Wednesday, March 18, 2015

ஏழு ரயில் நிலையங்களில் வைஃபை

சென்னை, பெங்களூரு, புதுடெல்லி, அகமதாபாத், ஆக்ரா கண்டோன் மென்ட், வாரணாசி, செகந்திராபாத் ஆகிய ஏழு ரயில்வே நிலையங்களில் வைஃபை வசதிகள் தற்போது வழங்கப்படுகிறது.

முதல் 30 நிமிடங்களுக்கு இணையதள வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு, அடுத்த 30 நிமிடங்களுக்கு ரூ.25 ம், ஒரு மணி நேரத்துக்கு ரூ.35-ம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவையை 24 மணி நேரமும் பெறலாம்.

அனைத்து `ஏ1’ மற்றும் `ஏ’ பிரிவு ரயில்வே நிலையங்களிலும் (407) இந்த வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் நேற்று தெரிவித்தார்.

கல்விக்கடன் வேண்டுமா?

தங்களின் படிப்புக்காக வங்கிகளில் கல்விக்கடன் வாங்கப்போக வேண்டும் என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் கவனிக்கவேண்டியவை.

கல்விக்கடன் என்பதில் அடங்கக்கூடிய செலவுகள்

கல்விக்கட்டணம்,விடுதி வாடகை, மற்றும் சாப்பாட்டுச் செலவு,தேர்வுக்கட்டணம்,நூலக கட்டணம்,ஆய்வுக்கூட கட்டணம், சீருடை, புத்தகங்கள், கல்விக்கான கருவிகள் மற்றும் உபகரணங்கள், காஷன் டெபாஸிட்,திருப்பித் தரக்கூடிய டெபாஸிட் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ரசீது தரக்கூடிய கட்டணங்கள், பயணச் செலவு, வெளிநாட்டில் படிக்கப் பயணச் செலவு, கணினி,மடிகணினி வாங்க, கல்விச்சுற்றுலா, மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றுக்குக் கல்விக்கடன் கிடைக்கும்.

தேவையான ஆவணங்களின் விபரங்கள்

1. முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் மாணவர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு போட்டோகள் ஐந்து.

2. ரேஷன்கார்டு ஜெராக்ஸ் 2

3. மாணவர் மற்றும் பெற்றோரின் அடையாள அட்டையின் நகல்

4. வருமானச் சான்றிதழ் (அசல்)

5. இருப்பிடச்சான்றிதழ்

6. கடைசியாகச் செலுத்திய வீட்டுவரி ரசீது அல்லது வாடகை வீட்டுக்கான ஒப்பந்தம்

7. எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, பட்டப்படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண் பட்டியல் நகல்

8. கல்லூரியிலிருந்து பெற்ற நன்னடத்தை சான்றிதழ் ( அசல்)

9. கல்லூரியிலிருந்து பெறப்பட்ட வருடவாரியான கட்டண விபரங்கள் (அசல்)

10. பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட கவுன்சிலிங் கடிதம் (அசல்) ( நகல் எடுத்தபின் கொடுக்கவும்)

11. பெற்றோரின் பிறந்த தேதிக்கான சான்று

12. சாதிச் சான்றிதழ்

13. கடைசியாகப் பெற்ற மாற்றுச் சான்றிதழ்

14. கல்லூரியில் கட்டணம் செலுத்திய ரசீது (அசல்) ( நகல் எடுத்து வைத்துக்கொண்டு பிறகு தரவும்)

15. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ( பொருத்தமானால் மட்டும்)

மேலே குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்கள் எல்லாவற்றிலும் ஒரு கெஜடட் அரசு அதிகாரியின் சான்றொப்பமும் முத்திரையும் வைக்கப்பட வேண்டும். சான்றிதழ்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டால் கடைசிநேர அவசரத்தை தவிர்க்கலாம்.

7 நாட்கள் தொடர் விடுமுறையா?- வங்கி அதிகாரிகள் விளக்கம்

வங்கிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை வருவதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக ‘வாட்ஸ் அப்’ உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என ஒரு தகவல் பரவி வருகிறது.

அதாவது வரும் மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை ராமநவமி என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம். 30-ம் தேதி திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும். 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை நிதியாண்டுக்கான இறுதி நாள் என்பதாலும், ஏப்ரல் 1-ம் தேதி புதன்கிழமை அடுத்த நிதியாண்டுக்கான முதல் நாள் என்பதாலும் கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக இரு தினங்களும் விடுமுறை. ஏப்ரல் 2-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதாலும் அவ்விரு தினங்களுக்கும் விடுமுறை. அடுத்த நாள் ஏப்ரல் 4-ம் சனிக்கிழமை வங்கி அரைநாள் மட்டுமே செயல்படும். அதற்கு அடுத்த நாள் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம் என அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள் ளது.

இந்த தகவலால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. வங்கிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விடுமுறை விடப்பட்டால் தங்களால் பணப் பரிவர்த்தனை உள்பட எவ்வித வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் மட்டுமே விடுமுறை என தெரிவித்தனர்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மார்ச் 28-ம் தேதி ராமநவமி பண்டிகைக்கு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.

மார்ச் 30-ம் தேதி வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். அடுத்த நாள் மார்ச் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்றாலும்கூட அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு தொடர் விடுமுறை ஆகும். எனினும் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இருப்பில் இருக்கும் என்பதால் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று தெரிவித்த னர்.

மாணவர்கள், இளைஞர்களை அடிமைகளாக்கும் 'வாட்ஸ்அப்': மனநல பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர் எச்சரிக்கை



சமூக வலைதளங்களை உபயோகிப்பது தற்போது மாணவர்கள், இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவிட்டது. இதில் செல்போனில் ‘வாட்ஸ்அப்’ பயன் படுத்துவது உச்ச கட்டமாகி விட்டது. தொழில் ரீதியாகவும், பொழுது போக்காகவும் ஆரம்பித்த இந்த ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு, தற்போது ஒரு போதைப்பொருளாகவே மாறிவருகிறது. இளைஞர்கள் இன்று வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாள் முழுவதும் மூளையை கசக்கி ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் அதீத நாட்டம் கொள்கின்றனர்.

வாட்ஸ்அப்பில், ஒவ்வொருவரும் ஒரு குழுவைத் தொடங்கி, ஆரம்பத்தில் அன்றாட முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவை செய்திகள் அனுப்பத் தொடங்கிய அவர்கள், தற்போது உச்சமாக ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி அதற்கு நாள் முழுவதும் அடிமையாகி விட்டனர். அதனால் இளைஞர்கள், மாணவர்களால் இன்றைய அவசர வாழ்க்கையிலும், ஒருநாள்கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘வாட்ஸ்அப்’ உபயோகிக்க இயலாத நேரங்களில் எரிச்சல், பதற்றம், எதையோ இழந்த உணர்வு ஆகியவற்றால் இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

குடும்ப உறவுகளில் பாதிப்பு

இதுகுறித்து மனநல மருத்துவர் ஆ.காட்சன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு அதிகரிப்பால் இன்று படிப்பு, வேலை அல்லது உறவுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உபயோகிக்கும் உந்துதல் ஏற்படும் நிலை, காலையில் விழித்த உடன் அதை உபயோகித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் உருவாவது அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், அந்த நபர் சமூக வலைதள உபயோகத்துக்கு அடிமை யாகி விட்டார் என்றே அர்த்தம்.

மாணவர்கள், இளைஞர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய குறுஞ்செய்திகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதில் நாட்டம் குறைவது, வேலையில் கவனமின்மையால் உயர் அதிகாரி கள் கண்டிப்புக்கு ஆளாவது, பெற்றோர் கண்டிப்பால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுதல், ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற மனநல பாதிப்புகளும் ஏற்படும்.

தீர்வுதான் என்ன?

ஆரம்ப நிலையிலேயே தடுத்தல் அல்லது வரைமுறைப் படுத்துதல்தான் இதற்கு சிறந்த வழி. இதில் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். முடிந்தவரை சமூக வலைதளங்களை உபயோகிக்கும் வயதை காலம் தாழ்த்துதல் நல்லது. பிள்ளைகளின் வலைதள மற்றும் குறுஞ்செய்திகளைக் கண்காணிக்க சிறந்த வழி பெற்றோர்களும் அவர்களின் நண்பர்களின் பட்டியலில் இருப்பதுதான். ஆரம்பத்திலேயே உபயோகம் குறித்த கட்டுப்பாடுகளை விதிப்பது, எல்லை மீறும்போது முழுவதுமாக தடை செய்வது போன்றவை அடிமைத்தனத்தை தவிர்க்கும். பிள்ளைகளுக்கு தேவையில்லை என்ற விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுப்பது நல்லது. பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, பெற்றோர் பிள்ளைகளின் மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது. வீட்டில் உள்ளவர்களோடு செலவிடும் நேரத்தை அதிகரித்தல், குடும்ப நபர்களிடம் நேரம் செலவிடும்போது மொபைல் போன் உபயோகத்தை தடை செய்வது பலன் தரும்.

தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு இது பலருக்கு மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதால், பெற்றோர்கள் பிள்ளைகளைக் கவனமாக கையாளுவதுடன் தங்களையும் பாதுகாத்துக் கொள்வது நல்லது என்று அவர் தெரிவித்தார்.

வெற்றியிலும் சில பாடங்கள்

வெற்றியைவிடவும் தோல்வியைச் சிறந்த ஆசான் என்பார்கள். காரணம், வெற்றி தரும் பரவசம் குறைகள் தெரியாத அளவுக்குக் கண்ணை மறைத்துவிடும். தோல்வி நமது குறைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துக் காட்டிவிடும்.

வெற்றி மீது வெற்றி பெறும் நேரத்திலும் கவனமாகச் சுயபரிசோதனை செய்துகொண்டு குறைகளைக் கண்டறிவது மேலும் வெற்றிகளைக் குவிக்க உதவும். தவிர, வெற்றி என்பது மட்டும் சிறப்புக்கான சான்றிதழாகிவிடாது என்பதால் இந்த வெற்றியை விமர்சனபூர்வமாக அணுக வேண்டியுள்ளது.

பெரும் பதற்றத்துடன் தொடங்கிய இந்தியாவின் உலகக் கோப்பைப் பயணம் தொடர் வெற்றிகளால் இன்று தெம்புடன் இருக்கிறது. இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் முதல் சுற்றில் இந்தியா இவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆடுகளங்களில் மூவர்ணக் கொடிகள் உற்சாகமாகப் பறக்கின்றன.

இந்திய ரசிகர்களின் முகங்களில் உற்சாகம் தாண்டவ மாடுகிறது. கோப்பை கைக்கு வந்துவிடும் என்னும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. கால் இறுதியில் ஆடவிருப்பது வங்கதேசம் என்பதால் அரை இறுதியில் யாருடன் மோதல் என்பது பற்றிய யூகங்கள் வலம் வருகின்றன.

வங்கதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 2007-ல் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறக் காரணமான அணி அது. என்றாலும் கடந்த 6 போட்டிகளில் இந்தியா ஆடிய விதத்தைப் பார்க்கும்போது அது அரை இறுதிக்குச் செல்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது.

தொடர்ச்சியாக ஏழாவது வெற்றியை இந்தியா பெற்றுவிடும் என நம்பலாம் என்றாலும் அடுத்த போட்டியில் வெல்வதும் அதில் வென்றால் அதற்கடுத்த போட்டியில் வெல்வதும் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. தொடர் வெற்றிகளில் தெரிந்த சில பலவீனங்களைப் பார்க்கையில் இதிலுள்ள சவால் புரிந்துவிடும்.

வலுவான பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டிகளில் இந்தியா கவனமாகவும் தீவிரமாகவும் போராடி வென்றது. வலுக் குறைந்த ஐக்கிய அரபு அமீரக அணியுடனான போட்டியை எளிதாக வென்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 183 ரன்னுக்குள் சுருட்டியபோதும் அந்தப் போட்டியில் வெற்றி எளிதாக வந்துவிடவில்லை. அதே போலத்தான் ஜிம்பாப்வே அணியுட னான போட்டியும். அயர்லாந்து அணி நன்கு போராடினாலும் பெரிய சவாலாக விளங்கவில்லை.

தொடக்க ஜோடி

கண்ணைக் கூசவைக்கும் வெற்றியின் வெளிச்சத்தை ஊடுருவிப் பார்த்தால் இந்தியாவின் பலவீனங்கள் அம்பலமாகின்றன. குறிப்பாகத் தொடக்க ஜோடியின் ஆட்டம். ஷிகர் தவனும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து ஒரே ஒரு முறைதான் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஜோடி 174 ரன்களை எடுத்தது. அதை விட்டுவிட்டால் ஐந்து ஆட்டங்களில் இவர்கள் இணைந்து எடுத்த மொத்த ரன்கள் 104.

தவன் இரண்டு சதங்களை அடித்துவிட்டார். பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிராகச் சிறப்பாக ஆடினார். இவர் ஆட்டத்தைப் பாராட்டும் அதே நேரத்தில் தவறவிடப்பட்ட கேட்சுகளின் வடிவில் அதிருஷ்டமும் இவருக்குக் கைகொடுத்தது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ரோஹித் ஷர்மாவைப் பொறுத்தவரை அதிருஷ்டமும் கைகொடுக்கவில்லை. ஆறு போட்டிகளில் இவர் அடித்த ரன்கள் 15, 0, 57*, 7, 64, 16. வலுவான மூன்று அணிகளுக்கு எதிராக இவர் அடித்த ரன்கள் 15, 0, 7. இரண்டு அரை சதங்களும் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து அணிகளுக்கு எதிரானவை. அசாத்தியமான திறமை உள்ளவர் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஷர்மா அதை நிரூபிக்க அதிக வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த அளவுக்கு இன்னொருவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. கால் இறுதியில் சற்றே வலுக் குறைந்த அணிக்கு எதிராக இவர் நன்கு ஆடிச் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்பதோடு கால், அரை இறுதி ஆட்டங்களில் வலுவான பங்களிப்பைச் செலுத்த வேண்டும். அதுதான் அவரது திறமைக்கும் அவருக்கு அளிக்கப்படும் வாய்ப்புக்கும் நியாயம் செய்வதாக அமையும்.

விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் ஒவ்வொரு சமயத்தில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்குப் பங்களித்து வருகிறார்கள். வலுவான தொடக்கம் அமையும்போது இவர் களுடைய பங்களிப்பு இன்னமும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

ஜடேஜாவின் ஆட்டம்

கவலைக்குரிய ஆட்டம் என்றால் அது ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம்தான். திறமையுள்ள மூத்த ஆட்டக்கரர்களையும் இளம் ஆட்டக்காரர்களையும் தவிர்த்து விட்டு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சில் ஓரளவு நன்றாகவே செயல் பட்டுவருகிறார். களத்தடுப்பிலும் செயல்படுகிறார். ஆனால் மட்டை வீச்சு படு மோசமாக உள்ளது. மூன்று போட்டிகளில் இவருக்கு ஆட வாய்ப்புக் கிடைத்தது.

அதில் இவர் எடுத்த ரன்கள்: 7, 2, 13. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா தடுமாறிக்கொண்டிருந்தபோது இவர் களமிறங்கினார். 183 என்னும் இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்தியா, 107-க்கு 5 விக்கெட்கள் என்று சிக்கலில் இருந்தது. தோனியுடன் சேர்ந்து நிதானமாக இவர் ஆடியிருந்தால் அணி எளிதாக வெற்றிபெற்றிருக்கும். ஆனால் மிகவும் பொறுப்பற்ற ஒரு ஷாட்டால் இவர் ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிராகவும் இந்தியாவின் முன்வரிசை மட்டையாளர்கள் தடுமாறினார்கள். ரெய்னா, தோனியின் ஆட்டமும் விடப்பட்ட கேட்சுகளும் சேர்ந்து இந்தியாவைக் காப்பாற்றின. இரண்டு கேட்சுகள் கொடுத்தாலும் அற்புதமான ஷாட்களை அடித்த ரெய்னாவிடம் தோனி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.

அது என்ன என்று ஆட்டம் முடிந்த பிரகு அவரிடம் கேட்கப்பட்டது. “நமக்குப் பிறகு மட்டையாளர் யாருமில்லை என்று ரெய்னாவுக்கு நினைவுபடுத்தி, அவரது வேகத்தைக் குறைத்துக்கொள்ளச் சொன்னேன்” என்றார் தோனி. ஜடேஜாவைப் பற்றிய கூற்றாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் என்பது அணிக்கும் ஜடேஜாவுக்கும் நல்ல அறிகுறி அல்ல.

செய்யப்படாத பரிசோதனைகள்

பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தும் விதம், களத் தடுப்பு வியூகம் என தோனியின் தலைமை சிறப்பாகவே உள்ளது. நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் ஆபத்பாந்தவன் வேலையை அவர் மட்டை சரியாகவே செய்கிறது. ஆனால் புதிய பரிசோதனைகளைச் செய்துபார்க்க அவர் தயங்குகிறார். அமீரகம், அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் சில பரிசோதனைகளைச் செய்திருக்கலாம்.

வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஜடேஜாவைச் சற்று முன்னதாக இறக்கிவிட்டிருக்கலாம். குறிப்பாக அமீரக அணிக்கெதிரான போட்டியில் இப்படிச் செய்திருக்கலாம். அதுபோலவே அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற போட்டிகளில் அக்‌ஷர் படேலைக் களமிறக்கியிருக்கலாம். இதுபோன்ற பரிசோதனைகள் பின்னாளில் கடுமையான போட்டிகளின்போது பயன்படும்.

தொடக்க ஜோடியின் ஆட்டம், கேட்சுகள் விடப்படும் அவலம், ஜடேஜாவின் ஆட்டத் திறன், புதிய திறமைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் வாய்ப்பைத் தவற விட்டது என இந்தியாவின் குறை களைப் பட்டியலிடலாம்.

சிறப்பான பந்து வீச்சு, பந்து வீச்சாளர்கள் எகிறு பந்துகளைப் பயன்படுத்தும் விதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற் றம், ஒருவர் சறுக்கினாலும் இன்னொருவர் தவறாமல் கைகொடுக்கும் மட்டை வலு, மட்டையாளர்கள் எகிறு பந்துகளை ஆடும் விதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் (பெர்த் நீங்கலாக), ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழல், தோனியின் அலட்டிக்கொள்ளாத அணுகுமுறை ஆகியவை இதுவரை இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்து பல்வேறு சாதனைகளும் புரியவைத்திருக்கின்றன. இன்னும் மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து வெல்ல இந்தத் திறமைகள் கை கொடுக்குமா? புதிய வல்லமைகள் கூடுமா?

கோப்பையை வெல்லக்கூடிய அணி என்னும் நம்பிக்கையை இந்த அணி ஏற்படுத்தியுள்ளது. குறைகள் திருத்திக்கொள்ளப்பட்டு, மேலும் சுதாரிப்புடன் ஆடினால் உலகை வெல்லலாம். நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பலாம்.

கைக்குச் சிக்காத பந்து

இந்திய அணியின் முக்கியமான பிரச்சினை களத்தடுப்பு. குறிப்பாக, கேட்ச் பிடிக்கும் திறமை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு கேட்சுகள் விடப்பட்டிருக்காவிட்டால் அந்த அணியால் 183 ரன்களை தொட்டிருக்கவே முடியாது.

பெர்த் ஆடுகளத்தை அழகாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியப் பந்து வீச்சாளர்கள் களத் தடுப்பாளர்கள் கைவிட்ட சோகம் அது. முன்னணி மட்டையாளர்களை அதற்கு முன்பே ஆட்டமிழந்துவிட்டதால் அதன் பாதிப்பு பெரிதாக இல்லை. முன்னணி மட்டையாளர் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால்கூட இந்தியாவின் நிலை சிக்கலாகியிருந்திருக்கும்.

இன்றைய அணியில் அனைவருமே நன்றாகக் களத் தடுப்பு செய்வதால் யாரை எங்கே நிறுத்துவது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தோனி இந்தத் தொடரின்போது ஒரு முறை கூறினார். கேட்சுகளைக் கோட்டைவிட்ட ஆட்டக்காரர்கள் இந்தக் கூற்றைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.

வழுக்கை விழுவது ஏன்?

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.

முடியின் வளர்ச்சி

முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.

முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம்.

ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.

இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.

தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.

என்ன காரணம்?

வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்,,,, இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.

வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும். அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை மாற்ற முடியாது.

கடைசிக் காரணம் இது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.

சரி, ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை விழுகிறது. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை? இந்தச் சந்தேகம் அதிகம் பேருக்கு இருக்கிறது. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது; அதீதமாகச் சுரக்க வழியில்லை. இதனால் பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.

வழுக்கையைத் தடுக்க முடியுமா?

நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். இது பெரும்பாலும் பரம்பரை காரணமாகவே வருகிறது. எனவே, இதைத் தடுக்க முடியாது. ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்.

தலைமுடிகளின் வேர்க் கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கையைத் தடுக்கலாம்.

வழுக்கை விழத் தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் மேன்மேலும் முடி கொட்டாது. ஆனால், மாத்திரை போடுவதை நிறுத்தியதும் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவினால், ஓரளவு முடி வளரும். வழுக்கை விழுவதும் தள்ளிப்போகும். ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவிவர வேண்டும்.

ஊட்டச்சத்து முக்கியம்!

சிறு வயதிலிருந்தே தலைமுடியைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும். ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பதிலாக, சீயக்காய் குளியல் நல்லது. வெயிலில் அதிகமாக அலையக் கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையரை’ப் பயன்படுத்தக் கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான எல்லாச் சத்துகளும் கிடைக்கும்.

என்ன சிகிச்சை?

பெரும்பாலும் பின்னந்தலையில் வழுக்கை விழாது. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சித் தலை வரைக்கும் வழுக்கை விழும். ஆகவே, பின்னந்தலையில் உள்ள முடியை வேரோடும் தோலோடும் எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல் நடுவதற்கு ‘முடி மாற்று சிகிச்சை’ (Hair transplantation) என்று பெயர்.

இதெல்லாம் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ‘விக்’!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

Tuesday, March 17, 2015

சிறுதானிய ஓட்டல் நடத்தும் எம்.இ., பட்டதாரி!

ன்ஜினீயரிங்கில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, ஐ.டி.நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், குடும்ப எதிர் ப்பை மீறி, பிடிவாதமாக ‘சமையல்காரனாக’ மாறியிருப்பது... ஆச்சர்ய செய்தி!

நம்மாழ்வார் அய்யாவின் தாக்கத்தால், படித்த இளைஞர்கள் பலர் இயற் கை வேளாண்மையை நோக்கி பயணப்பட்டது நல்விதை. அந்தப் பாதை யில்தான், எம்.இ., இன்ட்ரஸ்ட்ரியல் இஞ்சினீயரிங் முடித்துவிட்டு, இயற் கை வேளாண்மைக்கு ஆதரவாக சிறுதானிய சாப்பாடுகள், பலகாரங்களை விற்பனை செய்யும் ‘திருவள்ளுவர் உணவகத்’தை, சென்னை, பூந்தமல்லி அருகேயுள்ள கரையான்சாவடியில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார், சுரேஷ்.

“நல்ல உணவுக்கான வெற்றிடம் நம் சமூகத்தில் அதிகம். எவ்வளவு பணம் தந்தாலும் ஆரோக்கியமான உணவு என்பது குதிரைக் கொம்பாக இருக்கி றது. இந்த ஆதங்கமும் ஏக்கமும்தான் என்னை இந்தத் தொழிலுக்கு கொண்டுவந்தது. ‘அடுப்பங்கரையில நின்னு கரண்டி பிடிக்கவா இன்ஜினீயரிங் படிச்ச?’ என்ற கேள்விகளைக் கடந்து, முதலில் விருகம்பாக்கத்தில் மிகச்சிறிய இடத்தில் ‘திருவள்ளுவர் உணவகம்’ தொடங்கினேன். 

வரவேற்பு பெரிதாக இல்லை. மூன்று மாதத்தில் கடையை மூட வேண்டிய நிலை. ‘இப்பவாவது புத்தி வந்துச்சா?’ என்று மீண்டும் கோபக் கேள்விகள் துரத்தின. தோல்வி, என் வைராக்கியத்தைக் கூட்டியது. என்னைப் போலவே, எம்.இ., படித்த என் நண்பன் தினேஷும் என்னுடன் இந்த முயற்சியில் இணைந்தான். 

பல தரப்பிலும் இரண்டு லட்சம் கடன் பெற்று, கரையான்சாவடியில் சற்று பெரிய அளவில் மீண்டும் ‘திரு வள்ளுவர் உணவகம்’ தொடங்கினேன். 10 மாதங்கள் கடந்த நிலையில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. முழுக்க முழுக்க சிறுதானியம் என்று செய்யமுடியவில்லை. சாதாரண சாப்பாடு, பலகாரங்களு டன் சிறுதானிய உணவுகளையும் இணைத்து தருகிறேன். ஆனாலும், ஆவாரம் பூ சாம்பார், தினைப் பொங் கல், கம்பு லட்டு, சோள கொழுக்கட்டை, வில்வம்பூ தண்ணீர், ஏதேனும் ஒரு கீரை, கொள்ளு சூப், மூலிகை டீ என தருகிறோம். மிக தொலைவில் இருந்தும் பலர் வந்து சாப்பிடுகிறார்கள்.
பல கட்ட சோதனைகளைத் தாண்டி இன்றைக்கு காலூன்றிவிட்டேன். பார்ட்டனாராக சேர்ந்த நண்பன் தாக்குப் பிடிக்காமல் பாதியில் சென்றுவிட்டான். சமையல் மாஸ்டர்கள் கூட, இந்த சமையலை விரும்பாததால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். அதே சமயம் எப்படியோ சில கைகள் ஒத்தாசைக்கு வந்து விடும். சிறுதானிய உணவுக்கான விழிப்பு உணர்வும் வரவேற்பும் பெருகிக்கொண்டே வருவது சந்தோஷம். 

கல்யாணம், பிறந்தநாள் விழா போன்ற விசேஷங்களுக்கு எல்லாம் இப்போது சிறுதானிய விருந்து கேட்கி றார்கள். வீட்டில் சிறுதானிய சமையலை செய்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதனால், அதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறோம். பக்கத்தில் உணவகங்கள் நடத்துபவர்கள் கூட சிறுதானிய பயிற்சி வகுப்பு களுக்கு வருகிறார்கள். அவங்களின் ஓட்டலில் ஏதாவது ஒன்று மட்டும் சிறுதானிய உணவாக தர முடியுமா என்று ஆலோசிக்கிறார்கள். இதுதான் என் ஆசை. சிறுதானிய உணவுப் பழக்கம் அதிகரித்தால் எனக்கு மகிழ்ச்சி. இதற்குத்தான் நான் உழைத்தேன்!’’ -கொள்ளு சூப்பை குவளையில் ஊற்றுகிறார், சுரேஷ் எம்.இ!
 
-சாவித்ரி கண்ணன்

NEWS TODAY 14.06.2026