காஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான
சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
ஜம்மு,
காஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
ரூ.3,720 கோடி
காஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும், ஜம்முவையும் இணைக்கும்
தேசிய நெடுஞ்சாலையில் செனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு
சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம் ஆண்டு தொடங்கியது. இமயமலை
அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில் ரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட
இந்த சுரங்கப்பாதை ஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.
சுரங்கப்பாதை
பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக
உதம்பூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு
அர்ப்பணித்தார். பின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பாதையில்
சிறிது தூரம் சென்று வந்தார்.
விழாவில் மத்திய நெடுஞ்சாலைத்துறை
மந்திரி நிதின் கட்காரி, பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங்,
காஷ்மீர் முதல்–மந்திரி மெகபூபா முப்தி, துணை முதல்–மந்திரி நிர்மல்குமார்
சிங், கவர்னர் என்.என்.வோரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உலகத்தரம் வாய்ந்தது
நாட்டிலேயே முதல் முறையாக உலகத்தரம் மிகுந்த பாதுகாப்பு
அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில் ஒருங்கிணைந்த சுரங்க
கட்டுப்பாட்டு அமைப்பு, கண்காணிப்பு, சிக்னல்கள், காற்றோட்ட வசதிகள்,
மின்னணு தொழில்நுட்பம், தீயணைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான
பாதுகாப்பு அம்சங்களும் அடங்கி உள்ளன. இவை அனைத்தும் தானியங்கி முறையில்
இணைக்கப்பட்டு உள்ளன.
9.2 கி.மீ. நீளமுள்ள இருவழி பிரதான
சுரங்கப்பாதையுடன், அதே அளவு நீளமுள்ள மற்றொரு சுரங்கப்பாதை (அவசர
காலங்களில் வெளியேற), ஒவ்வொரு 300 மீட்டரிலும் குறுக்குப்பாதையும்
அமைத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும் அனைத்து விதமான இயற்கை
இடர்பாடுகளை தாங்கும் சக்தி கொண்டதாகவும் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு
உள்ளது.
பயண நேரம் குறையும்
செனானி–நஷ்ரி இடையே சாலை வழியான தொலைவு 41 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இந்த தொலைவை வெறும் 10.9 கிலோ மீட்டராக இந்த சுரங்கப்பாதை குறைத்து
உள்ளது. இதன் மூலம் இரு தலைநகர்களுக்கு இடையிலான பயண நேரம் சுமார் 2½ மணி
நேரம் வரை குறையும். பனிச்சரிவு, நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளால் தேசிய
நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழலில், இந்த
சுரங்கப்பாதையின் மூலம் சுமுக போக்குவரத்துக்கு வழி ஏற்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு
எவ்வித பாதிப்பும் இன்றி அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கப்பாதை மூலம்
நாள்தோறும் சுமார் ரூ.27 லட்சம் அளவிலான எரிபொருள் மிச்சமாவதுடன், சுற்றுலா
வசதியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை மூலம்
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும்
வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
பிரிவினைவாதிகள் போராட்டம்
இதற்கிடையே பிரதமரின் காஷ்மீர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து
இருந்த பிரிவினைவாத இயக்கங்கள், பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முழு
அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன. இதனால் மக்களின் இயல்பு
வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில்
கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் அரசு
போக்குவரத்து குறைந்திருந்தது. எனினும் ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தையில்
பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மேலும் சாலைகளில் தனியார்
வாகனங்களும் வழக்கம் போல இயங்கின.
பிரதமர் வருகை மற்றும்
பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு
பகுதிகளில் குறிப்பாக உதம்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.