Friday, March 31, 2017

ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், அவரது சொத்துக்கள் மூலமாக அபராதத்தை வசூலிக்க கோரியும் கர்நாடக அரசு சார்பில் கடந்த 21–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
புதுடெல்லி,

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.


இதை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து, 4 பேரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக அப்பீல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது (இல்லாமல் போகிறது) என கூறி, மற்ற 3 பேருக்கும் தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தனர். இதையடுத்து 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், அவரது சொத்துக்கள் மூலமாக அபராதத்தை வசூலிக்க கோரியும் கர்நாடக அரசு சார்பில் கடந்த 21–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வருகிற 5–ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக விவசாயிகளுக்கும் உதவ வேண்டும்
மீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், உத்தரபிரதேசத்தில் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற தணியாத வேட்கையில், பா.ஜ.க. பல வாக்குறுதிகளை அளித்தது. அதிலொன்று, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை ரத்து செய்வோம்’ என்ற வாக்குறுதியாகும். மக்கள் இமாலய வெற்றியை பா.ஜ.க.வுக்கு அளித்தனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், உத்தரபிரதேச அரசு விவசாய கடன்களை ரத்துசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

 இதிலென்ன ஆச்சரியம் என்றால், இந்த கடன்சுமையை மத்திய அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய விவசாய மந்திரி ராதாமோகன் சிங் பாராளுமன்றத்திலேயே உடனடியாக அறிவித்து விட்டதுதான். உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் விவசாய கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரவில்லை. வாழ்வா, சாவா என்றநிலையில், கடன்சுமையில் தத்தளிக்கும் தமிழக விவசாயிகளும் அதைத்தான் கேட்கிறார்கள்.

டெல்லியில் கடந்த 17 நாட்களாக விவசாய சங்கத்தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 84 விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ‘‘விவசாயிகள் பெற்ற பயிர்கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும். தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அணைகட்டி கொண்டிருப்பதை தடுக்கவேண்டும்.

 நடுவர்மன்ற தீர்ப்புப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி பங்கீட்டு ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்கவேண்டும். தமிழகத்துக்கும், மற்ற மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பிரச்சினைகளை விரைந்து தீர்க்கவேண்டும். நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றிட வேண்டும். விவசாய விளைபொருட்களுக்குரிய விலை கிடைத்திடவேண்டும். வறட்சி நிவாரண நிதியாக தமிழக அரசு கோரும் ரூ.40 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்’’ என்பது உள்பட பலகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது பிரதமர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றவகையில் கழுத்தில் மண்டை ஓடுகளை தொங்கவிட்டும், அரை நிர்வாண கோலத்திலும், கையில் திருவோடுகளை ஏந்திக்கொண்டும், மொட்டைஅடித்தும், ஒரு விவசாயியை சடலமாக கிடத்தியும், பிரதமர் மோடியின் உருவத்தை அணிந்தும், எலி, பாம்புக்கறியை வாயில் வைத்தும், தியானம் செய்தும் பல்வேறுவிதமான போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் அவர்களை சந்தித்தனர். ஜனாதிபதியிடம் அழைத்துக்கொண்டு போனார்கள். மத்திய மந்திரிகளிடமும் அழைத்துச்சென்று கோரிக்கை விடுக்க வைத்தனர். ஆனால், பலன் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. வடகிழக்குப்பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் பொய்த்துப்போன நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் தமிழ்நாடு வாடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடே வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கே தமிழகம் முழுவதும் விவசாயிகள் உள்பட அனைத்து மக்களும் மிகமிக கடுமையாக தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், மத்திய அரசாங்கம் இன்னமும் உதவிக்கரம் நீட்டவில்லை. ஏற்கனவே தமிழக அரசு வறட்சிக்காக மட்டும் ரூ.39 ஆயிரத்து 565 கோடி வேண்டும் என்று கேட்டநிலையில், வார்தா புயல் நிவாரணத்துக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் சேர்த்து மத்திய அரசாங்கம் வெறும் ரூ.2,096 கோடியே 86 லட்சம் மட்டும் கொடுத்திருப்பது, வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

 டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார்கள் என்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, உத்தரபிரதேசத்தின்மீது கொண்டுள்ள கரிசனத்தைபோல், தமிழகத்தின் மீதும் இரக்கம்காட்டி உதவி செய்யுங்கள் என்பதுதான் தமிழக விவசாயிகளின் கோரிக்கை. எல்லா மாநிலங்களும் மத்திய அரசாங்கம் என்ற தாயின் குழந்தைகள் என்றவகையில் பாரபட்சம் காட்டுவதை விட்டுவிட்டு, மிகவும் நலிந்து போயிருக்கும் தமிழ்நாடு என்ற குழந்தைமீது அதிக கவனம் செலுத்தவேண்டியதுதான் மத்திய அரசாங்கம் எனும் தாயின் கடமையாகும்.

Thursday, March 30, 2017

அட! தமிழ்நாடு, கேரளாவுக்குத் தலைமைச் செயலர்கள் ஆன தமிழ்ச் சகோதரிகள்!

By DIN | Published on : 30th March 2017 02:17 PM |




சென்னை: பொதுவாகவே தலைமைச் செயலர்களின் நியமனங்கள் முக்கியத்துவம் பெறும். அதுபற்றிய செய்திகள் முக்கியச் செய்திகளில் இடம்பெறுவது புதிதல்ல.

ஆனால், கேரள அமைச்சரவை நேற்று நளினி நெட்டோவை, மாநில தலைமைச் செயலர் பதவிக்கு நியமித்து வெளியிட்ட செய்தி, மற்றொரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அதாவது, கேரள மாநில தலைமைச் செயலர் எஸ்.எம். விஜய் ஆனந்தின் பதவிக் காலம் மார்ச் 31ம் தேதியோடு நிறைவு பெறுவதால், புதிய தலைமைச் செயலராக நளினி நெட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உள்துறை கூடுதல் செயலராக இருக்கும் நளினி நெட்டோ, ஏப்ரல் 1ம் தேதி தலைமைச் செயலராக பதவி ஏற்கிறார். இவர் வரும் ஆகஸ்ட் மாதத்தோடு பணி நிறைவு பெறுகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நளினி நெட்டோவின் மாமாவின் மகள்தான் தமிழகத்தின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன். இவர் கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதன்மைச் செயலராக பதவியேற்றுக் கொண்டார்.

மற்றொரு விஷயம் என்னவென்றால், நளினி நெட்டோ, வைத்தியநாதன், விஜய் ஆனந்த் ஆகியோர் 1981ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்.


ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக இருந்த எஸ். வெங்கிடராமனின் மகள்தான் கிரிஜா வைத்தியநாதன். நாகர்கோயிலைச் சேர்ந்த வெங்கிடராமனின் சகோதரியின் மகள் தான் கேரள தலைமைச் செயலராகவிருக்கும் நளினி நெட்டோ.

தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ்வின் பணி நீக்கத்தை அடுத்து, தமிழகத்தின் தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதனை டிசம்பர் 22ம் தேதி தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி நளினி நெட்டோ தலைமைச் செயலர் பதவியை ஏற்றால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அதுவும் சகோதரிகள் தமிழகம்,கேரள மாநிலங்களின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக்.. காய்கறி விலை உயரும் அபாயம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. 
 
சென்னை: டீசல் மீதான வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவற்றை கண்டித்து இன்று முதல் 5 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

 இதனால் காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் மீதான வாட் வரி, 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்கள் பயன்படுத்த மத்திய அரசின் தடை உத்தரவு ஆகிய விவகாரங்களை கண்டித்து மார்ச் 30ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்தது. lorry owners today go on strike VIDEO : Lorry அதன்படி லாரி ஸ்டிரைக் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில் நேற்று, டெல்லியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோபால்நாயுடு, தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதாக, அமைச்சர் உறுதி அளித்தார். மாநிலத்தில் தீர்க்கவேண்டிய பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் தமிழக அரசு நேற்று இரவு வரை பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் திட்டமிட்டபடி இன்று ஸ்டிரைக் நடக்கிறது. தமிழகத்தில் சரக்கு லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள், காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் லாரிகள் ஓடாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவதற்காக செய்யப்படும் புக்கிங் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினால் ரூ.5000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடையும் அபாய நிலை உள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/lorry-owners-today-go-on-strike-278298.html
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் 

(குறள்: 639) 
 
பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. பெரிய வங்கி ஒன்றில் கடன் கேட்டிருந்தார் ஒரு தொழிலதிபர். தொகை அதிகம் என்பதால் கோட்ட மேலாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! அவரோ இராணுவத்தில் குறுகிய காலம் பணியாற்றி விட்டு வங்கியில் சேர்ந்து உயர் பதவிக்கு வந்தவர்! இருப்பினும் வர்த்தக வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டவர்.
ஆனால் பாவம், கடன் கொடுப்பதில் அனுபவம் குறைவு. அச்சம் வேறு. அதனால் தனது அலுவலகத்தில் கடன் பிரிவின் தலைமை அதிகாரியையே நம்பி இருந்தார். அதிகாரி பெயர் குமார் என்று நீங்களே சொல்லி விட்டீர்களே! குமாருக்கு கத்தி போல புத்தி. கடனில் புலி. ஆனால் தனக்குப் பின் பணியில் சேர்ந்தவர் கோட்ட மேலாளராக இருப்பதில் பொறாமை; முன்னேற விடக் கூடாதென்கிற கெட்ட எண்ணம்! அப்பாவியான கோட்ட மேலாளருக்கோ இது புரியவில்லை! 

கோட்ட மேலாளரைச் சந்திப்பதற்கு தொழிலதிபர் நேரம் கேட்ட பொழுது அவர், ‘குமாரை முதலில் பாருங்கள்' எனச் சொல்லி விட்டார். அங்கு சென்ற கிளை மேலாளரும் தொழிலதிபரும் காத்திருந்தனர், காத்திருந்தனர், ஒரு மணி நேரம் காத்தே கிடந்தனர்! பின்னர் உள்ளே கூப்பிட்ட குமார் ஒரு கையில் தேநீர் கோப்பையும் மறு கையில் நாளிதழுமாக இருந்தார்! தொழிலதிபர் இருமினார், செருமினார். ‘ம்..சொல்லுங்க' என்ற குமார், கிளை மேலாளர் கடன் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் அவரை இடை மறித்தார்!
`இங்கே கொடுத்த கடனே வசூலாகவில்லை. நான் சொன்னாலும் கோட்ட மேலாளர் செய்ய மாட்டார். 6 மாதம் கழித்துப் பார்க்கலாம்’ என்று கோட்ட மேலாளரைக் குறை சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்! அவர்களோ விடாமல் கோட்ட மேலாளரைச் சந்தித்தனர். அவர் மரியாதை காட்டினாரே தவிர, ‘கடன் என்றால் குமார் சொல்லியதற்கு மேல் ஒன்றுமில்லை' என்று சொல்லி விட்டார். இந்த மாதிரி சம்பவங்களால் வாடிக்கையாளர்கள் நொந்து போனார்கள். வங்கியை விட்டும் போனார்கள்! கோட்ட மேலாளரின் பெயர் கெட்டது. மற்ற வங்கிகள் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களை குறி வைக்க ஆரம்பித்து விட்டன! 

அண்ணே, உதவிக்கு ஆள் தேவைதான். ஆனால் அவர் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் இல்லையா? ஒப்பந்தப் புள்ளிக்கு என்ன தொகைக்கு விண்ணப்பித்துள்ளோம் என்பதைப் போட்டியாளருக்கு ரகசியமாகச் சொல்பவர் போன்றோரை அருகில் வைத்துக் கொண்டால் என்ன ஆகும்? ஒரே ஆள் எல்லா வேலைகளையும் பார்க்க முடியாது என்பதற்காகவும், சில துறைகளில் நிபுணத்துவம் வேண்டும் என்பதற்காகவும் தானேங்க உதவியாட்கள்? 

அதாவது செய்வதைச் சிறப்பாகவும் நாணயமாகவும் செய்யக் கூடியவர்கள்! இக்குணங்கள் இல்லாதவரை அருகில் வைத்துக் கொண்டால் வேறு வினையே வேண்டாமே! தீய எண்ணமுடையவன் பக்கத்தில் இருப்பது எழுபது கோடி பகைவர்கள் இருப்பதினும் கொடுமையைத் தரும் என்கிறது குறள்! 

- somaiah.veerappan@gmail.com

என்ன செய்யப் போகிறோம்?

By ஆசிரியர்  |   Published on : 29th March 2017 01:41 AM 

தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாட்களாக நடைபெற்றுவரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் குறித்து தேசிய ஊடகங்கள் தற்போதுதான் விழித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரிசைகட்டித் தங்களது ஆதரவைத் தெரிவிக்க ஜந்தர் மந்தர் நோக்கி விரைகிறார்கள்.

த.மா.கா. தரப்பில் ஜி.கே. வாசன் குடியரசுத் தலைவரிடமும், தி.மு.க. தரப்பில் திருச்சி சிவா, நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடமும், ஆளும் அ.தி.மு.க. தரப்பில் தம்பிதுரை நரேந்திர மோடியிடமும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்த அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று முறையிட்டிருக்கிறார்கள். இதனால் பிரச்னை தீர்ந்துவிடப் போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும், விவசாயிகளுக்கும் தெரியும், தில்லியில் உள்ள தலைவர்களுக்கும் தெரியும்.

கடந்த ஆண்டு வடமேற்குப் பருவமழை பொய்த்துவிட்டது. அதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் வறட்சியை எதிர்நோக்கியது. ஏனைய மாநிலங்களில் ஓரளவுக்காவது நதிநீர் கிடைக்கிறது. தமிழகத்தின் நிலைமை அதைவிட மோசம். காவிரியிலும் போதிய அளவு நீர் கிடைக்கவில்லை, தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்துவிட்டது. அதனால் கடந்த 100 ஆண்டுகளில் காணாத வறட்சியைத் தமிழகம் எதிர்கொள்கிறது. இப்படியொரு நிலைமையைத் தமிழகம் சந்திக்க இருக்கிறது என்பதைக் கடந்த 5.1.17-இல் 'வேளாண் இடர்ப்பாடு!' என்கிற தலையங்கத்தில் விரிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப் பெறுவது வழக்கம். கடந்த ஆண்டு வெறும் 169.3 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப் பெற்றது. அதனால் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் 60%-க்கும் குறைவாகவே மழைநீர் பெற்றிருக்கின்றன. 1876-க்குப் பிறகு இந்த அளவுக்குக் குறைவாக வடகிழக்குப் பருவமழை இருந்தது இப்போதுதான்.

பருவமழைதான் பொய்த்துவிட்டது. காவிரி நீராவது கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கடந்த ஜூன் - டிசம்பர் காலகட்டத்தில் தமிழகத்திற்கு நியாயமாக 179 டி.எம்.சி. காவிரி நீர் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் நமக்குத் தந்திருக்கும் மொத்த நீரே வெறும் 66.60 டி.எம்.சி. மட்டுமே. தங்களுக்கே தண்ணீர் இல்லாதபோது எப்படித் தருவது என்று கை விரித்துவிட்டது கர்நாடகம்.
காவிரி டெல்டா பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஏறத்தாழ 50 லட்சம் ஏக்கரிலான பயிர்கள் கருகி, சாகுபடி செய்த 30 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இயற்கை பொய்க்கும் என்பதை உணர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குறுவை சாகுபடிக்காக 54 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடித் திட்டத்தையும், சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலான சம்பா சாகுபடித் திட்டத்தையும் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 12.86 லட்சம் ஏக்கர் நிலத்தில், 11.01 லட்சம் ஏக்கர் நிலத்திலுள்ள பயிர் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க, தமிழக அரசு ரூ.2,247 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதன்மூலம் பயிர் வாரியாக விவசாயிகளுக்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வறட்சி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, கடந்த ஜனவரி மாதம் மத்தியக் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்தது. தமிழகம் 99% வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக இங்கிருந்து செல்லும்போது அந்தக் குழு தெரிவிக்கவும் செய்தது. ஆனால் தில்லி சென்று இந்தக் குழுவினர் செய்த பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு ரூ.2,090 கோடி மட்டும்தான் வறட்சி நிவாரணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறைத்து மத்திய அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே.
நிவாரணம், இழப்பீடு, காப்பீடு, கடன் தள்ளுபடி இவையெல்லாம் விவசாயிகளின் துயர் துடைக்கும் முயற்சிகள். விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதால் மட்டுமே நிலைமையை எதிர்கொண்டதாகி விடாது. விவசாயம் பொய்க்கும்போது, விவசாயத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சங்கம் வைத்து விவசாயிகள் அவர்
களது பிரச்னைகளை முன்வைப்பது போல, விவசாயத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்கள் தங்கள் நிலைமையை எடுத்துரைக்க வழியில்லை. விவசாயிகள் தற்கொலை என்று தெரிவிக்கப்படுவதில் பெரும்பாலானவை விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைதான் என்பதை நாம் உணர்வதில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பது, விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வது, தமிழக நதிகளை இணைப்பது, வறுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிப்பது, தேசிய, தென்னக நதிகளை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் சங்கத்தினர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் தில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது, தமிழகத்தின் பிரச்னையை ஓரளவுக்கு தேசிய அளவில் வலியுறுத்த வழிகோலியிருக்கிறது. இதனாலேயே, மிகப்பெரிய அளவில் மத்திய அரசு உதவி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

தமிழகம், இருக்கும் நீரை எப்படி சாமர்த்தியமாக பயன்படுத்த முடியும் என்பதையும், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது, கடல்நீர் சுத்திகரிப்புக்கு முயற்சிப்பது போன்றவற்றையும் மையப்படுத்தி வருங்காலத் திட்டங்களை வகுப்பதுதான் தொலைநோக்குப் பார்வையாக இருக்க முடியும்.

ஜனநாயகத்துக்குச் செருப்படி!

By ஆசிரியர்  |   Published on : 30th March 2017 01:37 AM

புணேயிலிருந்து தில்லிக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வருகிறார் சிவசேனை கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான ரவீந்திர கெய்க்வாட். அது முதல் வகுப்பு என்பது இல்லாத விமானம். மக்களவை உறுப்பினரான நான் முதல் வகுப்பில்தான் பயணம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறார் ரவீந்திர கெய்க்வாட்.

விமானப் பணிப்பெண்ணும், அறுபது வயது ஒப்பந்த ஊழியர் ஆர். சுகுமாரும், அந்த விமானத்தில் தனியாக முதல் வகுப்பு வசதி இல்லாததால், நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக விளக்குகிறார்கள். அவர்களது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாத கெய்க்வாட், சட்டென்று தனது செருப்பை எடுத்து ஆத்திரத்தில் ஒப்பந்த ஊழியர் சுகுமாரை அடிக்கிறார். தான் 25 முறை அடித்ததாகத் தொலைக்காட்சி சேனல்களுக்குப் பெருமையுடன் பேட்டி அளிக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது இந்த நிகழ்வு. ஏர் இந்தியா விமானம் ரவீந்திர கெய்க்வாட்டைத் தங்களது விமானத்தில் பயணிப்பதற்குத் தடை விதித்தது. ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, ஏனைய விமான நிறுவனங்களும் முறைகேடாக நடந்து கொண்ட ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் பயணிப்பதற்குத் தடை விதித்தன. சம்பந்தப்பட்டவர் முக்கியமான அரசியல் பிரமுகர், அதுமட்டுமல்லாமல் மக்களவை உறுப்பினரும்கூட என்று தெரிந்தும் துணிந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட விமான நிறுவனங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்திய நாடாளுமன்றமே கொதித்தெழுந்தது, அது ரவீந்திர கெய்க்வாட்டைத் தண்டிப்பதற்கல்ல, விமான நிறுவனங்களைக் கண்டிப்பதற்கு.
'எல்லா விமான நிறுவனங்களும் ரவீந்திர கெய்க்வாட் பயணிப்பதற்குத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் விமானத்தில் பயணிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களது அடிப்படை உரிமை' என்று முழங்கினார் சிவசேனை கட்சியின் இன்னொரு மக்களவை உறுப்பினரான அர்விந்த் சாவந்த். நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸைச் சேர்ந்த விவேக் தாங்கா ஒருவர்தான் தனது சுட்டுரையில், 'எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கெய்க்வாட்டின் செயல்பாட்டை நியாயப்படுத்த முற்படுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. மக்களிடையே நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைத்தான் இது ஏற்படுத்தும்' என்று துணிந்து பதிவு செய்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தரப்படும் சலுகைகள் ஏராளம் ஏராளம். ஆண்டொன்றுக்கு 34 தடவை தனது மனைவியுடன் விமானத்தில் பயணிக்கலாம். உறுப்பினரின் மனைவியோ கணவரோ எட்டு முறை தனியாகப் பயணிக்கலாம். நாடாளுமன்றம் செயல்படும்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்கலாம். அவர்கள் விமான நிலையத்துக்கு வந்தால் அவர்களுக்கு உதவி செய்ய விமான நிலைய அதிகாரி ஒருவர் விமானத்தில் ஏறும்வரை உடன்வந்து உதவுவார். இவையெல்லாம் உரிமைகள் அல்ல, சலுகைகள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சேவைக்காக வழங்கப்படும் சலுகைகள். அதையே தங்களது உரிமையாகக் கருதும்போதுதான் ஆணவம் தலைக்கேறி, ஊழியர்களை கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அது அத்துமீறுகிறது.

தவறு செய்யும் உறுப்பினர்களை நாடாளுமன்றம் ஆரம்பத்திலிருந்தே கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படாததால்தான், ரவீந்திர கெய்க்வாட்டின் செயல்பாட்டையும் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார்கள். 1951-இல் உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவே இல்லை. அதில் காணப்பட்ட சலுகைகளையும், உரிமைகளையும் பயன்படுத்தும் அளவுக்கு, அதில் கூறப்பட்ட நடத்தை விதிமுறைகளை யாரும் பின்பற்றவில்லை. 1993-இல் சிவராஜ் பாட்டீல் மக்களவைத் தலைவராக இருக்கும்போது 'ஒழுக்கக் குழு' ஒன்றை ஏற்படுத்த முற்பட்டார். அதுவும் எடுபடவில்லை.
1992-இல் தில்லி - கொல்கத்தா ராஜதானி விரைவு ரயிலில் பிகாரில் ஏறிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் முன்பதிவு செய்து பயணித்துக் கொண்டிருந்த இந்திய அரசுப் பணி அதிகாரிகளைப் படுத்தியபாடு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. முறைகேடாக நடந்த அந்த உறுப்பினர்களை நாடாளுமன்றம் கண்டிக்கவும் இல்லை, தண்டிக்கவும் இல்லை.

இதுபோல நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாதாக்கள் போலவும், ரெளடிகள் போலவும் நடந்துகொள்வது, புதிதல்ல. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பொதுஜனத்திற்குத் துணிவு கிடையாது. அவையின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையுடன் நாடாளுமன்ற, சட்டப்பேரவையாவது தவறு செய்யும் உறுப்பினர்களை எச்சரிக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை என்பதால்தான், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.

சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்கள் மக்கள் தொண்டர்கள் என்பதை மறந்து செயல்படுகிறார்கள் என்பதை உணர்ந்திருந்தவர் மகாத்மா காந்தி. 'அதிகாரம் என்பது எவருடைய அறிவையும் மங்கச் செய்யும். அதிகார ஆட்சிக்கு வருவது பெரும் புகழைக் கொடுக்கலாம் அல்லது சர்வ நாசத்தையும் விளைவிக்கலாம். மக்களுக்குத் தொண்டு புரிவதன் மூலம் கிடைக்கும் விசேஷ உரிமைகள்தான் எந்தக் காலத்திலும் அழியாமல் இருக்கும். வெறும் அதிகாரச் சின்னங்களாக உள்ள உரிமைகள் அனைத்தும் அழிந்து போகும்' என்று 80 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் காந்தியடிகள் இதை உணர்ந்துதான் கூறியிருக்கிறார்.
மகாத்மா காந்தியையே மறந்துவிட்டவர்கள். அவர் சொன்னது எங்கே இவர்களுக்கு நினைவிருக்கப் போகிறது.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...