மீண்டும் வருகிறது பழைய ஸ்டேட்டஸ் வசதி...தோல்வியை ஒப்புக்கொள்கிறதா வாட்ஸ்அப்? #WhatsappUpdate
புதிய ஸ்டேட்டஸ் வசதிக்கு பயனாளர்களிடம் இருந்து நிறைய அன்லைக்ஸ் குவிந்ததால், தனது பீட்டா வெர்ஷனில் மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் வசதியை சோதனை செய்கிறது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த மாதம் 24-ம் தேதி புதிய ஸ்டேட்டஸ் வசதியை அறிமுகம் செய்தது. இதன்படி வீடியோ, Gif மற்றும் புகைப்படங்களை ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். பின்பு இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் கழித்து மறைந்துவிடும். இந்தப் புதிய அப்டேட் வந்ததில் இருந்து, இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய விமர்சனங்கள் குவிந்தன. அனைவருடைய ஸ்டேட்டசையும் பார்க்க முடிவது, நாம் யார் ஸ்டேட்டசை பார்த்தாலும் தெரிவது, தினமும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய வேண்டும் என அதில் சில குறைகள் இருந்ததால், மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் அப்டேட்தான் வேண்டும் என சோஷியல் மீடியாக்களில் கமென்ட் அடித்தனர் நெட்டிசன்ஸ். இதனை நோட் செய்த வாட்ஸ்அப், தற்போது தனது பழைய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வசதியை பீட்டா வெர்ஷனில் சோதனை செய்கிறது. இதனைப் பயன்படுத்த நீங்கள் வாட்ஸ்அப் பீட்டா பயனளாராக மாறி, ஆப்பை அப்டேட் செய்தால் போதும்.
புதிய அப்டேட் செய்தாலும், தற்போது இருக்கும் 24 மணி நேர ஸ்டேட்டஸ் வசதி மாறாது. அதனை நீங்கள் இப்போதும் பயன்படுத்தலாம். அதே சமயம், உங்களுடைய 'Settings' பகுதிக்கு சென்று, உங்கள் புரொபைல் பிக்சரை க்ளிக் செய்வதன் மூலமாக, நீங்கள் பழைய மாதிரியான டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். உங்களுடைய டி.பி.,க்கு கீழே இருக்கும் 'About and Phone number' என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்து உங்கள் புதிய ஸ்டேட்டஸை வைக்க முடியும். இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் ஆனாலும் மறையாது. அத்துடன் முன்னர் இருந்த Available, Busy, At school, At the Movies, At work, In a meeting போன்ற ஸ்டேட்டஸ் ஆப்ஷன்களும் மீண்டும் வந்துள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம். ஆனால் இந்த ஸ்டேட்டஸ் பகுதியை காலியாக விட முடியாது. ஒருவேளை நீங்கள் அப்டேட் செய்துவிட்டு, இந்தப் பகுதியில் எந்த ஸ்டேட்டஸும் வைக்கவில்லை என்றால், உங்களுடைய பழைய ஸ்டேட்டஸ் தானாகவே அப்டேட் ஆகிவிடும். பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி என்பதால், உங்களுடைய இந்த டெக்ஸ்ட் ஸ்டேட்டஸை வேறு யாரும் தற்போது பார்க்க முடியாது.
இந்த பீட்டா வெர்ஷன் இன்னும் சிலருக்கு வரவில்லை. விரைவில் இந்த வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும். அதன்பின்பு பீட்டா மட்டுமின்றி, அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும். இதுமட்டுமின்றி இன்னும் ஒரு குட்டி மாற்றம் ஒன்றையும் செய்துள்ளது வாட்ஸ்அப். குறிப்பிட்ட நபருக்கு ஃபைல்களை அனுப்ப ஃபைல்களை அட்டாச் செய்யும் போது, அட்டாச் ஐகானை க்ளிக் செய்து அனுப்புவோம். அந்த ஐகானை தற்போது இடம் மாற்றியுள்ளது வாட்ஸ்அப். இதற்கு முன்பு மேற்பகுதியில் இருந்த இந்த ஐகான், தற்போது கேமரா ஐகானுக்கு அருகே இடம் மாறியுள்ளது. வீடியோ கால், வாய்ஸ் கால் இரண்டிற்கும் தனித்தனி ஐகான்கள் இருக்கின்றன.
இந்த சோதனையின் மூலம், தனது புதிய ஸ்டேட்டஸ் வசதி தோல்வி அடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறது வாட்ஸ்அப்.
எப்படி பீட்டா வெர்ஷன் அப்டேட் செய்வது?
கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, வாட்ஸ்அப் பக்கத்திற்கு செல்லவும். அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் “Became a beta tester” என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் கீழே இருக்கும் I’M IN என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப்பின் பீட்டா பயனாளராக மாறிடலாம்.
No comments:
Post a Comment