Sunday, March 12, 2017


பெண்களை வசியம் செய்வது, ஆவிகளுடன் பேசுவது..! போலீஸையே அதிரவைத்த மந்திரவாதி!



பில்லி, சூனியம், மாந்திரீக வகுப்பு கற்றுக்கொடுப்பதற்காக பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி பெட்டிக்குள் வைத்திருந்து பூஜை செய்த மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்ததை போன்று தற்போதும் இதேபோன்று நடந்துள்ள சம்பவம் பெரம்பலூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக பின்புறத்தில் உள்ள எம்.எம்.நகரில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் அந்தவீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, பில்லி சூனியம் கற்றுக்கொடுப்பதற்காக வீட்டில் பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி வைத்திருந்து மாந்திரீகம் செய்தது தெரியவந்தது. புகாரின் பெயரில் மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை கைது செய்ததுமட்டுமில்லாமல் இங்கு பெண் சடலம் எப்படி வந்தது, யார் இந்த பெண், என்ற பல கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீஸார்.



இது குறித்து போலீஸாருக்கு புகார் கொடுத்த குமார் என்பவரிடம் பேசினோம். "பெரம்பலூர் கல்யாண் நகரைச்சேர்ந்தவர் கார்த்திக். இவர் எம்.எம்.நகரிலுள்ள வாடகை வீட்டில் நான்கு வருடமாக வசித்து வருகிறார். இவர், ஆண்டவனோடு மட்டுமில்லாமல் இறந்து போனவர்களோடு பேசுவதாகவும், அதை கற்றுக்கொடுப்பதாகவும் பல சொல்லுவார்கள். இவரிடம் உள்ளூர் மக்கள் யாரும் பேசமாட்டார்கள். ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என வெளிமாநிலத்திலிருந்து பலர் கார்களில் கார்த்திக் வீட்டிற்கு வருவார்கள். காலையில் வந்தால் அடுத்தநாள் காலையில்தான் அவர்கள், வெளியே வருவார்கள். எதற்கு வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது. நேற்று மதியம் கார்த்திக் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இவர், ஏதோ செய்கிறார் என்ற சந்தேகத்தின் பெயரில்தான் போலீஸுக்கு தகவல் தெரிவித்தேன். போலீஸார் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் மண்டை ஓடு, உக்கிரகாளியின் சிலைகள் அருகே பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுமட்டுமில்லாமல், எலுமிச்சை பழங்கள், பில்லி சூனியத்துக்கு பயன்படுத்தும் கறுப்பு மை, நிறைய கிண்ணத்தில் கறுப்பு கறுப்பாக என்னென்னமோ இருந்தது. பிறகுதான் தெரிந்தது, வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் அந்த வீட்டில், பில்லி சூனியம், வகுப்பு கற்றுக்கொண்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல், இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களை பேச வைப்பதற்கான பூஜைகளும் நடந்துள்ளது. அதற்குண்டான தடயங்களும் இருந்தது. இதைப்பார்த்த, போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அதே போல் பெண்களையும், ஆண்களையும் வசியம் செய்வது மற்றும் பல்வேறு பிரச்னைகளை மந்திரம் மூலம் தீர்த்துவைப்பதாக கூறி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வருபவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். இதனை தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த கம்ப்யூட்டரை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.



கடந்த ஏப்ரல் 18ம் தேதி பெரம்பலூர் அடுத்து நாரணமங்கலம் அருகே உள்ள மருதடி கிராமத்தில் இரவு நேரத்தில் நரபலி கொடுக்கிறார்கள் என்று பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரின் பாடாலூர் போலீஸார், மந்திரவாதி கார்த்திக் அமைத்திருந்த குடிலுக்குள் சென்று சோதனை செய்ததில், நரபலி கொடுத்தது, மண்டை ஓடு, பன்றித்தலை போன்றவைகளை வைத்திருந்தார். இந்த குற்றத்துக்காக மந்திரவாதி கார்த்திக் மற்றும் கூட்டாளிகள் சித்திக், சலீம், சாதிக், ராம்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இப்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் உண்மையான மந்திரவாதியா, இல்லை மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறாரா என்பதை முதலில் கண்டுப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இந்த கும்பல் போலீஸாரிடம் சிக்கிக்கொண்ட பிறகும் மீண்டும் இந்த தொழில் செய்கிறார்கள் என்றால், இவர்களுக்கு யார் பின் புலமாக இருப்பது. இவர்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீஸார் கண்டுபிடிக்கவேண்டும். இவர்கள் இங்கு மட்டும்தான் இந்த தொழில் செய்துகொண்டிருக்கிறார்களா, இல்லை வேறு எங்கும் கிளைவைத்து நடத்தி மக்களை ஏமாற்றிகொண்டிருக்கிறார்களா என்றும் விசாரிக்கவேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்" என்று ஆவேசப்பட்டார் குமார்.

விசாரணை நடத்திவரும் போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, "இவர்கள் புதிதாக சிக்கவில்லை. ஏற்கனவே மருதடி கிராமத்தில் நரபலி கொடுத்ததாக நாங்களே பிடித்தோம். இப்போது இரண்டாவது முறை சிக்கியிருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர், இறந்த சடலம் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது மருத்துவமனையில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும், விசாரணை நடத்தி வருகின்றோம். இப்போதுதான், விசாரணை நடந்துக்கொண்ருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு பேசுகிறோம்" என்றார்கள்.

எம்.திலீபன்

படங்கள்: ராபர்ட்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024