Wednesday, March 8, 2017

ஆதார் எண் பெறாதவர்களும்
அரசின் சலுகைகளை பெறலாம்



NEW DELHI:'ஆதார் எண் பெறாத நபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெறாலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.





நாட்டில், ரேஷன் பொருட்கள், சமையல் காஸ் உள்ளிட்ட பலவற்றிற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதே போல், பள்ளி கல்லுாரி களில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப் படுகிறது. இது போல், பல்வேறு திட்டங்களின் கீழ், மானியங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

தகுதியற்ற நபர்களுக்கு அரசின் சலுகைகள் போய் சேர்வதால், அரசு நிதி வீணடிக்கப்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆதார் எண் அடிப்படையில், அரசின்


நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டது.

இதையடுத்து, ஆதார் பதிவுப் பணி விரைவுபடுத்தப் பட்டது. இதுவரை, 112 கோடிக்கும் மேற்பட்டோ ருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'பள்ளி,கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், 'ஸ்காலர்ஷிப்' பெறவும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயன் பெறவும், ஆதார் எண் கட்டாயம்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 'நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்படாத நிலையில், மத்திய அரசு இதுபோன்ற அறிவிப்பு களை வெளியிடுவது நியாயமற்றது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுள்ளதாவது:

நாட்டில் இதுவரை, 112கோடிக்கும் மேற்பட்டோ ருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆதார் எண் பெற, பதிவு செய்யாத நபர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும், நிரந்தர ஆதார் பதிவு மையங் களும் செயல்படுகின்றன. ஆதார் எண் அடிப்படை யில், அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள்

வழங்கப்பட்டதன் மூலம், தவறான நபர்களுக்கு மானியம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரண்டரை ஆண்டுகளில், மத்திய அரசுக்கு, 49 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.

ஆதார் எண் பெறாத நபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறலாம். நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஆதார் எண் வழங்கப்படும் வரை, இந்த நடைமுறை தொடரும். அதுவரை, ஆதார் எண் இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் அரசின் சலுகைகள் மறுக்கப் படாது.இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 வயதில் ஆச்சரியப்படுத்தும் பாட்டி

மதுரை: உலக மகளிர் தினத்தை, பல விதங்களில் கொண்டாடுவோர், விதவிதமான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் நிலையில், 100 வயது பாட்டி லட்சுமி அம்மாள், அன்றாட நிகழ்வுகளை, நமது நாளிதழில் படித்து, விவாதித்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். மதுரை, சத்யசாய் நகரில் வசிக்கும் இவர்,

 1917ல் கடலுாரில் பிறந்தார். அப்பா சீனிவாச ஐயர். இவருடன் பிறந்தவர்கள், ஒன்பது பேர். 'ராலிஸ் இந்தியா' நிறுவனத்தில், உயர் பொறுப்பில் இவரது அப்பா பணிபுரிந்துள்ளார். அதனால், பல மாநிலங்களுக்கும், அவரோடு பயணப்பட்டுள்ளார்.ஆந்திராவில் கடப்பா, விஜயவாடா, கர்னுால் என, பல ஊர்களில் படித்தாலும், விருத்தாசலத்தில், ஐந்தாம் வகுப்போடு, கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவருக்கு, 10 வயதில் திருமணம்; கணவர் ராஜாராமையர், மாயவரத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இப்போது, லட்சுமி அம்மாள், தன் தம்பி மகன் சுவாமிநாதனுடன், சத்யசாய் நகரில் வசித்து வருகிறார்.தினமும், நமது நாளிதழை வரி விடாமல் படிக்கும் இவர், தற்போதைய அரசியல் களத்தை விளாசி தள்ளுகிறார். துல்லியமாக காது கேட்கவில்லை. எந்த கேள்வியை எழுதிக் கொடுத்தாலும், பதில் அளிக்கிறார்.
இனி அவரே பேசுகிறார்....

வீட்டில் சுவாமிநாதனுடனும், அவரது மனைவி பானுமதியுடன் தான் விவாதிப்பேன். தினமலர் நாளிதழில் ஆன்மிக மலர், சிறுவர் மலர், வார மலர் என அத்தனை இணைப்புகளையும் படிப்பேன். ராமானுஜரைப் பற்றிய பொலிக... பொலிக... கட்டுரை அருமையாக உள்ளது. சின்ன வயதில், அப்பாவுடன் பல ஊர்களுக்கு பயணித்ததால் அன்றாட நிகழ்வுகளை, மாறுதல்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது. இது, புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, வயதான நிலையிலும், என் அன்றாட பணிகளை நானே செய்கிறேன். யார் எங்கே இருந்தாலும், சவுக்கியமா இருக்கணும் என்பது தான் என் பிரார்த்தனை, ஆசீர்வாதம்.இவ்வாறு அவர் கூறினார். 

வாழ்த்த, 94433 43493ல் அழைக்கலாம்.
15 நிமிடத்தில் 'எம்பாமிங்' செய்ய முடியாது! : ஜெ., மரணத்தில் மருத்துவ கவுன்சில் தகவல்

சென்னை: ''ஜெ., உடலை, 15 நிமிடத்தில, 'எம்பாமிங்' செய்வது என்பது சாத்தியமல்ல,'' என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நீர்ச்சத்து, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, பின் வேறு நோய்கள் இருப்பதாக கூறுவதில் தவறில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகமிருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தெளிவு பெற வேண்டும். மக்கள் மத்தியில், தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். ஜெயலலிதா உறவினர்கள் யாரும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து, மருத்துவ கவுன்சிலில், எந்த புகாரும் அளிக்கவில்லை.அவருக்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை முறை குறித்து, உள்துறை மற்றும் சுகாதார துறைக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் சிகிச்சை குறித்து தெரிவிப்பது அரசின் கடமை. இறந்த உடலை பதப்படுத்த, சில மணி நேரங்களாகும் நிலையில், 15 நிமிடத்தில், 'எம்பாமிங்' செய்வதற்கு சாத்தியம் குறைவு. இதுதொடர்பான முழுமையான விளக்கங்களை, அத்துறை நிபுணர்களிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ரவிசங்கர் கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, அவர் உயிரிழந்து விட்டார். ஜெயலலிதாவுக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், எந்த தவறும் இல்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டாலும், பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட, டிச., 4ம் தேதிக்கு பின், அவரது உடல் பதப்படுத்தும் பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கலாம். அதனால், 'எம்பாமிங்' செய்ய, 15 நிமிடம் போதுமானதாக அமைந்தது. மாரடைப்பு ஏற்பட்ட பின், செலுத்தப்பட்ட 'எக்மோ' சிகிச்சை கருவி, தமிழக அரசிடம் தெரிவித்த பின், அகற்றப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
எச்1 பி' விசா பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ரவிசங்கர் பிரசாத்

புதுடில்லி: அமெரிக்க அரசின் 'எச்1 பி' விசா பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார்.

விரைவில் தீர்வு:

இதுகுறித்து மத்திய சட்டத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: 'எச்1 பி' விசா நடைமுறையில், அமெரிக்க அரசின் புதிய கெடுபிடிகளால், இந்திய பொறியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களில், திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் பணியாற்றுகின்றனர். அமெரிக்க அரசின் திடீர் நடவடிக்கையால், ஐ.டி., ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து, அந்நாட்டு அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம;. விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக அளவு லஞ்சம் கொடுக்கும் நாடுகளில் முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது.
புதுடெல்லி

ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக அளவு லஞ்சம் கொடுக்கும் நாடுகளில் முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவில் 3க்கு 2 பேர் டீ சாப்பிட வைத்துக்கொள் அல்லது  பிறவடிவங்களில் பொது சேவைகளை பெற லஞ்சம் கொடுப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.

இந்த் கணக்கெடுப்பை சர்வதேச வெளிப்படைத்தன்மை சர்வதேச  ஊழ எதிர்ப்பு குழுக்கள் நடத்தியது. இதில் 69 சதவீதம் பேர்  லஞ்சம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.தொடர்ந்து வியட்னால் 65 சதவீதம் பேரும், பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் குறைந்த அளவாக 26 சதவீதம் பேரும் லஞ்சம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.ஜப்பானில்  மிக குறைந்த அளவாக 0.2 சதவீதத்தினர் மட்டுமே லஞ்சம்  வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.  தென் கொரியாவில்  3 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

கடந்த முறை 41 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்து 7 வது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,ஜப்பான், மியான்மர், இலங்கை நாடுகளை விட அதிகரித்து விட்டது. 

ஆசிய பசிபிக் 16 நாடுகளில் 20 ஆயிரம் பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.

பொது சேவைகளில் அதிக அளவு லஞ்சம் போலீஸ் துறையில் வாங்கபட்டதாக 36 சதவீதம் ஏழைகள் தெரிவித்து உள்ளனர்.அதிக அளவு பணம் லஞ்சம் வாங்குவது  வருவாய்துறையில் என தெரியவருகிறது.

போலீஸ் உள்பட பொது சேவை நிறுவனங்களுக்கு மக்கள் பணமாகவோ அல்லது பரிசு பொருளாகவோ அல்லது அவர்களுக்கு பிடித்த வகையிலோ கொடுத்து உள்ளனர்.

 நீதிபதிகள் அல்லது நீதிமன்ற அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் ஆவணங்கள் பெறும் அலுவலகங்களில் இந்த லஞ்சம் கொடுக்கபட்டு உள்ளது. என ஆய்வில் கூறபட்டு உள்ளது

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ‘வை–பை’ வசதி ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு,
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் வஷிஷ்ட ஜோரி செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே ஆய்வு பணியில் ஈடுபட்டார். பின்னர் ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, இருப்புபாதை வசதியில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த ‘வை–பை’ வசதியை தொடங்கிவைத்தார். பின்னர் 2 குடியிருப்பு பகுதிகளையும் திறந்துவைத்தார்.
இதையடுத்து அவர் கூறியதாவது:–
ராட்டிணக்கிணறு அருகே உள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணி தண்ணீர் வசதியில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணி துரிதமாக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து அந்த தண்ணீரிலேயே ரெயில்களை கழுவுவதும் கழிப்பிடத்திற்கு பயன்படுத்துவது குறித்தும் பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்கும் பொருட்டு அருகில் உள்ள குளவாய் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து அந்த தண்ணீரை கொண்டு இது போன்ற பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மார்ச் 08, 03:00 AM
தலையங்கம்
ஆகாய தாமரையை அகற்றும் போராட்டம்

தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் தாமிரபரணி ஆறு ஒன்றுதான் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் ஆறு. எப்போதும் வற்றாத ஜீவநதியாக அதாவது, கொஞ்சம் தண்ணீராவது ஓடிக்கொண்டிருக்கும் ஆறுதான் தாமிரபரணி. நெல்லைக்கு அருகிலுள்ள ‘சிப்காட்’ வளாகத்தில் அமைந்துள்ள பல தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்துதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில், ‘பெப்சி, கோ–கோ கோலா கம்பெனிக்கு மட்டும் தினமும் 24 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.37.50 காசு என்ற விகிதத்தில் வழங்கப்படுவதை குறிப்பிட்டு, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் 2 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், இந்த பொதுநல வழக்குகள் பொதுநலத்துக்காக தொடரப்படவில்லை. இதில் ஒருமனுதாரர் பல ஆண்டுகளாக இந்த நிறுவனங்களின் வழக்குகளை நடத்திக்கொண்டிருந்தார். இப்போது அங்கிருந்து பணிநிறுத்தம் செய்யப்பட்டதால், அந்த கோபத்தில் பழிதீர்க்க இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளார் என்று இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியதால், அப்படி இந்த 2 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. பல்வேறு வகையான போராட்டங்களை எல்லோரும் நடத்திவந்தாலும், இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற சமூகஆர்வலர் அமைப்பை நடத்தியவர்கள் போராட்டம், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல், பெரும் ஆதரவையும் தந்துள்ளது. முதலில் ‘பெப்சி, கோ–கோ கோலா கம்பெனிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆற்றின் கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். வண்ணாரப்பேட்டை அருகே தாமிரபரணி ஆற்றின் கரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்குப்பிறகு, இந்த சமூக ஆர்வலர்கள் ஆற்றுக்குள் இறங்கி அங்கு படர்ந்திருந்த ஆகாய தாமரையை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப்போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் செய்யவேண்டிய வேலையை, போராட்டம் நடத்தியவர்கள் செய்தது அனைவரையும் பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுபோன்று ஆக்கப்பூர்வமான போராட்டங்கள்தான் இனி பொதுமக்கள் மத்தியில் எடுபடும்.

பொதுவாக, ஜனநாயக நாட்டில் யாரும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா, மனிதசங்கிலி போன்ற பலவகையான போராட்டங்கள் நடத்துவதில் தவறே இல்லை. ஆனால், உண்ணாவிரதம் என்பது தங்களை தாங்களே வருத்திக்கொள்வதுதான். மற்ற போராட்டங்கள் எல்லாம் அவர்கள் உணர்வை வெளிகாட்டும் வகையில் அமைந்திருக்கும். அது பொதுமக்களுக்கு பெரும் இடையூறையும் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, ஒரு இடத்தில் மறியலோ, சாலைமறியலோ, தர்ணாவோ நடந்தால் நிச்சயமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். அவசரத்துக்கு பொதுமக்கள் எங்கேயும் போகமுடியாது. இத்தகைய நேரங்களில் அவர்கள் போராட்டக்காரர்களை குறைப்பட்டுக்கொள்வார்களே தவிர, அந்தப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இதனால்தான், ஜப்பான் நாட்டில் எந்தப்போராட்டம் என்றாலும், தாங்கள் பார்க்கும் பணியில் கூடுதல்நேரம் பார்த்து உற்பத்தியை பெருக்குவார்கள். சிலபோராட்டங்களில் ரத்ததானம் செய்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். அதுபோல, திருநெல்வேலி இப்போது வழிகாட்டிவிட்டது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் போராட்ட உணர்வோடு அந்தப்பணியை வேகமாக செய்வார்கள் என்பதால், இதையே ஒரு பாடமாகக்கொண்டு, இனிமேல் போராட்டம் நடத்துபவர்கள் எல்லோரும் இதுபோல ஆகாய தாமரையை அகற்றும் பணியில் இறங்கினால், பொதுமக்கள் ஆதரவும் கிடைக்கும். அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்கும். அரசாங்கமும் தாங்கள் செய்யவேண்டிய வேலையை பொதுமக்கள் கையில் எடுத்துக்கொண்டு செய்கிறார்களே என்று உணர்ந்து, அவர்களையே ஆகாய தாமரையை அகற்றும் பணியில் ஈடுபடவைக்கும்.



PrevNext
March 2017
SuMoTuWeThFrSa26 27 28 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1






NEWS TODAY 15.05.2026