந்து, 778 கிலோ லிட்டராக, ஆக்சிஜன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமல், கொரோனா குறைந்து விட்டதாக கணக்கு காட்டலாம். கூட்டம் மிகுந்த இடங்களில் பரிசோதனை மேற்கொள்கிறோம்.தொற்று எண்ணிக்கை, 450ஐ தொட்ட போதே எச்சரித்தோம். கொரோனா சங்கிலியை உடைக்க, முக கவசம் அவசியம்; வேறு வழியே இல்லை.தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் தொற்று பரவலை தடுக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு ஓட்டளிக்கச்செல்வோர், சிறப்பு பஸ்களில், கடைசி நேரத்தில் செல்லாமல், முன்கூட்டியே செல்ல முயற்சிக்க வேண்டும். இவர்களுக்கு, ஏறுமிடம், இறங்குமிடங்களில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது குறித்து, போக்குவரத்து செயலரிடம் கூறியுள்ளோம்.தேர்தல் பணியாளர்களில், 40 சதவீதத்தினர்மட்டுமே, தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். நிறுவனங்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்றினால், 100 சதவீத பணியாளர்கள் இருந்தாலும், கொரோனா தொற்று பரவாது.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
பச்சை மிளகாய் குடிநீர் கொரோனாவை தடுக்கும்!
''கொரோனா தொற்றை தடுக்க, பச்சை மிளகாய் குடிநீர், புதினா குடிநீருடன், கபசுர குடிநீர் அருந்தினால், நோய் தொற்றை தடுக்கலாம்,'' என, அரும்பாக்கம் அரசு சித்தா மருத்துவமனை டாக்டர் பாஸ்கர் கூறினார்.இது குறித்து, அவர் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, அலோபதி டாக்டர்களுடன் இணைந்து பணியாற்றி, தொற்றை கட்டுப்படுத்தினோம்.சென்னை தண்டையார்பேட்டை, மாதவரம் பகுதிகளில், பச்சை மிளகாய் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கினோம்.
மாநிலம் முழுதும் சித்தா டாக்டர்கள் இந்த நடைமுறையை பின்பற்றினர்.தற்போது, மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதுடன், வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் குடிநீரை, மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். அடுத்த ஒரு வாரத்திற்கு, புதினா குடிநீர் பருக வேண்டும். பின், வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை கபசுர குடிநீர் பருகலாம்.
இந்த பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றுவதன் வாயிலாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்; கொரோனா தொற்றை தடுக்கும்.
இவ்வாறு பாஸ்கர் கூறினார்.
குடிநீர் தயாரிப்பது எப்படி?
* பச்சை மிளகாய் ஒன்றை, சிறு துண்டுகளாக்கி, அத்துடன், சீரகம், மஞ்சள் துாள், உப்பு தலா ஒரு சிட்டிகை சேர்ந்து, 200 மில்லி நீரில், இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இளஞ்சூட்டில், காலை, 50 மில்லி நீரை குடிக்க வேண்டும்; அடுத்த அரை மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாது. இதுபோல மூன்று நாட்கள் அருந்த வேண்டும். சிறுவர்கள், 10 மில்லி முதல், 30 மில்லி வரை அருந்தலாம்
* அடுத்த ஏழு நாட்களுக்கு, ஐந்து புதினா இலைகளை, 150 மில்லி நீரில், இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, தேவைப்படுவோர், சிறிது சர்க்கரை சேர்த்து, தேநீர் அருந்துவது போல அருந்த வேண்டும்.
No comments:
Post a Comment