உள்ளாட்சிக்கும் பொள்ளாச்சிக்கும் சண்டை! தினகரன் முன்னால் நடந்த களேபரம்
கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் நேற்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தடித்த வார்த்தைகளால் பேசி உள்ளனர். இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் டி.டி.வி.தினகரன் தவித்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சியையும் உள்ளாட்சியையும் கட்சியினர் சமாதானப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் ஆதரவாளர்கள் கூறுகையில், "உள்ளாட்சித்துறையில் டென்டர்கள், அமைச்சர் தரப்புக்கே கொடுக்கப்படுகின்றன. இதை அண்ணன் (ஜெயராமன்)தட்டிக் கேட்டார். இதை துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடமும் சொன்னார். அதற்கு அமைச்சர் வேலுமணி, 'கட்சிக்கு நான்தான் செலவு செய்கிறேன். அதனால் அப்படிதான் டென்டர் கொடுக்க முடியும்' என்று தைரியமாக சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரையும் தினகரன் சமரசப்படுத்த சிரமப்பட்டார். கட்சியினர் சமரசப்படுத்தினர். இல்லையென்றால் தகராறு அடிதடியில் முடிந்து இருக்கும்" என்றனர்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கூறுகையில் , "அமைச்சர் தரப்பு கொங்குமண்டலத்தில் தனியாக கோலோச்ச நினைக்கிறது. அவருக்கு வேண்டியவர்களுக்கு கட்சிப் பதவி கொடுத்துள்ளது. இதுவே பிரச்னைக்கு அடிப்படை காரணம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இந்த மண்டலத்திலிருந்து கிடைத்ததால்
அ.தி.மு.க ஆட்சி மீண்டும் மலர காரணமானது. அதற்கு நாங்கள் எப்படி உழைத்தோம் என்று அம்மாவுக்குத் தெரியும். அமைச்சர் தரப்பினரின் அனைத்து உள்விவகாரம் சின்னம்மாவுக்கு தெரியும். அவர் மீது பல புகார்கள் கட்சித்தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்றனர்.
இதுதொடர்பாக வேலுமணியும், ஜெயராமனும் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
கட்சித்தலைமை வட்டாரங்கள் கூறுகையில், "இது எங்கள் கட்சி விவகாரம் என்பதால் பதில் சொல்ல முடியாது. ஆலோசனை கூட்டத்தில் இதுபோன்ற வாக்குவாதம் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்படுவது சகஜம்தான். கட்சி என்றாலே கோஷ்டி மோதல் இருக்கத்தான் செய்யும்" என்றார்
அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் கூறுகையில் "அம்மா மறைவுக்குப் பிறகு கட்சி கட்டுப்பாட்டை இழந்து விட்டது. முன்பெல்லாம் அம்மா மீது பயம் இருக்கும். இப்போது நிலைமை மாறிவிட்டது. தினகரன் முன்னால் சண்டை நடக்கிறது. சசிகலா, சிறையில் இருப்பதால் நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல செயல்படுகிறார்கள். பன்னீர்செல்வம், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கட்சித்தலைமை பயப்படுகிறது" என்றனர்.
நமது நிருபர்
No comments:
Post a Comment