Wednesday, March 8, 2017

15 நிமிடத்தில் 'எம்பாமிங்' செய்ய முடியாது! : ஜெ., மரணத்தில் மருத்துவ கவுன்சில் தகவல்

சென்னை: ''ஜெ., உடலை, 15 நிமிடத்தில, 'எம்பாமிங்' செய்வது என்பது சாத்தியமல்ல,'' என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நீர்ச்சத்து, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, பின் வேறு நோய்கள் இருப்பதாக கூறுவதில் தவறில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகமிருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தெளிவு பெற வேண்டும். மக்கள் மத்தியில், தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். ஜெயலலிதா உறவினர்கள் யாரும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து, மருத்துவ கவுன்சிலில், எந்த புகாரும் அளிக்கவில்லை.அவருக்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை முறை குறித்து, உள்துறை மற்றும் சுகாதார துறைக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் சிகிச்சை குறித்து தெரிவிப்பது அரசின் கடமை. இறந்த உடலை பதப்படுத்த, சில மணி நேரங்களாகும் நிலையில், 15 நிமிடத்தில், 'எம்பாமிங்' செய்வதற்கு சாத்தியம் குறைவு. இதுதொடர்பான முழுமையான விளக்கங்களை, அத்துறை நிபுணர்களிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ரவிசங்கர் கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, அவர் உயிரிழந்து விட்டார். ஜெயலலிதாவுக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், எந்த தவறும் இல்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டாலும், பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட, டிச., 4ம் தேதிக்கு பின், அவரது உடல் பதப்படுத்தும் பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கலாம். அதனால், 'எம்பாமிங்' செய்ய, 15 நிமிடம் போதுமானதாக அமைந்தது. மாரடைப்பு ஏற்பட்ட பின், செலுத்தப்பட்ட 'எக்மோ' சிகிச்சை கருவி, தமிழக அரசிடம் தெரிவித்த பின், அகற்றப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024