சமூக வலைதளங்களை உபயோகிப்பது தற்போது மாணவர்கள், இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவிட்டது. இதில் செல்போனில் ‘வாட்ஸ்அப்’ பயன் படுத்துவது உச்ச கட்டமாகி விட்டது. தொழில் ரீதியாகவும், பொழுது போக்காகவும் ஆரம்பித்த இந்த ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு, தற்போது ஒரு போதைப்பொருளாகவே மாறிவருகிறது. இளைஞர்கள் இன்று வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாள் முழுவதும் மூளையை கசக்கி ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் அதீத நாட்டம் கொள்கின்றனர்.
வாட்ஸ்அப்பில், ஒவ்வொருவரும் ஒரு குழுவைத் தொடங்கி, ஆரம்பத்தில் அன்றாட முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவை செய்திகள் அனுப்பத் தொடங்கிய அவர்கள், தற்போது உச்சமாக ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி அதற்கு நாள் முழுவதும் அடிமையாகி விட்டனர். அதனால் இளைஞர்கள், மாணவர்களால் இன்றைய அவசர வாழ்க்கையிலும், ஒருநாள்கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘வாட்ஸ்அப்’ உபயோகிக்க இயலாத நேரங்களில் எரிச்சல், பதற்றம், எதையோ இழந்த உணர்வு ஆகியவற்றால் இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
குடும்ப உறவுகளில் பாதிப்பு
இதுகுறித்து மனநல மருத்துவர் ஆ.காட்சன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு அதிகரிப்பால் இன்று படிப்பு, வேலை அல்லது உறவுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உபயோகிக்கும் உந்துதல் ஏற்படும் நிலை, காலையில் விழித்த உடன் அதை உபயோகித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் உருவாவது அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், அந்த நபர் சமூக வலைதள உபயோகத்துக்கு அடிமை யாகி விட்டார் என்றே அர்த்தம்.
மாணவர்கள், இளைஞர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய குறுஞ்செய்திகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதில் நாட்டம் குறைவது, வேலையில் கவனமின்மையால் உயர் அதிகாரி கள் கண்டிப்புக்கு ஆளாவது, பெற்றோர் கண்டிப்பால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுதல், ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற மனநல பாதிப்புகளும் ஏற்படும்.
தீர்வுதான் என்ன?
ஆரம்ப நிலையிலேயே தடுத்தல் அல்லது வரைமுறைப் படுத்துதல்தான் இதற்கு சிறந்த வழி. இதில் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். முடிந்தவரை சமூக வலைதளங்களை உபயோகிக்கும் வயதை காலம் தாழ்த்துதல் நல்லது. பிள்ளைகளின் வலைதள மற்றும் குறுஞ்செய்திகளைக் கண்காணிக்க சிறந்த வழி பெற்றோர்களும் அவர்களின் நண்பர்களின் பட்டியலில் இருப்பதுதான். ஆரம்பத்திலேயே உபயோகம் குறித்த கட்டுப்பாடுகளை விதிப்பது, எல்லை மீறும்போது முழுவதுமாக தடை செய்வது போன்றவை அடிமைத்தனத்தை தவிர்க்கும். பிள்ளைகளுக்கு தேவையில்லை என்ற விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுப்பது நல்லது. பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, பெற்றோர் பிள்ளைகளின் மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது. வீட்டில் உள்ளவர்களோடு செலவிடும் நேரத்தை அதிகரித்தல், குடும்ப நபர்களிடம் நேரம் செலவிடும்போது மொபைல் போன் உபயோகத்தை தடை செய்வது பலன் தரும்.
தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு இது பலருக்கு மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதால், பெற்றோர்கள் பிள்ளைகளைக் கவனமாக கையாளுவதுடன் தங்களையும் பாதுகாத்துக் கொள்வது நல்லது என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment