Thursday, March 30, 2017

30 th March 2017


மதுபானத்தை விட உயிர் முக்கியமானது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

By DIN  |   Published on : 30th March 2017 05:06 AM
SUPREME-COURT
'மதுபானத்தை விட உயிர் முக்கியமானது' என்று டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு குறையாமல் மதுபானக் கடைகள் தள்ளியிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை செயல்படுத்த மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள், மது விற்பனையாளர்கள் உள்ளிட்ட 66 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரம் என்பதை 100 மீட்டர் ஆகக் குறைப்பதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நவம்பர் 28-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதபதிகள் டி.ஓய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி முன் வைத்த வாதம்: தேசிய நெடுஞ்சாலை என்பது முக்கிய நகரங்களை இணைக்கிறது.

மாநில நெடுஞ்சாலை மாவட்ட தலைநகரங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கிறது. மதுபான உரிமம் தொடர்பாக மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் சுற்று வட்டாரத்தை கடந்து மதுபானக் கடைகள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற முடியுமா எனத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடைகளை அகற்ற வேண்டுமானால், தமிழகத்தில் 5,672 மதுபானக் கடைகளில் 3,321 கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதனால், வருவாய் இழப்பு ஏற்படும்' என்றார்.
இதையடுத்து, வெவ்வேறு மாநில அரசுகள் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் கே.கே. வேணுகோபால், அபிஷேக் மனு சிங்வி, கோபால் சுப்பிரமணியம், ராஜீவ் ராமசந்திரன் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.

அவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'மதுபான விற்பனையை விட மனித உயிர் முக்கியமானது. குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர் மது போதையால் உயிரிழக்க நேரிட்டால், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும்.

தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு எங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. அதே சமயம், மாநிலங்கள் தரப்பில் முன்வைத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. அவற்றைப் பரசீலிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து வியாழக்கிழமை (மார்ச் 30) பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கிறோம்' என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு !!

 - தமிழக அரசு தகவல்.

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய்
(கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 
இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-

மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.

 எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.

குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

 இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.

பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
 கொள்கையை மாற்றுமா வாட்ஸ் ஆப்

சமீபத்தில், பிரிட்டனின் லண்டன் நகரில், காலித் மசூத் என்ற, 50 வயது பிரிட்டிஷ்காரர் நடத்திய தாக்குதலில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில், தாக்குதலை நடத்துவதற்கு முன், 'வாட்ஸ் ஆப்' சமூகதளம் மூலம், காலித் மசூத் சிலருக்கு செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. இது, அனைத்து மக்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், வாட்ஸ் ஆப் சேவை கிடைப்பது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

வாட்ஸ் ஆப் என்பது, மிகவும் பாதுகாப்பாக, ஒருவருக்கு, மற்றொருவர் செய்தி அனுப்பும் முறை. இந்த சமூகதளத்தை பயன்படுத்தி அனுப்பப்படும் செய்தியை, மற்றவர் யாரும் பார்க்க முடியாது; விசாரணை அமைப்புகள் உட்பட, அந்த அளவுக்கு ரகசியம் காக்கும், 'என்கிரிப்ட்' எனப்படும் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சம் உள்ளது. இது நல்ல வசதி என்றாலும், மிக பெரிய பிரச்னையாகவும் உள்ளது. குறிப்பாக, பிரிட்டன் போலீஸ் இதை வெளிப்படுத்திய பின், உலகெங்கும் உள்ள, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு அமைப்புகள் இடையே, இது மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த பிரச்னை குறித்து, வாட்ஸ் ஆப் சமூகதளத்தின் உரிமையாளர்களான, 'பேஸ்புக்' சிந்திக்க வேண்டும். தங்களுக்கு வரும் செய்தியை, வேறு யாரும் பார்க்க முடியாது என்பது, பயனாளிகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். பொது மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வரை, உண்மையான நபர்களால் பயன்படுத்தப்படும் வரை, இந்த வசதி பிரச்னை இல்லை.ஆனால், இந்த வசதி, பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும்போது தான், சிக்கலே ஏற்படுகிறது.

இது போன்ற வசதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்போது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அமைப்புகள், மவுனமாக வாய் மூடி இருக்க முடியாது. பாதுகாப்பான, இது போன்ற செய்திகளை, தேவைப்படும் போது, போலீஸ் போன்ற அமைப்புகள் பார்ப்பதற்கும், அதை கொண்டு விசாரிக்கவும் எப்படி உதவ வேண்டும் என்பதை, பேஸ்புக் நிறுவனம் யோசிக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. பயனாளிகளின் சுதந்திரம் பாதிக்காத வகையில், அவர்களது ரகசியங்கள் வெளிப்படாத வகையில், இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நம் நாட்டில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு சர்ச்சையுடன் இந்த சம்பவத்தையும் ஒப்பிடலாம். சில ஆண்டுகளுக்கு முன், பிளாக்பெர்ரி மொபைலில் வரும் செய்திகளை பார்ப்பதற்கு, இந்திய அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் மிகவும் பிடிவாதமாக இருந்த, பிளாக்பெர்ரி நிறுவனம், பின், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

அமெரிக்காவில், ஆப்பிள் நிறுவனத்துக்கும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ.,க்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஒரு தம்பதியின், ஆப்பிள் போனில் உள்ள தகவல்களை தெரிவிக்கும்படி, கோர்ட்டுக்கு போனது, எப்.பி.ஐ.அரசுக்கு உதவும்படி கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனால், மொபைல் போனில் உள்ள, 'பாஸ்வேர்ட்' எனப்படும், ரகசிய குறியீட்டை கண்டுபிடிக்கும் வசதி இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது. தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதால், இவை, நம்முடைய நாட்டுக்கும் பொருந்தும். பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளை அவர்கள் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.இது போன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையிலும், தீர்வு காணும் வகையிலும், பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் என, எதிர்பார்க்கிறேன்.

ஆர்.கே.ராகவன், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர்
 'ஆன்லைன்' ஆர்.டி.ஐ., தபால் துறைக்கு விருது

ஆன்லைன்' மூலம், ஆர்.டி.ஐ., மனுக்களை பெற்று, பதிலளிக்கும் அரசு துறைகளில், 2015 - 16ம் ஆண்டின் சிறந்த பங்களிப்புக்கான விருது, தபால் துறைக்கு கிடைத்துள்ளது.

 தகவல் உரிமை சட்ட அடிப்படையில், தகவல் கோரும் மனுக்களை, 'ஆன்லைன்' முறையில் பெற்று, 'ஆன்லைன்' முறையில் பதில் அளிக்கும் பணியை, மத்திய அரசின் பல்வேறு துறைகள் செய்து வருகின்றன.இதில், 2015 - 16ம் ஆண்டில், 'ஆன்லைன்' முறையை விரிவுபடுத்தியதுடன், சிறப்பாக பங்காற்றிய தற்கான விருது, தபால் துறைக்கு கிடைத்துஉள்ளது. மத்திய வெளியுறவு துறை, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி துறைக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மனுக்களுக்கு பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவை அடிப்படையாக வைத்தும், சிறப்பாகச் செயல்பட்ட துறைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

 மத்திய அமைச்சரவை செயலகம், சராசரியாக, 10 நாட்களிலும்; பணியாளர் தேர்வாணையம், சராசரியாக, 11.5 நாட்களிலும்; பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, சராசரியாக, 11 நாட்களிலும், தகவல் கோரும் மனுக்களுக்கு பதிலளிப்பதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
- நமது நிருபர் -
 முத்திரையிட்ட ரூபாய் நோட்டு: ஊழியர் தவிப்பு

 

சென்னை: அரசு போக்குவரத்து கழக முத்திரை வைக்கப்பட்ட, புதிய, 2,000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல், ஊழியர் திண்டாடிய சம்பவம் நடந்துள்ளது. 'ரூபாய் நோட்டுகளில், எதையும் எழுதக்கூடாது' என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை பற்றி கவலைப்படாமல், நோட்டின் எண்ணிக்கை; பெயர்களை எழுதுவது தொடர்ந்தது.

 புதிய, 2,000 - 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, 'ரூபாய் நோட்டில் எழுதினால், அவை செல்லாத நோட்டாக கருதப்படும்' என, எச்சரித்தது. இந்நிலையில், திண்டிவனத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் ஒருவருக்கு கிடைத்த, 2,000 ரூபாய் நோட்டில், 'தமிழக அரசு போக்குவரத்து கழகம், திண்டிவனம்' என்ற, ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதை, மாற்ற பல வங்கிகளில் அலைந்தும், மாற்ற முடியாமல் திண்டாடி வருகிறார்.

இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என, ரிசர்வ் வங்கி அறிவிப்பால், நாங்கள் அதுபோன்ற நோட்டுகளை வாங்குவதில்லை. பொதுமக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும்' என்றார்.
 பாடம் கற்றுத்தருகிறது ஒரு பள்ளிவாசல்!

கோவை : இஸ்லாமியர்கள், 'ஒழு' செய்வதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, பூமிக்குள் செலுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.தொழுகை செய்வதற்கு முன்பாக, கை, கால் மற்றும் முகம் ஆகியவற்றை சுத்தமாகக் கழுவுவது (ஒழு), இஸ்லாமியர்கள் கடை பிடிக்கும் முக்கிய மரபாகவுள்ளது. ஒவ்வொரு பள்ளி வாசலிலும், தொழுகைக்காக ஒழு செய்ய மட்டும், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கோவையில், 100க்கும் அதிகமான பள்ளி வாசல்கள் உள்ளன; இவற்றில், ஒரு நாளைக்கு, 10 லட்சம் லிட்டர் தண்ணீர், 'ஒழு' செய்வதற்காக செலவிடப்பட்டு, சாக்கடையில் கலப்பதாக தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள கடுமையான வறட்சியால், நகரிலுள்ள சில பள்ளிவாசல்களில் ஒழு செய்யவும் தண்ணீர் இல்லாமல், விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 இதனால், பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையைத் தவிர்ப்பதற்காக, கரும்புக்கடை சல்மத் நகரிலுள்ள மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளி வாசலில், தண்ணீர் சேகரிப்புக்கான முன் மாதிரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இந்த பள்ளி வாசலில், ஒழு செய்யும் தண்ணீரை பூமிக்குள் சுத்திகரித்து அனுப்புவதற்குதேவையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி விட்டம், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு, அதில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான கூழாங்கற்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் நிரப்பப்பட்டுள்ளன. இதனால், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் நிலத்துக்குள் அனுப்பப்படுகிறது.இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. அடுத்த கட்டமாக, கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹூதா, ஒப்பணக்கார வீதி அத்தர் ஜமாஅத் பள்ளி வாசல், ஆர்.எஸ்.புரம் குர்ரதுல் அயன் ஆகிய பள்ளிவாசல்களில், இதே போன்ற தண்ணீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க முயற்சி நடப்பதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், ''கோவையில், பள்ளி வாசல்களில் ஒழு செய்ய பயன்படுத்தும் தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து, பூமிக்குள் செலுத்துவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. ''எனவே, மற்ற பள்ளி வாசல்களுக்கு முன் மாதிரியாக, இந்த கட்டமைப்பு, எங்களது பள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவனின் அருட்கொடையான தண்ணீரை, சாக்கடையில் கலந்து விரயமாக்காமல், அதை சுத்திகரிப்பு செய்து, மறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மற்ற பள்ளி வாசல்களிலும் தொடரும்,'' என்றார்.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...