Tuesday, September 29, 2015

மனசு போல வாழ்க்கை 28: காட்சிகள் காட்டும் பிம்பங்கள் ...டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage

ஒரு முறை கிடைக்கும் தகவலை வைத்துக்கொண்டே “இது இப்படித் தான்!” என்று முடிவு கட்டுவது மனதின் முக்கியமான தன்மை. ஒரே முறை ஒரு ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்று முடிவு கட்டும். முதல் முறை பார்க்கும்போது சரியாக முகம் கொடுத்துப் பேசாத உறவினரை மண்டைக் கனம் பிடிச்சவன் என்று எண்ண வைக்கும். முதல் முறையாகத் தோன்றும் அபிப்பிராயத்தை எப்படியாவது தக்க வைக்கத் துடிப்பதும் மனதின் இயல்புதான்.

நாடு, மதம், இனம், மொழி, ஊர், தொழில் இப்படி எல்லாவற்றைப் பற்றியும் கருத்து வைத்திருக்கிறோம். இந்தக் கருத்தைப் பெரும்பாலும் பத்திரமாக வளர்த்துவருகிறோம்.

தோற்றத்தின் உள்ளே..

டி.வியில் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகளை நடத்து பவரைப் பெரிய அறிவாளியாக நினைக்கிறோம். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் பின்னால் ஒருவர் சொல்ல ‘டாக் பேக்கில்’ உள்வாங்கி ஏற்றஇறக்கமாக பேசுகிறார் என்பதையும் தெரிந்துகொண்டால், அவ்வாறு நினைப்போமா? சினிமாவில் கதாநாயக நடிகர்களைப் பெரிய வீரர்கள் என்று நினைப்போம். அவர்கள் தங்கள் படம் வெளிவரவும் அதை ஓடவைக்கவும் எந்த அளவுக்கும் பணிந்துபோகிறார்கள் என்ற செய்திகளும் வரத்தானே செய்கின்றன.

அதற்குப் பிறகும் அவர்களை மாவீரர்கள் என கருதுவீர்களா? டாக்டர் என்றாலே அவர் எல்லா வியாதிகளுக்கும் தீர்வு தெரிந்தவர் என்று நினைக்கிறோம். அவரது மருத்துவத் துறையைத் தவிர மற்ற மருத்துவத் துறைகளில் நிபுணர் அல்ல என்று ஒரு மறுபக்கம் இருக்கிறதே. அதை நம்ப மறுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

ஏட்டுப்படிப்பு அதிகமாக இல்லாதவரை அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதேபோல நிறைய பட்டங்கள் படித்தவர் என்பதாலே அவரை அறிவுஜீவி என்று நம்புகிறோம். ஏராளமான எழுத்தாளர்கள் பெரிய கல்வித் தகுதிகள் இல்லாதவர்கள். முனைவர் பட்டம் பெற்ற பலருக்கு பாடப்புத்தகமும், வாரப்பத்திரிகையும் தவிர மற்ற வாசிப்பு இல்லை இருந்தும் படித்தவர்கள் பற்றிய அபிப்பிராயத்தை அப்படியேதான் வைத்திருப்போம்.

கொட்டுமா, உதிருமா?

அதே போல காசுக்காக எதையும் செய்பவர்கள் வியாபாரிகள் என்று நினைக்கிறோம். விளம்பரம் இல்லாமல் சேவை புரியும் நிறைய வியாபாரிகள் இருக்கிறார்கள். மிக நாணயமாக, மக்களுக்குத் தீங்கு வரக்கூடாது என்று செயல்படுகிற பல வியாபாரிகள் இருக்கிறார்கள். சேவை செய்பவர்களில் பலர் மிகுந்த வியாபார நோக்குடனும் மக்கள் விரோதமாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி நம் கற்பிதங்களுக்கு நேர்மாறாகப் பலர் பல திறமைகளுடனும் ஆளுமைகளுடனும் இருக்கிறார்கள்.

முரடானது காவல்துறை. அதன் அதிகாரியாக இருந்த திலகவதி ஐ.பி.எஸ் மென்மையாக எழுதுகிறார். அதேபோல இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜென் துறவி போலத் தத்துவம் பேசுகிறார். அரசியல்வாதியான வைகோ வரலாற்றுப் பேராசிரியர்களுக்குச் சவால் விடும் வகையில் பேசுகிறார். என் நண்பர் டாக்டர் விஜயராகவன் அற்புதமாகத் தமிழில் செய்யுள் இயற்றுவார். அதை விட அபாரமான நகைச்சுவைத் திறனும் அவருக்கு உண்டு. புற்று நோய்க்குச் சிகிச்சை அளித்தாலும் நம்பிக்கையும் நகைச்சுவையும் குறையாமல் செயல்படுவார்.

“முடி கொட்டுமா டாக்டர்?” என்பார்கள். “ தேள்தான் கொட்டும். முடி உதிரும்!” என்று இலக்கணமும் நகைச்சுவையும் பேசி வைத்தியம் பார்ப்பார். அதே போல, சிவ ஆலயங்களைச் சுத்தம் செய்யும் உழவாரப் பணியில் ஈடுபடும் ஐ.டி. பணியாளர்களை எனக்குத் தெரியும். தங்கள் சொற்பமான சம்பளத்தின் பெரும்பங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளுக்குச் செலவு செய்யும் தம்பதியை எனக்குத் தெரியும்.

அதே போல, கார்ப்பரேட் நிறுவனங்கள் போலச் செயல்படும் கட்சிகளும் மடங்களும் மதச் சார்பு நிறுவனங்கள் உண்டு. அரசியல் தலைவரை மிஞ்சுகிற கவர்ச்சி மிக்க சாமியார்கள் இருக்கிறார்கள். துறவிகளாக வாழும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

வேண்டாம் பிம்பங்கள்

ஆனாலும் நம் மனம் சில அபிப்பிராயங்களை அப்படியே தக்க வைக்கத் துடிக்கிறது. “இவர்கள் இப்படித்தான்” எனும் அபிப்பிராயமே நமது சிந்தனையைக் கட்டிவைக்கும் ஒரு சங்கிலி. அதை உடைத்துவிட்டுச் சுதந்திரமாகப் பார்க்கும் பொழுது உலகம் இன்னமும் நிஜமாகவும் தெளிவாகவும் புரியும்.

எனக்குத் தமிழில் எழுத வராது. சில “ஆவி எழுத்தாளர்களை” பணித்துத் தான் கட்டுரைகளைச் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளுகிறேன் என்று ஒரு பேராசிரியர் பேசிவந்தார். ஆவிக்குத் தரும் அங்கீகாரத்தை இந்தப் பாவிக்குத் தர அவர் மனம் மறுக்கப் பல காரணங்கள். “ நீங்கள் சொல்வதை நிருபர்கள் எழுதுவார்கள் அல்லவா?” என்று பல முறை என் தொழில் முறை நண்பர்கள் கேட்பார்கள். “எழுத ஏது நேரம்?” என்பார்கள். “பேச்சு முழுதும் ஆங்கிலத்தில், எழுத்து மட்டும் எப்படி தமிழில்?” என்று லாஜிக்கலாக மடக்குவார்கள் சிலர்.

இவர்களின் பிரச்சினை நானல்ல. அவர்கள் என்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் தான்!

நான் கோபப்படுகையில் என் நண்பர்கள், “நீங்களே கோபப்படலாமா?” என்று என் உளவியல் பின்னணியை இணைத்துக் கருத்து சொல்வார்கள். உளவியல் படித்தவர்கள் எல்லாம் மனதை வென்ற மகான்கள் அல்ல என்று சொல்வேன். படைப்புகளை வைத்துப் படைப்பாளி பற்றிய அபிப்பிராயம் வளர்த்தல் ஆபத்தானவை.

இப்படித்தான் நடிகர்களிடம் நாட்டைக் கொடுக்கிறோம். அதிகம் தெரியாத சாமியார் காலில் குடும்பமாகச் சென்று காலில் விழுகிறோம். நன்கு பேசுகிறார் என்றால் உடனே அறிவுஜீவியாக உயர்த்திவிடுகிறோம். கூட்டத்தை வைத்துப் பிரபல்யத்தைக் கணக்கிடுகிறோம்.

இவை மனதின் செயல்பாடுகள் என்பதை மட்டும் புரிந்துகொள்வோம். வண்ணம் பூசாத கண்ணாடி கொண்டு வாழ்க்கையைப் பார்ப்போம். அதுதான் அழகு. அது தான் ஆரோக்கியம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

வாழ்க்கைப் பயணத்தில் துண்டுகள்...

Dinamani



By அ. அறிவுநம்பி

First Published : 28 September 2015 01:36 AM IST


துண்டு. இது வெறும் மூன்றெழுத்தில் உருவான ஒரு பெயர்ச்சொல். ஆனால், இதன்வழி அரங்கேறும் வினைகள் சொல்லி முடியாதவை. அண்மையில் ஒருவருக்கு விருது வழங்கும் விழா
நடைபெற்றது.
விருது வழங்கிச் சிறப்பித்த சிறப்புப்பொழிவாளரின் உரைக்குப் பின் கூட்டம் குறையக்கூடும் என்று கருதினர். எனவே, விருது பெற்றவரின் ஏற்புரை முன்னுக்குக் கொணரப்பெற்றது. இதுவரை நிகழ்வில் பிழையேதுமில்லை.
சடாரென்று விருது பெற்றவரைப் பாராட்ட ஒருவர் திடீரென மேடை ஏறி ஒரு தேங்காய்ப் பூத்துண்டைப் போர்த்தினார். அந்தத் துண்டைத் தோளிலிருந்து உரியவர் நீக்குவதற்கு முன் மேடையேறித் துண்டும் சால்வையும் அணிவிப்பவர்களின் நீண்ட வரிசை சட்டென்று மலர்ந்தது.
விருது பெறுபவரின் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள், உறவினர்கள், இயக்கப் பின்னணியினர் போன்றோருடன் அவர்வழியே சலுகைகள் பெற விரும்பிய அன்பர்களின் கூட்டம் அணிவகுத்து நிற்பதில் வியப்பேதுமில்லை. இதனால், அந்நிகழ்வில் ஏற்பட்ட இரண்டு தேய்மானங்களை இங்கே குறிப்பிடுவது தேவையாகிறது.
நாற்பது நிமிடங்கள் வரை நீங்கள் பேச வேண்டியதாயிருக்கும் என விழா ஏற்பாட்டாளர்கள் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஏராளமான நல்ல தரவுகளைத் திரட்டி வந்திருந்தார் சிறப்புப் பேச்சாளர். ஆனால், துண்டுபோடும் படலம் அவரின் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடிவிட்டது. அதனால், மொத்தம் பதினெட்டு நிமிஷங்கள் மட்டுமே அவரின் சிறப்புரை இடம் பெற்றது. இது முதலாவது சரிவு.
மேடையேறித் துண்டோ, சால்வையோ அணிவிக்கும்போது ஒலிபெருக்கிமுன் நின்று எந்த அமைப்பின் சார்பாக அங்கே சிறப்புச் செய்யப்படுகிறது எனக் குட்டிப் பிரசங்கம் செய்வதும், துண்டு அணிவித்தபின் விருது பெற்றோருடன் நிழற்படம் எடுத்துக்கொள்வதில் நேரம் செலவழிப்பதும் ஏனைய பார்வையாளர்களின் பொறுமைக்கு வைக்கப்பெறும் வேட்டுகளாகின்றன. இது இரண்டாவது தொய்வு.
இந்தத் துண்டுப் பணியால் ஒட்டுமொத்த அரங்கமும் பாழ்படுகின்றது என்பதே நடப்பியல். நீங்கள் ஒரு பார்வையாளராக இருந்து இத்தகைய துண்டுச் சடங்குகளை நேரிலே அனுபவிக்கும்போதுதான் அடத்தியான வெறுப்புகளை உணர முடியும். இதனுடைய உச்சகட்டத்தை ஒரு நிகழ்வு பரிமாறியது.
நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நிகழ்ச்சி தொடங்கி வரவேற்புரை இடம்பெறும்போது நூலாசிரியரின் நண்பர் அரங்கிற்குள் வந்தார். நூலாசிரியர் வரவேற்புரையாளரை விலகச் செய்துவிட்டு ஒலிபெருக்கியில் தன் நண்பர் பெயரைச் சொல்லி அவரை மேடைக்கு அழைத்தார். நண்பருக்குத் துண்டு போர்த்திய பிறகு வரவேற்புரை தொடர்ந்தது. அடுத்ததாக நூலறிமுகம் நடந்தது.
அப்போது நூலாசான் குடியிருக்கும பகுதியில் இருந்து இருவர் வந்தனர். கூடவே இன்னுமொருவர் உடன் வந்தார். நூலாசிரியரால் அறிமுகவுரை தடை செய்யப்பட்டது. பெயர் தெரியாத அந்த மூன்றாம் நபர் உள்பட மூவரும் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். துண்டுபோடல் அரங்கேற்றமானது.
சிறிது நேரங்கழித்து ஆசிரியரின் அலுவலகத்தில் இருந்து ஒருவர் தன் எட்டு வயதுப் பையனுடன் உள்ளே வரவும் மறுபடி நூல் அறிமுகம் நிறுத்தப்பட்டு நண்பர் மட்டும் மேடைக்கு வரவழைக்கப்பட்டு துண்டு சார்த்தல் நிகழ்ந்தது. இப்படி அறிமுகவுரை, வரவேற்புரை போன்றவை துண்டாடப்பட்டன.
இதனிடையே, வாழ்த்துரைக்காக மேடையில் அமர்ந்திருந்த மூன்று நபர்களில் இருவர் ஓசையின்றி கீழே இறங்கிச் சுவடு தெரியாமல் அரங்கிலிருந்து வெளியேறியதும் நடந்தது. ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் துண்டு துண்டாகிப் போனதுதான் பயன் அப்படிச் சிலவற்றைச் சந்திக்கும்போதுதான் ஒரு சிறிய துண்டு எவ்வளவு திருவிளையாடல்களை நிகழ்த்துகின்றது என்றுணர முடிந்தது.
ஒரு நபரிடம் துண்டு இடம்பெறுமிடத்தைப் பொருத்து அந்த நபரின் குணநலன்களும் பண்பாடும் புலப்படுவதை நடைமுறை வாழ்க்கை எடுத்து மொழியும். தலைமீது துண்டு அமருமானால் அது வேலைக் கடுமையைக் காட்டுவது ஒருபுறம். குளிர்க்காற்றைத் தடுக்கும் காப்பாகத் தோன்றுவது மறுபுறம்.
தோள் மீது துண்டு அணி செய்யுமானால் அவர் கடந்த தலைமுறை ஆள் என உணரலாம். கழுத்தினைச் சுற்றி இருபுறமும் தொங்கும் அமைப்பிலுள்ள துண்டு பழைமைவாதிகளின் பழக்க நீட்சியாகவே கொள்ளப்பெறும். துண்டானது அவசர முடிப்போடு நபரின் கக்கத்தில் (அக்குளில்) செருகப்படும்போது அதையணிந்தவரின் பணிவு புலப்படும். பணக்காரர்கள்கூட ஆலயங்களில் சட்டைக்கும் மேலாக இடைப் பகுதியில் துண்டினைக் கட்டிப் பக்தியை உணர்த்துவர்.
மாட்டுச் சந்தைகளில் விற்பவர், வாங்குபவர் இருவரும் விரல்வழி வணிகம் மேற்கொள்ளும் இடத்தில் கைகளை மறைக்கும் மறைப்புத் துணியாகத் துண்டு பிறப்பெடுக்கும். பேருந்துகளில், புகைவண்டிகளில் இடம்பிடிக்க ஏதுவாகத் துண்டு உருமாறி இடப்பதிவு ஆவணமாக உதவும்.
வழக்கில் சிக்கிக் கைதாகும் நிகழ்வின்போது, அதுவே முகமூடியாக மாறி முகத்தினை மறைக்கப் பயன்படும். சண்டைக்காரனின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கியபடியே இழுத்துவரும் நேரங்களில் துண்டு ஒரு படைக் கருவிபோலக் கருதப்பெறும்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் காரைக்குடி திருக்குறள் கழகத்தில் பேசவந்தார். நீளமான கதர்த் துண்டை விரித்துக்கொண்டே விழா அமைப்புக் குழுவில் ஒருவர் ஒலிபெருக்கியில் ஐயா அவர்களுக்கு இந்தக் கதராடையைப் பொன்னாடையாக அணிவிக்கிறேன் என்று கூறிவிட்டு, அணிவித்தார்.
முத்தமிழ்க் காவலர் உரையாற்றும்போது, ""போலித்தனமாகவே நாம் வாழ்கிறோம். கதராடையைக் கதராடை அணிவிப்பதாகக் கூறியே அணிவிக்க வேண்டும். மாறாக, அதனைப் பொன்னாடை என்று கூறிச் சிறப்பிக்கப்பட்டவரையும் பார்வையாளர்களையும் முட்டாளாக்கக் கூடாது. இரண்டாவது, பொன்னாடையால் கை துடைக்கவோ முகம் துடைக்கவோ முடியாது. இந்தக் கதர்த் துண்டால்தான் கூடுதல் பயன்தர முடியும்'' என்று பளிச்செனப் பதிலடி தந்தார்.
இப்படிப்பட்ட துண்டுச் செய்திகளின் பின்புறத்தே பல உண்மைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. பழங்காலத்தில் பெரியவர்களைக் கண்டவுடன் ஒரு மரியாதை காரணமாக எலுமிச்சைப் பழத்தை அளிப்பது வழக்கம். இப்போது துண்டு அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
புகழ் பெற்றவர்களை எங்கு கண்டாலும் - வீதியில், நிகழ்விட முகப்பில், பயண நிறைவில் என எல்லாவிடத்தும் - துண்டு போர்த்திச் சிறப்பிப்பது ஒரு நாகரிகம்போல மாறிப்போனது.
கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் துண்டுபோட்டு அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொண்ட நபர்கள் அப்படங்களைப் பிறரிடம் காட்டித் தமக்கும் புகைப்படத்தில் உள்ள நபர்களுக்கும் இடையில் ஓர் இணக்கமான அணுக்கம் இருப்பதைப்போல காட்டிக்கொள்வதும், நடிப்பதும் பல இடங்களில் நிகழ்கிறது.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொழிவாற்ற வந்தார் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். வழக்கமான முறையில் அவருக்குத் துண்டு அணிவிக்கப்பெற்றது. அவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ எனக்கருதி அவருக்குப் பின்புறமிருந்து துண்டைப் பதமாக நீக்க முயன்றேன். ஒலிபெருக்கிமுன் நின்ற அவர் எல்லாரும் கேட்கும்படியாக ""மெதுவா.. மெதுவா.. மடிப்பு மாறாமல் துண்டை மறுமடிப்புச் செய்து வைக்கணும். அடுத்த வாரம் நண்பரொருவரின் நூல் வெளியீட்டின்போது இது பயன்படும்'' என்றார். இப்படித் துண்டுகள் பல பிறவிகள் எடுப்பதே வழக்கம்.
புகழ்மிக்க ஒருவர் பங்குகொள்ளும் இடங்களில் அளிக்கப்படும் துண்டுகளை வைத்துக் கொண்டு என்ன தான் செய்வார் என்பது அடர்த்தியான கேள்விதான். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு சேர்ந்துபோன துண்டுகள், சால்வைகளைத் தம் வீட்டு வரவேற்பரை, உண்ணும் இடம் போன்ற இடங்களில் இருந்த நாற்காலி, சோஃபாக்களுக்கு அணிவித்து அழகு பார்த்தார்.
வேறு ஒரு சான்றோர் மேடையை விட்டு இறங்கும்போது மறவாமல் போர்த்தப்பெற்ற துண்டுகளைச் சேகரம்பண்ணிக் கொண்டுதான் வீடு திரும்பினார். ஆண்டுக்கொரு நாள் அந்தத் துண்டுகளைச் சலவை செய்து, செம்மையாக மடித்து எடுத்துக் கொள்வார். ஆதரவற்ற முதியோர்கள் வாழும் இல்லங்கள் அல்லது குழந்தைகள் காப்பகங்கட்குப் போய், தன் கையாலேயே உரியவர்களுக்கு வழங்குவார். இந்தத் துண்டுக் கொடைதான் அவரைச் சிறந்த தொண்டனாகக் காட்டும்.
தம் சொந்தச் செலவில் துணிகள், போர்வைகள் வாங்கித் தருவதுதான் மேலான அறம் எனக் கருதுவதில் தவறில்லை. ஆனால், தமக்கு மிஞ்சியபோது பிறருக்குத் தம்மிடம் இருப்பதை வழங்குவதும்கூட நேரிய கொடைப் பண்பாகவே அமையும். வட மொழியில் கூறப்படும் வஸ்திர தானம் என்று இதனைக் கொள்ளலாம்.
துண்டு துண்டாகத் தென்படும் துண்டு பற்றிய தகவல்களைத் திரட்டினால் ஒரு பெரிய புராணமே உருவாகிவிடும். எப்படியோ ஒரு துண்டு, ஆடல் பலவற்றை அகிலத்தில் ஆற்றிக் கொண்டிருப்பதுதான் நடப்பியல்.
வழக்கில் சிக்கிக் கைதாகும் நிகழ்வின்போதுகூட, துண்டுகள் முகமூடியாக மாறி முகத்தை மறைக்கப் பயன்படுகின்றன.

Monday, September 28, 2015

'டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ஒரு வரி’ யில் பேசி அசத்திய நரேந்திர மோடி

Return to frontpage

சிலிகான் வேலியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஒரு வரியில் எல்லோரும் கவரும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். அதைக் கேட்டு பிரபல நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) ஆச்சரியம் அடைந்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் வேலியில் நேற்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசினார். கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உட்பட பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் மோடி பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் பல கருத்துகளை ஒரு ஒரு வரியாக எல்லோரையும் கவரும் வகையில் குறிப்பிட்டார். அதன் விவரம் வருமாறு:

* உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையையும் மாற்றியுள்ளது சிலிகான் வேலி.

* உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சந்தித்துள்ளேன்.

* முகநூல் உட்பட இவைதான் நமது உலகின் அண்டை வீட்டாராக உள்ளன.

* முகநூல் மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால், அதுதான் மக்கள் தொகை அதிகம் கொண்ட 3-வது நாடாக இருந்திருக்கும்.

* கூகுள் ஆசிரியர்களை குறைத்துவிட்டது. மிகவும் விரும்பப்படுவதாக உள்ளது.

* ட்விட்டர் எல்லோரையும் நிருபர்களாக்கி உள்ளது.

* போக்குவரத்து விளக்குகள் வேலை செய்ய சிஸ்கோவின் ரவுட்டர்கள்தான் சிறந்தவை.

* நீங்கள் விழித்திருக்கிறீர்களா, தூங்குகிறீர்களா என்பது இப்போது முக்கியமில்லை.

* நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா ஆப் லைனில் இருக்கிறீர்களா என்பது முக்கியம்.

* நமது இளைஞர்களின் விவாதம் எல்லாம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் அல்லது விண்டோஸ் பற்றியதாகவே உள்ளது.

* இவை எல்லாம் சிலிகான் வேலியில் உள்ள உங்களால்தான் சாத்தியமாகி இருக்கின்றன.

இவ்வாறு மோடி பேசினார்.

அவர் ஒவ்வொரு வரிகளாக சொல்லச் சொல்ல, பிரபல நிறுவனங்களின் அதிகாரிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தன்னுடைய சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் கூறி, இந்தியாவில் உள்ள கிராம பெண்கள்கூட இப்போது தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்று மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மோடி மேலும் பேசுகையில் கூறியதாவது:

நீண்ட பயணம் செய்யாமல், சாகசம் செய்யாமல், சிறிய தீவில் உள்ளவர்களைக் கூட தொடர்பு கொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவி உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்போன் மூலம் பணத்தை வேறு ஒருவர் கணக்குக்கு மாற்ற முடிகிறது.

இந்தியாவில் குக்கிராமத்தில் உள்ள ஒரு தாய், தனக்கு பிறந்த குழந்தையை எளிதில் காப்பாற்ற முடிகிறது. குக்கிராமத்தில் உள்ள குழந்தை நல்ல கல்வியை பெற முடிகிறது. இவை எல்லாமே டிஜிட்டல் புரட்சியால்தான்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒருவர், இந்தியாவில் உடல்நலம் இல்லாமல் உள்ள தனது பாட்டியுடன் தினமும் ஸ்கைப் மூலம் பேசி ஆறுதல் சொல்கிறார். விவசாயிகள் தங்கள் நிலத்தின் மதிப்பை அறிந்துகொள்ள முடிகிறது, மீனவர்கள் அதிக மீன்களைப் பிடிக்க முடிகிறது. ‘செல்பி வித் டாட்டர்’ என்ற தலைப்பில் தனது மகளுடன் புகைப்படம் எடுத்து ஹரியாணாவைச் சேர்ந்த தந்தை வெளியிடுகிறார். அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது.

இவை எல்லாமே சிலிகான் வேலியில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் டிஜிட்டல் புரட்சியால்தான்.

இவ்வாறு மோடி பேசினார்.மோடியின் பேச்சைக் கேட்ட பிரபல நிறுவன அதிகாரிகள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

இண்டிகோ வழி; தனி வழி

Return to frontpage

லட்சாதிபதி ஆக வேண்டுமா? ஒரு கோடீஸ்வரர் விமான போக்குவரத்தை தொடங்கினால் எளிதாக லட்சாதிபதி ஆகலாம். விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் சொன்ன இந்த ஜோக் மிகப் பிரபலம். ஆனால் இந்த ஜோக் இண்டிகோ நிறுவனத்துக்கு பொருந்தாது.

கடந்த மார்ச் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1,304 கோடி ரூபாய். இதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது நிகர லாபம் நான்கு மடங்கு அதிகம். கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததால் நிகர லாபம் உயர்ந்தது என்று எளிதாக நாம் கடந்து விட முடியாது. இண்டிகோ கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஏழு நிதி ஆண்டுகளாக நிகர லாபத்தில் இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பல விமான நிறுவனங்கள் சிரமத்தில் இருக்கும் போது இண்டிகோ மட்டும் தனித்து தெரிகிறது.

என்ன காரணம்?

இண்டிகோவின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச அளவில் லாபமீட்டும் நிறுவனமாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஒரே நிறுவனத்தின் விமானத்தையே பயன்படுத்துகிறது. சவுஸ்வெஸ்ட் போயிங் நிறுவனத்தின் விமானங்களை பயன்படுத்துவது போல இண்டிகோ ஏர்பஸ் விமானங்களையே பயன்படுத்துகிறது. ஒரே நிறுவனத்தின் விமானங்களை தொடர்ந்து வாங்கும் போது அதிக தள்ளுபடி கிடைக்கும். தவிர பராமரிப்பு, அதற்கான பணியாளர்கள் என இதர செலவு ஆகாது.

இண்டிகோ எல்சிசி பிரிவில் செயல்படும் நிறுவனமாகும். குறைந்த கட்டணத்தில் செயல்படும் விமான நிறுவனம்.

குறைந்த கட்டணத்தில் செயல்பட் டாலும், அடிக்கடி தள்ளுபடி கொடுக்காது. இதில் பிஸினஸ் வகுப்பு கிடையாது, உணவு கிடையாது ஆனாலும் சரியான நேரத்தில் இந்த விமானம் செல்லும். அடிக்கடி விமானத்தில் பயணம் செல்பவர்களின் சாய்ஸ் இண்டிகோவாகதான் இருக்கும். `நாங்கள் ஒரு உற்சாகம் இல்லாத விமான நிறுவனத்தை நடத்தி வருகிறோம். தொடர்ந்து இப்படியே நடத்தவே விருப்பம்’ என்று அதன் தலைவர் ஆதித்யா கோஷ் ஒரு பேட்டியில் தெரிவித்தது கவனிக்கத் தக்கது.

சமீபத்திய தகவல்கள் படி 35.3 சதவீத சந்தையை இண்டிகோ வைத்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஜெட் ஏர்வேஸ் 19 சதவீத சந்தையை வைத்திருக்கிறது.

இத்தனைக்கும் இந்த நிறுவனம் 97 விமானங்களை வைத்து, 31 நகரங்களை மட்டுமே இணைக்கிறது. ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் விமான எண்ணிக்கையும் அதிகம், இணைக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும் அதிக சந்தையை இண்டிகோ வைத்திருக்கிறது. தவிர இப்போதைக்கு சிறு நகரங்களை இணைக்கும் திட்டம் இல்லை என்றும் அறிவித்திருக்கிறது.

இது தவிர சரியான பணியாளர்களை வைத்திருப்பது, சரியாக நகரங்களை தேர்ந்தெடுத்து விமானங்களை இயக்குவது என்பது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. விரைவில் 2,500 கோடி ரூபாய்க்கு பொதுப்பங்கு வெளியிட தயாராக இருக்கிறது. இதற்கு செபியின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது.

ஐபிஓவை எதிர்பார்த்து சந்தை காத்திருக்கிறது.

செல்போன் கொடுத்து உதவியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி: திருப்பதியில் தமிழக பக்தருக்கு நேர்ந்த கொடுமை

Return to frontpage


ப.முரளிதரன்


செல்போனை கொடுத்து உதவிய வரை ஏமாற்றியது மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தமிழக பக்தருக்கு நிகழ்ந்த கொடுமை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது உறவினர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் திருப்பதிக்குச் சென்றார். திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது, அவர் அருகில் வந்த நபர் ஒருவர், “எனது பர்ஸ், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால், பணம் இன்றி தவிக்கிறேன். எனவே, எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூற வேண்டும். எனவே, உங்களது செல்போனைக் கொடுங்கள். வீட்டுக்கு ஒரே ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்” எனக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட குமார் மனிதாபிமான அடிப்படையில் உடனே தன்னுடைய செல்போனை அந்த நபரிடம் கொடுத்தார். அவர் அதில் போன் செய்வது போல நடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டத்தில் மறைந்தார். குமார் உடனே அப்பகுதி முழுவதும் தேடி அலைந்தார். ஆனால், அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்குள் அந்த மர்ம நபர் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த குமாரின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து அவரது மனைவியிடம் “உங்கள் கணவர் திருமலையில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க கீழ் திருப்பதிக்கு கொண்டு செல்கின்றோம். மருத்துவமனையில் பணம் கட்ட அவசரமாக ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. உடனே பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். நான் மீண்டும் அரைமணி நேரத்தில் தொடர்புகொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஓட்டல் கேஷியரிடம்..

பின்னர், அந்த மர்ம நபர் திருமலையில் இருந்து கீழ் திருப்பதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று கேஷியரிடம், “எனது மணிபர்சை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். எனவே, நான் வீட்டுக்கு போன் செய்து பணம் அனுப்புமாறு கூறியுள்ளேன். அவர்கள் பணம் அனுப்புவதற்கு வசதியாக உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கூறுங்கள். அவர்கள் அக்கணக்கில் பணம் செலுத்தியதும் வங்கி ஏடிஎம் மூலம் அந்த பணத்தை எடுத்துக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அந்த ஓட்டல் கேஷியரும் தன்னுடைய வங்கிக் கணக்கை அளித்துள்ளார். அதை வாங்கிய அந்த மர்ம நபர் மீண்டும் குமாரின் வீட்டுக்கு போன் செய்து ரூ.40 ஆயிரத்தை வங்கியில் செலுத்தும்படி கூறி, ஓட்டல் கேஷியரின் வங்கிக் கணக்கை கொடுத்துள்ளார். குமாரின் குடும்பத்தாரும் அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர். பணம் வந்து சேர்ந்ததும் ஓட்டல் கேஷியர் தன்னுடைய ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை எடுத்து அந்த மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

உறவினர்கள் பதற்றம்

இதற்கிடையே, குமார் விபத்தில் சிக்கியதாக கூறியதை நம்பி அவரது உறவினர்கள் அவசர அவசரமாக புறப்பட்டு திருப்பதிக்குச் சென்றனர். அங்கு மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் சென்று விசாரித்துள் ளனர். அப்போது, குமார் என்ற பெயரில் யாரும் சிகிச்சைக்காக சேர்க்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

உடனே, திருமலைக்குச் சென்று அங்குள்ள தேவஸ்தான தகவல் அறிவிப்பு மையம் மூலம் குமார் குறித்து அறிவிப்பு செய்தனர். செல்போனை பறிகொடுத்துவிட்டு சுற்றித் திரிந்த குமார் இத்தகவல் கேட்டு தகவல் மையத்துக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உறவினர்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் போன் மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றி பணம் பறித்த தகவல்களை உறவினர்கள் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு குமார் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அவர்கள் கீழ் திருப்பதிக்குச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து வங்கிக் கணக்கை வைத்து அந்த ஓட்டல் கேஷியரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், அவருக்கும் தான் ஒரு மோசடி நபருக்கு உதவி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, குமாரின் உறவி னர் ரமேஷ் ‘தி இந்து’விடம் கூறுகையில், “உதவி செய்யப் போய் ரூ.40 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதோடு செல்போனும் பறிபோனது. அத்துடன், உறவினர்கள் அனைவருக்கும் தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. குமாருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே, பிறருக்கு உதவி செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

வாட்ஸ்ஆப் வழி சேவை: மீதமான உங்கள் உணவால் ஏழை பசி தீரட்டுமே! ... சேவியர் லோபஸ் சுனிதா சேகர்

Return to frontpage

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகி வரும் மூன்று இளைஞர்ள் இணைந்து, பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவளிக்க செயலி ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். செயலி தயாராக இன்னும் சில நாட்கள் இருந்தாலும், வாட்ஸ்ஆப் மூலமாக ஏற்கனவே தன்னார்வலர்கள் சிலர் இவர்களோடு இணைந்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிஃப், நரேஷ்வர் சிவனேசன், ஃபஹத் கலீல் என்ற மூன்று இளைஞர்கள் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். இவர்கள் மூவருமே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படித்து வருகின்றனர். மூவருமே மென்பொருள் துறையில் வேலை செய்தவர்கள்.

விழாக்களிலோ, வீட்டு விசேஷங்களிலோ உணவு வீணாகும் என்ற நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் இவர்களைத் தொடர்பு கொண்டால் போதும். தங்கள் தன்னார்வலர்கள் உதவியோடு அந்த உணவை பெற்றுக் கொண்டு, அதை வீணாக்காமல், பட்டினியால் தவிப்பவர்களுக்கு அளிக்கின்றனர். இதன் மூலம் தற்போது தினமும் ஆயிரக்கணக்கான ஆதரவற்றவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

மாநகராட்சியில் போடப்படும் 5000 டன் குப்பையில், 10 சதவீதம் உணவுக் கழிவுகளாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் பட்டியலிடுகிறது.

இது குறித்து ஆசிஃப் கூறும்போது, "உணவு மனிதர்களின் அடிப்படை தேவை. நம் தேசத்தில் பலர் உணவுக்காக பிச்சையெடுத்து வரும் வேளையில், வீடுகளிலும், உணவகங்களிலும், அங்காடிகளிலும், அலுவலகங்களிலும் நாம் நிறைய உணவை வீணடிக்கிறோம் என்பது வருந்தத்தக்கது.

எனவே, உணவை வீணாக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது 99625 18992 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டாலோ, வாட்ஸ்ஆப்பில் தகவல் தந்தாலோ போதும். நாங்கள் வருவோம். உரியவர்களின் பசி போக்க உங்கள் உணவைப் பகிர்வோம்" என்றார்.

இந்தியாவில் பாஜக முயற்சியில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரம்: அமெரிக்காவில் மோடி பெருமிதம்

Return to frontpage

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் உள்ள எஸ்.ஏ.பி. மையத்தில் அமெரிக்கா வாழ் இந்திய மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரத்தை பாஜக உருவாக்கியுள்ளது" என்றார்.

அவர் மேலும் பேசும்போது, "நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்திருந்தது. ஒருவர் ரூ.50 கோடி சம்பாதித்தார், ஒருவரது மகன் ரூ.250 கோடி சம்பாதித்தார், மகள் ரூ.500 கோடி சம்பாதித்தார், மருமகன் ரூ.1,000 கோடி சம்பாதித்தார்.

ஆனால், பாஜக இப்போது ஊழலற்ற ஆட்சி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். என் மீது யாராவது ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது சொல்ல முடியுமா?" (அரங்கில் "இல்லை" என்ற பெரிய சப்தத்தை மக்கள் எழுப்புகின்றனர்)

"கடந்த ஆட்சியில் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டனர். ஆனால் இன்று இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு புதிய அடையாளம் இருக்கிறது. இதற்குக் காரணம், உங்களது விரல் செய்த வித்தை. உங்கள் விருப்பம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

21-ம் நூற்றாண்டு யாருடையது என்ற பேச்சு உலகளவில் பரவலாக பேசப்படுகிறது. அதற்கு பலரும், 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதே என பதில் கூறுகின்றனர்.

16 மாத ஆட்சி காலத்திற்குப் பிறகு இன்று உங்கள் முன் நிற்கும் நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேனா என்று நீங்களே சொல்லவேண்டும். ('ஆம்' என்ற பெரும் ஓசை அரங்கத்தில் ஒலிக்கிறது).

நான் ஒவ்வொரு முறை இந்தியா முன்னேறும் என்று கூறும்போதெல்லாம், பலரும் என்னிடம் கேட்கின்றனர்? எந்த நம்பிக்கையில் இதைக் கூறுகிறீர்கள் என்று?

இந்திய மக்கள் தொகையில் 65% பேர் 35 வயது மதிக்கத்தக்கவர்கள். அதாவது இளம் வயதினர். இந்தியாவின் இளமையே எனக்கு இந்த நம்பிக்கையை அளிக்கிறது என நான் அவர்களிடம் கூறுகிறேன்.

மேலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. உலக வங்கி அறிக்கை, மூடிஸ் வர்த்தக அமைப்பு அறிக்கை போன்ற பல்வேறு அமைப்புகளின் பொருளாதார ஆய்வறிக்கைகளும் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது" என்றார் மோடி.

தொழில்நுட்ப புரட்சி அவசியம்

"ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்ப புரட்சி அவசியம். அதை கருத்தில் கொண்டே டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இ-கவர்னன்ஸ் முறையும் சிறப்பாக செயல்படுகிறது" என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.

உலகுக்கு 2 அச்சுறுத்தல்கள்

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்த உலகம் இரண்டு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. ஒன்று தீவிரவாதம்; மற்றொன்று பருவநிலை மாற்றம். இந்த இரண்டையும் திறம்பட சமாளிக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். தீவிரவாதம் என்றால் என்ன என்பதற்கே ஐ.நா. இன்னமும் முழுமையான விளக்கமளிக்கவில்லை.

ஒரு விளக்கத்துக்கே 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால் அதற்கான தீர்வு காண எத்தனை ஆண்டுகள் ஆகும். நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்ற பேதம் ஏதும் இல்லை. தீவிரவாதம் மக்கள் நலனுக்கு அச்சுறுத்தலே. காந்தியும், புத்தரும் பிறந்த மண்ணில் இருந்து வரும் நான், உலக அமைதி உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

மேலும் அவர் பேசும்போது, வசதி படைத்தோர் காஸ் மானியத்தை விட்டுத்தர வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று 30 லட்சம் மக்கள் மானியத்தை விட்டுக்கொடுத்தது பெருமை அளிப்பதாக கூறினார்.

டிசம்பர் 2 முதல் விமான சேவை

டெல்லி - சான் பிரான்ஸிஸ்கோ நகர் இடையே வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் வாரம் மூன்று முறை ஏர் இந்தியா நேரடி விமானத்தை இயக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.

NEWS TODAY 06.12.2025