Sunday, March 12, 2017


பெண்களை வசியம் செய்வது, ஆவிகளுடன் பேசுவது..! போலீஸையே அதிரவைத்த மந்திரவாதி!



பில்லி, சூனியம், மாந்திரீக வகுப்பு கற்றுக்கொடுப்பதற்காக பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி பெட்டிக்குள் வைத்திருந்து பூஜை செய்த மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்ததை போன்று தற்போதும் இதேபோன்று நடந்துள்ள சம்பவம் பெரம்பலூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக பின்புறத்தில் உள்ள எம்.எம்.நகரில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அந்தவீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, பில்லி சூனியம் கற்றுக்கொடுப்பதற்காக வீட்டில் பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி வைத்திருந்து மாந்திரீகம் செய்தது தெரியவந்தது. புகாரின் பெயரில் மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை கைது செய்ததுமட்டுமில்லாமல் இங்கு பெண் சடலம் எப்படி வந்தது, யார் இந்த பெண், என்ற பல கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீஸார்.



இது குறித்து போலீஸாருக்கு புகார் கொடுத்த குமார் என்பவரிடம் பேசினோம். "பெரம்பலூர் கல்யாண் நகரைச்சேர்ந்தவர் கார்த்திக். இவர் எம்.எம்.நகரிலுள்ள வாடகை வீட்டில் நான்கு வருடமாக வசித்து வருகிறார். இவர், ஆண்டவனோடு மட்டுமில்லாமல் இறந்து போனவர்களோடு பேசுவதாகவும், அதை கற்றுக்கொடுப்பதாகவும் பல சொல்லுவார்கள். இவரிடம் உள்ளூர் மக்கள் யாரும் பேசமாட்டார்கள். ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என வெளிமாநிலத்திலிருந்து பலர் கார்களில் கார்த்திக் வீட்டிற்கு வருவார்கள். காலையில் வந்தால் அடுத்தநாள் காலையில்தான் அவர்கள், வெளியே வருவார்கள். எதற்கு வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது. நேற்று மதியம் கார்த்திக் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இவர், ஏதோ செய்கிறார் என்ற சந்தேகத்தின் பெயரில்தான் போலீஸுக்கு தகவல் தெரிவித்தேன். போலீஸார் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் மண்டை ஓடு, உக்கிரகாளியின் சிலைகள் அருகே பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுமட்டுமில்லாமல், எலுமிச்சை பழங்கள், பில்லி சூனியத்துக்கு பயன்படுத்தும் கறுப்பு மை, நிறைய கிண்ணத்தில் கறுப்பு கறுப்பாக என்னென்னமோ இருந்தது. பிறகுதான் தெரிந்தது, வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் அந்த வீட்டில், பில்லி சூனியம், வகுப்பு கற்றுக்கொண்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல், இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களை பேச வைப்பதற்கான பூஜைகளும் நடந்துள்ளது. அதற்குண்டான தடயங்களும் இருந்தது. இதைப்பார்த்த, போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அதே போல் பெண்களையும், ஆண்களையும் வசியம் செய்வது மற்றும் பல்வேறு பிரச்னைகளை மந்திரம் மூலம் தீர்த்துவைப்பதாக கூறி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வருபவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். இதனை தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த கம்ப்யூட்டரை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.



கடந்த ஏப்ரல் 18ம் தேதி பெரம்பலூர் அடுத்து நாரணமங்கலம் அருகே உள்ள மருதடி கிராமத்தில் இரவு நேரத்தில் நரபலி கொடுக்கிறார்கள் என்று பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரின் பாடாலூர் போலீஸார், மந்திரவாதி கார்த்திக் அமைத்திருந்த குடிலுக்குள் சென்று சோதனை செய்ததில், நரபலி கொடுத்தது, மண்டை ஓடு, பன்றித்தலை போன்றவைகளை வைத்திருந்தார். இந்த குற்றத்துக்காக மந்திரவாதி கார்த்திக் மற்றும் கூட்டாளிகள் சித்திக், சலீம், சாதிக், ராம்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இப்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் உண்மையான மந்திரவாதியா, இல்லை மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறாரா என்பதை முதலில் கண்டுப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இந்த கும்பல் போலீஸாரிடம் சிக்கிக்கொண்ட பிறகும் மீண்டும் இந்த தொழில் செய்கிறார்கள் என்றால், இவர்களுக்கு யார் பின் புலமாக இருப்பது. இவர்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீஸார் கண்டுபிடிக்கவேண்டும். இவர்கள் இங்கு மட்டும்தான் இந்த தொழில் செய்துகொண்டிருக்கிறார்களா, இல்லை வேறு எங்கும் கிளைவைத்து நடத்தி மக்களை ஏமாற்றிகொண்டிருக்கிறார்களா என்றும் விசாரிக்கவேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்" என்று ஆவேசப்பட்டார் குமார்.

விசாரணை நடத்திவரும் போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, "இவர்கள் புதிதாக சிக்கவில்லை. ஏற்கனவே மருதடி கிராமத்தில் நரபலி கொடுத்ததாக நாங்களே பிடித்தோம். இப்போது இரண்டாவது முறை சிக்கியிருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர், இறந்த சடலம் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது மருத்துவமனையில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும், விசாரணை நடத்தி வருகின்றோம். இப்போதுதான், விசாரணை நடந்துக்கொண்ருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு பேசுகிறோம்" என்றார்கள்.

எம்.திலீபன்

படங்கள்: ராபர்ட்

உபி-யின் பாதையில்... இனி இந்தியாவின் பயணம்!

இந்தியாவும்... உத்திரப் பிரதேசமும்...

8 கோடி ஜனத்திரள்.... 403 சட்டமன்றத் தொகுதிகள்... என்று பரந்து விரிந்து கிடக்கும் உபி-தான் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்ஜியம். ‘உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெறுபவரே இந்தியப் பிரதமராக இருப்பார்; இந்தியாவை ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே உத்தரபிரதேசத்தின் முதல்வராக இருப்பார்’ என்பது இந்திய அரசியல் விதிகளில் மிக முக்கியமான விதி.



நேருவில் தொடங்கி மோடி வரையில் நூற்றுக்கு 99.9 சதவிகிதம் சரியாக இருக்கும் இந்த விதி, உ.பி முதலமைச்சர்கள் விஷயத்தில் இடையில் கொஞ்சம் பிசகிப்போனது. பகுஜன்சமாஜ்ஜின் மாயவதியும், சமாஜ்வாடியின் முலாயம்சிங்கும், பி.ஜே.பியின் கல்யாண்சிங்கும், காங்கிரஸைக் காலிசெய்து அந்தப் பிசகை உருவாக்கினார்கள். அதன்பிறகு பி.ஜே.பி-யையும் துரத்தி அடித்து மாயவதியும் முலாயம்சிங்கும் மாறிமாறி கோலேச்சிக் கொண்டிருந்தனர். இந்தியாவை ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் உத்தரபிரதேசத்தை அதன் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால், 2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பழைய விதிக்குள் உத்தரபிரதேசத்தை கச்சிதமாகப் பொருத்தி வைத்துவிட்டது. இப்போது, உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெற்ற மோடியே இந்தியாவை ஆள்கிறார்; இந்தியாவையே ஆளும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவரே உத்தரபிரதேசத்தின் முதல்வராகப் போகிறார்.

பில்டிங்கும் ஸ்டிராங்... பேஸ்மட்டமும் ஸ்டிராங்...

உத்தரபிரதேசத்தில் பி.ஜே.பி பெற்றுள்ள இந்த வெற்றி அந்த மாநிலத்தின் சட்டமன்றத்தில் மட்டும் எதிரொலிக்கப் போவதில்லை. இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள்ளும் புகுந்து இந்தியாவின் தலையெழுத்தை எழுதப்போகிறது. இதுநாள்வரை ‘பில்டிங் ஸ்டிராங்... பேஸ்மட்டம் வீக்’ என்றரீதியில் ‘மக்களவையில் அசுர பலம்... மாநிலங்களவையில் மோசமான பலவீனம்...’ என்று பி.ஜே.பி நொண்டியடித்துக் கொண்டிருந்தது. பி.ஜே.பி எந்த மசோதாவைக் கொண்டுவந்தாலும் அது மக்களவையில் சாதாரணமாகக் கரையேறியது; மாநிலங்களவையில் மூச்சுத் திணறி மூழ்கிக் கிடந்தது. அதில் இருந்து தப்பிக்க மத்திய அரசு ‘அவசரச் சட்டம்’ என்ற ரகசிய வழியைக் கண்டுபிடித்தது. எந்த ஆட்சியிலும் இல்லாதவகையில் மோடியின் ஆட்சியில் அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உச்சக்கட்ட காமெடிகள் நாடாளுமன்றத்தில் அரங்கேறின. அவைகளில் இருந்த பைல்கள் யாருக்கும் தெரியாமல் ஜனாதிபதி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டன. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பைல்களைக் காணவில்லை என்று கதறிக்கொண்டிருந்தபோது, அவை ஜனாதிபதி மாளிகையில் சத்தமில்லாமல் கையெழுத்தானது.



காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி-க்களுக்கு மட்டும் தெரியாமல் அந்தப் பைல்கள் கொண்டுபோகப்படவில்லை; பி.ஜே.பி எம்.பி-க்களுக்கும் தெரியாமல் எடுத்துச் செல்லப்பட்டன. இனிமேல் அப்படிபட்ட இக்கட்டானநிலை பி.ஜே.பி-க்கு இருக்காது. உ.பி உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு விடுதலையைக் கொடுத்துள்ளன. இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் பி.ஜே.பி-க்கு கணிசமாக ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்கப்போவது உறுதி.

இரண்டு அவைகளும் இனி பி.ஜே.பி-யின் சபை!

பி.ஜே.பி-க்கு மக்களவையில் 283 எம்.பி.க்கள் உள்ளனர். அங்கு பிரச்னை இல்லை. பி.ஜே.பி தனி ஆவர்த்தனம் நடத்தலாம்; இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில் பி.ஜே.பி-க்கு 56 எம்.பி-க்களே உள்ளனர். அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 59 எம்.பி-க்களும், அ.தி.மு.க-வுக்கு 13 பேரும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 9 பேரும் உள்ளனர். இவர்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்துகொண்டு பி.ஜே.பி கொண்டுவரும் மசோதாக்களை கடுமையாக எதிர்ப்பவர்கள். அதனால் மெஜாரிட்டி பலம் இல்லாமல் அங்கு பி.ஜே.பி நொண்டியடித்துக் கொண்டிருந்தது. இனி உ.பி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்ற வெற்றியின் மூலம் எப்படியும் 10 முதல் 15 மாநிலங்களவை உறுப்பினர்களை பி.ஜே.பி பெற்றுவிடும். அதன்மூலம் மாநிலங்களவையிலும் பி.ஜே.பியின் பலம் கணிசமாக அதிகரிக்கும். அதனால் இதுவரை கிடப்பில் உள்ள மசோதாக்கள், அவரச் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறாமல் கிடக்கும் சட்டங்கள் எல்லாம் விரைவில் நிறைவேறும். வேகவேகமாக நிறைவேறும்.

உ.பி. வெற்றியும்... ஜனாதிபதித் தேர்தலும்!



உ.பி வெற்றியின் மூலம் ஜனாதிபதித் தேர்தலிலும் பி.ஜே.பி-யின் கை ஓங்கப்போகிறது. தற்போது உள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அடுத்த முறை தங்கள் கட்சியைச் சார்ந்தவரை ஜனாதிபதியாக்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது. இப்போது அதுவும் சாத்தியமாகும் தூரத்துக்கு வந்துவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநில சட்டமன்றங்களில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பார்கள். தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் வாக்குகளின் மொத்த மதிப்பு 10.98 லட்சம். இதில் 5.49 லட்சம் வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு - 708; அதன்படிபார்த்தால் மொத்தமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எம்.பி-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மதிப்பு 4 ஆயிரத்து 120. இந்த எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 474. எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. அதனால் மாநிலத்துக்கு மாநிலம் எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு மாறுபடும். அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் வெற்றி பெறும் ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்புதான் மிக அதிகம். ஏனென்றால் உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 8 கோடி. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் எம்.எல்.ஏ-க்களின் ஓட்டு மதிப்பும் அதிகம்.

 ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும் பி.ஜே.பிக்கும் கடும்போட்டி இருந்தது. முழுமையாக உ.பி தேர்தல் முடிவுகள் வெளியாகி பி.ஜே.பி அங்கு ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பி.ஜே.பி-க்கே சாதகமாக முடியும். மொத்தத்தில் இனி நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி கொண்டுவரப்போகும் எல்லா சட்டங்களும் திட்டங்களும் உ.பி-யின் உதவியில் நிறைவேறும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பி.ஜே.பி-யின் சபைகளாகும். ஜனாதிபதி மாளிகையும் விரைவில் பி.ஜே.பி வசமாகும். இத்தனை சாத்தியங்களையும் பி.ஜே.பி-க்கு சாதகமாக்க உள்ளது உ.பி. தேர்தல் முடிவு. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தன் பயணத்தைத் தொடங்கிய பி.ஜே.பி, இனி உ.பி-யின் உதவியில் தன் இலக்கை நோக்கி வேகமாக ஓடும். இந்தியாவை அந்த வழியிலேய தன் போக்குக்கு எளிதாக இழுத்துச் செல்லும். பி.ஜே.பி-யின் இந்தப் பயணம் இந்தியாவுக்கு நன்மையில் முடியுமா... தீமைகளைக் கொண்டு வந்து சேர்க்குமா... என்பதை இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகே தீர்மானிக்க முடியும்.


ஜோ.ஸ்டாலின்.

மீண்டும் வருகிறது பழைய ஸ்டேட்டஸ் வசதி...தோல்வியை ஒப்புக்கொள்கிறதா வாட்ஸ்அப்? #WhatsappUpdate

புதிய ஸ்டேட்டஸ் வசதிக்கு பயனாளர்களிடம் இருந்து நிறைய அன்லைக்ஸ் குவிந்ததால், தனது பீட்டா வெர்ஷனில் மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் வசதியை சோதனை செய்கிறது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த மாதம் 24-ம் தேதி புதிய ஸ்டேட்டஸ் வசதியை அறிமுகம் செய்தது. இதன்படி வீடியோ, Gif மற்றும் புகைப்படங்களை ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். பின்பு இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் கழித்து மறைந்துவிடும். இந்தப் புதிய அப்டேட் வந்ததில் இருந்து, இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய விமர்சனங்கள் குவிந்தன. அனைவருடைய ஸ்டேட்டசையும் பார்க்க முடிவது, நாம் யார் ஸ்டேட்டசை பார்த்தாலும் தெரிவது, தினமும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய வேண்டும் என அதில் சில குறைகள் இருந்ததால், மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் அப்டேட்தான் வேண்டும் என சோஷியல் மீடியாக்களில் கமென்ட் அடித்தனர் நெட்டிசன்ஸ். இதனை நோட் செய்த வாட்ஸ்அப், தற்போது தனது பழைய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வசதியை பீட்டா வெர்ஷனில் சோதனை செய்கிறது. இதனைப் பயன்படுத்த நீங்கள் வாட்ஸ்அப் பீட்டா பயனளாராக மாறி, ஆப்பை அப்டேட் செய்தால் போதும்.



புதிய அப்டேட் செய்தாலும், தற்போது இருக்கும் 24 மணி நேர ஸ்டேட்டஸ் வசதி மாறாது. அதனை நீங்கள் இப்போதும் பயன்படுத்தலாம். அதே சமயம், உங்களுடைய 'Settings' பகுதிக்கு சென்று, உங்கள் புரொபைல் பிக்சரை க்ளிக் செய்வதன் மூலமாக, நீங்கள் பழைய மாதிரியான டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். உங்களுடைய டி.பி.,க்கு கீழே இருக்கும் 'About and Phone number' என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்து உங்கள் புதிய ஸ்டேட்டஸை வைக்க முடியும். இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் ஆனாலும் மறையாது. அத்துடன் முன்னர் இருந்த Available, Busy, At school, At the Movies, At work, In a meeting போன்ற ஸ்டேட்டஸ் ஆப்ஷன்களும் மீண்டும் வந்துள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம். ஆனால் இந்த ஸ்டேட்டஸ் பகுதியை காலியாக விட முடியாது. ஒருவேளை நீங்கள் அப்டேட் செய்துவிட்டு, இந்தப் பகுதியில் எந்த ஸ்டேட்டஸும் வைக்கவில்லை என்றால், உங்களுடைய பழைய ஸ்டேட்டஸ் தானாகவே அப்டேட் ஆகிவிடும். பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி என்பதால், உங்களுடைய இந்த டெக்ஸ்ட் ஸ்டேட்டஸை வேறு யாரும் தற்போது பார்க்க முடியாது.



இந்த பீட்டா வெர்ஷன் இன்னும் சிலருக்கு வரவில்லை. விரைவில் இந்த வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும். அதன்பின்பு பீட்டா மட்டுமின்றி, அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும். இதுமட்டுமின்றி இன்னும் ஒரு குட்டி மாற்றம் ஒன்றையும் செய்துள்ளது வாட்ஸ்அப். குறிப்பிட்ட நபருக்கு ஃபைல்களை அனுப்ப ஃபைல்களை அட்டாச் செய்யும் போது, அட்டாச் ஐகானை க்ளிக் செய்து அனுப்புவோம். அந்த ஐகானை தற்போது இடம் மாற்றியுள்ளது வாட்ஸ்அப். இதற்கு முன்பு மேற்பகுதியில் இருந்த இந்த ஐகான், தற்போது கேமரா ஐகானுக்கு அருகே இடம் மாறியுள்ளது. வீடியோ கால், வாய்ஸ் கால் இரண்டிற்கும் தனித்தனி ஐகான்கள் இருக்கின்றன.

இந்த சோதனையின் மூலம், தனது புதிய ஸ்டேட்டஸ் வசதி தோல்வி அடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறது வாட்ஸ்அப்.

எப்படி பீட்டா வெர்ஷன் அப்டேட் செய்வது?

கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, வாட்ஸ்அப் பக்கத்திற்கு செல்லவும். அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் “Became a beta tester” என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் கீழே இருக்கும் I’M IN என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப்பின் பீட்டா பயனாளராக மாறிடலாம்.

Saturday, March 11, 2017

சிங்கப்பூருக்குள் நீந்தி வர முயன்ற ஆடவர்கள் கைது

சிங்கப்பூருக்குள் நீந்தி வர முயன்ற ஆடவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது வயது 30; மற்றவருக்கு 33.
அதிகாலை சுமார் ஒன்றேகால் மணியளவில், உட்லண்ஸ் நீர்முகப்புக்கு அருகே சிங்கப்பூரை நோக்கி அவர்கள் நீந்தி வருவதைக் கரையோரக் காவற்படை அதிகாரி கண்டுபிடித்தார்.
அதையடுத்து, தரை வழிப் பாதுகாப்பு, கடற்பாதுகாப்புப் படையினர் விரைந்து செயலாற்றி அந்தச் சந்தேக நபர்களைக் கைதுசெய்தனர். போலீஸார் அந்தத் தகவலை வெளியிட்டனர்.
அந்த ஆடவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் தங்கியதாகவோ, சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகவோ நிரூபிக்கப்பட்டால், 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனையும், குறைந்தது 3 பிரம்படியும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து வெளியேறினால் 2000 வெள்ளி வரையிலான அபராதம், 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

கரப்பான்பூச்சித் தொல்லை: ஜூரோங் பாயிண்ட்டின் 2 உணவுக்கடைகள் தற்காலிக மூடல்

சிங்கப்பூர்: ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியின் கோப்பித்தியாம் உணவங்காடியின் இரண்டு கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கரப்பான்பூச்சிப் பெருக்கத்தைத் தடுக்கத் தவறியது உட்பட பொது சுகாதார மீறல்களின் காரணமாக இரண்டு வாரங்களுக்கு அந்தக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தேசியச் சுற்றுப்புற அமைப்பு கடந்த வாரம் அந்தக் கடைகளுக்கு சேவைகளை முடக்குமாறு அறிக்கை விடுத்தது.
ஒவ்வொரு கடைக்கும் $800 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு சுகாதாரத்தின் தொடர்பிலும் தனிப்பட்ட முறையில் சுத்தமாக இருப்பதன் தொடர்பிலும் நல்ல நடைமுறைகளை எப்போதும் பின்பற்றும்படி உணவு உரிமையாளர்களுக்குச் சுற்றுப்புற அமைப்பு நினைவூட்டுகிறது.

அந்த மூன்று பேர்! நாட்டையே திரும்பி பார்க்கவைக்கும் கண்டமங்கலம் கிராம இளைஞர்கள்!



இப்போதிருக்கும் இளைஞர்களை கேட்டுப்பாருங்கள். உங்களின் நோக்கம் என்னவென்று. அவர்கள் சட்டென பதில் சொல்வார்கள் "டாக்டர், என்ஜினீயர், லாயர்" என்று. ஆனால், கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்து இளைஞர்களோ, "ராணுவ வீரர்" ஆவதுதான் எங்களின் நோக்கம் என்று தடாலடியடிக்கிறார்கள்.

மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இதுவும் ஒன்று. வருடத்தில் ஒருபோகம் மட்டுமே வடவாற்று புண்ணியத்தில் விவசாயத்தை பார்க்கும் கிராமம். மீதி நாடுகள் எல்லாம் வானம்பார்த்த பூமிதான். அப்படிப்பட்ட இந்தக் கிராமத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் குறைந்தது பத்து இளைஞர்களாவது ராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள். அதன்படி, இக்கிராமத்தில் சுமார் 200க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இக்கிராமத்தை "ராணுவ கிராமம்" என்கிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளங்கீரனிடம் பேசினோம், "தமிழகத்தில், ராணுவ வீரர்கள் என்றாலே நமக்கெல்லாம் சட்டென நினைவுக்கு வருவது வேலூர் மாவட்டம்தான். அதற்கடுத்ததாக சொல்லப்படுவது இந்தக் கிராமம். சுமார் 40 வருடத்துக்கு முன்பு இப்பகுதியில் கடுமையான வறட்சி. விவசாயம் முற்றிலும் பொய்த்து போனது. அப்போது, வேறு வழியில்லாமல் இப்பகுதி மக்கள் பிழைப்புத்தேடி அண்டை மாநிலங்களுக்கு ஓடினார்கள். அப்போதுதான் அகோரமூர்த்தி, தங்கசாமி, ராமலிங்கம் என பலர் வறுமைக்குப் பயந்து அப்போது ராணுவத்தில் சேர்ந்தார்கள். அவர்களின் வழிகாட்டுதல்கள்தான் இக்கிராமத்து இளைஞர்களுக்கு ராணுவ வீரராக வேண்டும் என்ற நோக்கம் படிப்படியாக வளர்ந்தது. அதன்படி ஒவ்வொரு இளைஞர்களாக ராணுவத்தில் சேர்ந்தார்கள். இப்போது, கிராமத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களின் நோக்கமே ராணுவத்தில் சேர்வதுதான்.



அதற்காக அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளையும், சலுகைகளையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. தங்களுடைய சொந்த உழைப்பில் உடற்பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கி உடற்பயிற்சி செய்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொள்கிறார்கள். பிளஸ்2 முடித்த உடனே அதற்கான தேர்வுக்கு தயாராகிவிடுவார்கள். ஒருமுறை தேர்வில் தவறிப்போனால் அத்தோடு அதைவிட்டு விடமாட்டார்கள். அது கிடைக்கும் வரை கடுமையாக அதற்காக போராடுவார்கள். பயிற்சி செய்வார்கள். அந்தளவுக்கு மனவலிமை படைத்தவர்கள் எங்கள் கிராமத்து இளைஞர்கள். இவர்களுக்கு ராணுவத்தில் உள்ளவர்களும், முன்னால் ராணுவ வீரர்களும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இன்னும் சில ராணுவ வீரர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து போகும்போது, அவர்களுடன் சிலரை கூடவே கூட்டிகிட்டு போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்து ராணுவத்தில் சேர்வதற்கு உதவி செய்வார்கள்.



இவர்களுக்கு பிடித்த விளையாட்டே தமிழர்களின் வீர விளையாட்டான கபடிதான். இக்கிராமத்தில் சின்னப்பிள்ளைகளிலிருந்து, பெரியவர்கள் வரை எல்லோரும் கபடி வீரர்கள்தான். அதை நிரூபித்துக்கொள்ள தங்களுக்குள்ளேயே அடிக்கடி கபடிப்போட்டிகள் நடத்துவார்கள். அடுத்த வருட தேர்வுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தற்போது பெருமளவில் இளைஞர்கள் தயாராகிவிட்டார்கள். இதற்காக ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரும் 1000 ரூபாய் போட்டு அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்க உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் ராணுவத்தில் சேரும்போது அவரவர் வீட்டில் திருவிழாத்தான். அவர்கள் ஊருக்கே விருந்து வைத்துவிடுவார்கள்" என்றகிறார் முக மலர்ச்சியோடு.

- க.பூபாலன்

படம்: தேவராஜன்

அமரீந்தருக்கு பஞ்சாப் கொடுத்த பிறந்த நாள் பரிசு இது தான்!!!
பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான கேப்டன் அமரீந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளார். அமரீந்தர் சிங் பஞ்சாபில் லம்பி மற்றும் பாட்டியலா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். பாட்டியலாவில் சுமார் 52,375 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.



பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 74 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது. அமரீந்தர் சிங் மீண்டும் முதல்வராகிறார். இன்று 75 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அமரீந்தருக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்துள்ளது இந்த வெற்றி!



வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...