Sunday, March 12, 2017


உபி-யின் பாதையில்... இனி இந்தியாவின் பயணம்!

இந்தியாவும்... உத்திரப் பிரதேசமும்...

8 கோடி ஜனத்திரள்.... 403 சட்டமன்றத் தொகுதிகள்... என்று பரந்து விரிந்து கிடக்கும் உபி-தான் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்ஜியம். ‘உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெறுபவரே இந்தியப் பிரதமராக இருப்பார்; இந்தியாவை ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே உத்தரபிரதேசத்தின் முதல்வராக இருப்பார்’ என்பது இந்திய அரசியல் விதிகளில் மிக முக்கியமான விதி.



நேருவில் தொடங்கி மோடி வரையில் நூற்றுக்கு 99.9 சதவிகிதம் சரியாக இருக்கும் இந்த விதி, உ.பி முதலமைச்சர்கள் விஷயத்தில் இடையில் கொஞ்சம் பிசகிப்போனது. பகுஜன்சமாஜ்ஜின் மாயவதியும், சமாஜ்வாடியின் முலாயம்சிங்கும், பி.ஜே.பியின் கல்யாண்சிங்கும், காங்கிரஸைக் காலிசெய்து அந்தப் பிசகை உருவாக்கினார்கள். அதன்பிறகு பி.ஜே.பி-யையும் துரத்தி அடித்து மாயவதியும் முலாயம்சிங்கும் மாறிமாறி கோலேச்சிக் கொண்டிருந்தனர். இந்தியாவை ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் உத்தரபிரதேசத்தை அதன் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால், 2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பழைய விதிக்குள் உத்தரபிரதேசத்தை கச்சிதமாகப் பொருத்தி வைத்துவிட்டது. இப்போது, உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெற்ற மோடியே இந்தியாவை ஆள்கிறார்; இந்தியாவையே ஆளும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவரே உத்தரபிரதேசத்தின் முதல்வராகப் போகிறார்.

பில்டிங்கும் ஸ்டிராங்... பேஸ்மட்டமும் ஸ்டிராங்...

உத்தரபிரதேசத்தில் பி.ஜே.பி பெற்றுள்ள இந்த வெற்றி அந்த மாநிலத்தின் சட்டமன்றத்தில் மட்டும் எதிரொலிக்கப் போவதில்லை. இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள்ளும் புகுந்து இந்தியாவின் தலையெழுத்தை எழுதப்போகிறது. இதுநாள்வரை ‘பில்டிங் ஸ்டிராங்... பேஸ்மட்டம் வீக்’ என்றரீதியில் ‘மக்களவையில் அசுர பலம்... மாநிலங்களவையில் மோசமான பலவீனம்...’ என்று பி.ஜே.பி நொண்டியடித்துக் கொண்டிருந்தது. பி.ஜே.பி எந்த மசோதாவைக் கொண்டுவந்தாலும் அது மக்களவையில் சாதாரணமாகக் கரையேறியது; மாநிலங்களவையில் மூச்சுத் திணறி மூழ்கிக் கிடந்தது. அதில் இருந்து தப்பிக்க மத்திய அரசு ‘அவசரச் சட்டம்’ என்ற ரகசிய வழியைக் கண்டுபிடித்தது. எந்த ஆட்சியிலும் இல்லாதவகையில் மோடியின் ஆட்சியில் அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உச்சக்கட்ட காமெடிகள் நாடாளுமன்றத்தில் அரங்கேறின. அவைகளில் இருந்த பைல்கள் யாருக்கும் தெரியாமல் ஜனாதிபதி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டன. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பைல்களைக் காணவில்லை என்று கதறிக்கொண்டிருந்தபோது, அவை ஜனாதிபதி மாளிகையில் சத்தமில்லாமல் கையெழுத்தானது.



காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி-க்களுக்கு மட்டும் தெரியாமல் அந்தப் பைல்கள் கொண்டுபோகப்படவில்லை; பி.ஜே.பி எம்.பி-க்களுக்கும் தெரியாமல் எடுத்துச் செல்லப்பட்டன. இனிமேல் அப்படிபட்ட இக்கட்டானநிலை பி.ஜே.பி-க்கு இருக்காது. உ.பி உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு விடுதலையைக் கொடுத்துள்ளன. இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் பி.ஜே.பி-க்கு கணிசமாக ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்கப்போவது உறுதி.

இரண்டு அவைகளும் இனி பி.ஜே.பி-யின் சபை!

பி.ஜே.பி-க்கு மக்களவையில் 283 எம்.பி.க்கள் உள்ளனர். அங்கு பிரச்னை இல்லை. பி.ஜே.பி தனி ஆவர்த்தனம் நடத்தலாம்; இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில் பி.ஜே.பி-க்கு 56 எம்.பி-க்களே உள்ளனர். அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 59 எம்.பி-க்களும், அ.தி.மு.க-வுக்கு 13 பேரும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 9 பேரும் உள்ளனர். இவர்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்துகொண்டு பி.ஜே.பி கொண்டுவரும் மசோதாக்களை கடுமையாக எதிர்ப்பவர்கள். அதனால் மெஜாரிட்டி பலம் இல்லாமல் அங்கு பி.ஜே.பி நொண்டியடித்துக் கொண்டிருந்தது. இனி உ.பி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்ற வெற்றியின் மூலம் எப்படியும் 10 முதல் 15 மாநிலங்களவை உறுப்பினர்களை பி.ஜே.பி பெற்றுவிடும். அதன்மூலம் மாநிலங்களவையிலும் பி.ஜே.பியின் பலம் கணிசமாக அதிகரிக்கும். அதனால் இதுவரை கிடப்பில் உள்ள மசோதாக்கள், அவரச் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறாமல் கிடக்கும் சட்டங்கள் எல்லாம் விரைவில் நிறைவேறும். வேகவேகமாக நிறைவேறும்.

உ.பி. வெற்றியும்... ஜனாதிபதித் தேர்தலும்!



உ.பி வெற்றியின் மூலம் ஜனாதிபதித் தேர்தலிலும் பி.ஜே.பி-யின் கை ஓங்கப்போகிறது. தற்போது உள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அடுத்த முறை தங்கள் கட்சியைச் சார்ந்தவரை ஜனாதிபதியாக்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது. இப்போது அதுவும் சாத்தியமாகும் தூரத்துக்கு வந்துவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநில சட்டமன்றங்களில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பார்கள். தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் வாக்குகளின் மொத்த மதிப்பு 10.98 லட்சம். இதில் 5.49 லட்சம் வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு - 708; அதன்படிபார்த்தால் மொத்தமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எம்.பி-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மதிப்பு 4 ஆயிரத்து 120. இந்த எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 474. எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. அதனால் மாநிலத்துக்கு மாநிலம் எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு மாறுபடும். அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் வெற்றி பெறும் ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்புதான் மிக அதிகம். ஏனென்றால் உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 8 கோடி. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் எம்.எல்.ஏ-க்களின் ஓட்டு மதிப்பும் அதிகம்.

 ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும் பி.ஜே.பிக்கும் கடும்போட்டி இருந்தது. முழுமையாக உ.பி தேர்தல் முடிவுகள் வெளியாகி பி.ஜே.பி அங்கு ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பி.ஜே.பி-க்கே சாதகமாக முடியும். மொத்தத்தில் இனி நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி கொண்டுவரப்போகும் எல்லா சட்டங்களும் திட்டங்களும் உ.பி-யின் உதவியில் நிறைவேறும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பி.ஜே.பி-யின் சபைகளாகும். ஜனாதிபதி மாளிகையும் விரைவில் பி.ஜே.பி வசமாகும். இத்தனை சாத்தியங்களையும் பி.ஜே.பி-க்கு சாதகமாக்க உள்ளது உ.பி. தேர்தல் முடிவு. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தன் பயணத்தைத் தொடங்கிய பி.ஜே.பி, இனி உ.பி-யின் உதவியில் தன் இலக்கை நோக்கி வேகமாக ஓடும். இந்தியாவை அந்த வழியிலேய தன் போக்குக்கு எளிதாக இழுத்துச் செல்லும். பி.ஜே.பி-யின் இந்தப் பயணம் இந்தியாவுக்கு நன்மையில் முடியுமா... தீமைகளைக் கொண்டு வந்து சேர்க்குமா... என்பதை இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகே தீர்மானிக்க முடியும்.


ஜோ.ஸ்டாலின்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024