அந்த மூன்று பேர்! நாட்டையே திரும்பி பார்க்கவைக்கும் கண்டமங்கலம் கிராம இளைஞர்கள்!
இப்போதிருக்கும் இளைஞர்களை கேட்டுப்பாருங்கள். உங்களின் நோக்கம் என்னவென்று. அவர்கள் சட்டென பதில் சொல்வார்கள் "டாக்டர், என்ஜினீயர், லாயர்" என்று. ஆனால், கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்து இளைஞர்களோ, "ராணுவ வீரர்" ஆவதுதான் எங்களின் நோக்கம் என்று தடாலடியடிக்கிறார்கள்.
மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இதுவும் ஒன்று. வருடத்தில் ஒருபோகம் மட்டுமே வடவாற்று புண்ணியத்தில் விவசாயத்தை பார்க்கும் கிராமம். மீதி நாடுகள் எல்லாம் வானம்பார்த்த பூமிதான். அப்படிப்பட்ட இந்தக் கிராமத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் குறைந்தது பத்து இளைஞர்களாவது ராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள். அதன்படி, இக்கிராமத்தில் சுமார் 200க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இக்கிராமத்தை "ராணுவ கிராமம்" என்கிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளங்கீரனிடம் பேசினோம், "தமிழகத்தில், ராணுவ வீரர்கள் என்றாலே நமக்கெல்லாம் சட்டென நினைவுக்கு வருவது வேலூர் மாவட்டம்தான். அதற்கடுத்ததாக சொல்லப்படுவது இந்தக் கிராமம். சுமார் 40 வருடத்துக்கு முன்பு இப்பகுதியில் கடுமையான வறட்சி. விவசாயம் முற்றிலும் பொய்த்து போனது. அப்போது, வேறு வழியில்லாமல் இப்பகுதி மக்கள் பிழைப்புத்தேடி அண்டை மாநிலங்களுக்கு ஓடினார்கள். அப்போதுதான் அகோரமூர்த்தி, தங்கசாமி, ராமலிங்கம் என பலர் வறுமைக்குப் பயந்து அப்போது ராணுவத்தில் சேர்ந்தார்கள். அவர்களின் வழிகாட்டுதல்கள்தான் இக்கிராமத்து இளைஞர்களுக்கு ராணுவ வீரராக வேண்டும் என்ற நோக்கம் படிப்படியாக வளர்ந்தது. அதன்படி ஒவ்வொரு இளைஞர்களாக ராணுவத்தில் சேர்ந்தார்கள். இப்போது, கிராமத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களின் நோக்கமே ராணுவத்தில் சேர்வதுதான்.
அதற்காக அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளையும், சலுகைகளையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. தங்களுடைய சொந்த உழைப்பில் உடற்பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கி உடற்பயிற்சி செய்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொள்கிறார்கள். பிளஸ்2 முடித்த உடனே அதற்கான தேர்வுக்கு தயாராகிவிடுவார்கள். ஒருமுறை தேர்வில் தவறிப்போனால் அத்தோடு அதைவிட்டு விடமாட்டார்கள். அது கிடைக்கும் வரை கடுமையாக அதற்காக போராடுவார்கள். பயிற்சி செய்வார்கள். அந்தளவுக்கு மனவலிமை படைத்தவர்கள் எங்கள் கிராமத்து இளைஞர்கள். இவர்களுக்கு ராணுவத்தில் உள்ளவர்களும், முன்னால் ராணுவ வீரர்களும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இன்னும் சில ராணுவ வீரர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து போகும்போது, அவர்களுடன் சிலரை கூடவே கூட்டிகிட்டு போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்து ராணுவத்தில் சேர்வதற்கு உதவி செய்வார்கள்.
இவர்களுக்கு பிடித்த விளையாட்டே தமிழர்களின் வீர விளையாட்டான கபடிதான். இக்கிராமத்தில் சின்னப்பிள்ளைகளிலிருந்து, பெரியவர்கள் வரை எல்லோரும் கபடி வீரர்கள்தான். அதை நிரூபித்துக்கொள்ள தங்களுக்குள்ளேயே அடிக்கடி கபடிப்போட்டிகள் நடத்துவார்கள். அடுத்த வருட தேர்வுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தற்போது பெருமளவில் இளைஞர்கள் தயாராகிவிட்டார்கள். இதற்காக ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரும் 1000 ரூபாய் போட்டு அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்க உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் ராணுவத்தில் சேரும்போது அவரவர் வீட்டில் திருவிழாத்தான். அவர்கள் ஊருக்கே விருந்து வைத்துவிடுவார்கள்" என்றகிறார் முக மலர்ச்சியோடு.
- க.பூபாலன்
படம்: தேவராஜன்
No comments:
Post a Comment