காட்டுப்பாக்கத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் நெடுஞ்சாலையோரம் உள்ள பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன.
சென்னை போரூரை அடுத்த காட்டுப்பாக்கத்தில் மவுண்ட்–பூந்தமல்லி சாலையில் அரசு மதுபானக்கடை மற்றும் பார் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த மதுக்கடையையும் மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதை தடுக்க நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடையின் முன்பக்க வாசலை அடைத்து விட்டு, பின் பகுதியில் செந்தூர்புரம் மெயின் ரோட்டில் வழி அமைத்து அந்த மதுக்கடை தற்போது செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி காட்டுப்பாக்கம், லட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுக்கடையின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
இந்த மதுக்கடை மூட வேண்டியது. ஆனால் இங்கு பார் நடத்தவேண்டும் என்று இந்த மதுக்கடையை மூடவிடாதபடி டாஸ்மாக் அதிகாரிகளின் உதவியோடு நெடுஞ்சாலை ஓரம் உள்ள வழியை அடைத்து விட்டு, குடியிருப்புகள் நிறைந்த லட்சுமி அவென்யூ பகுதி வழியாக பாரின் சுற்றுச்சுவரை உடைத்து மதுக்கடைக்கு செல்ல வழி அமைத்தனர்.
குற்ற சம்பவங்கள் ஆனால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது செந்தூர்புரம் மெயின்ரோடு வழியாக மதுக்கடைக்கு செல்ல வழி அமைத்து உள்ளனர். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், அரசு உயர் நிலைப்பள்ளி, கடைகள் உள்ளன.
சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் இந்த கடைக்கு படையெடுத்து வருவார்கள். இதனால் இந்த பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்த பகுதி பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த மதுக்கடையை மூட வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் சமரசம் இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் ஒரு புறம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போதே, மற்றொருபுறம் மதுக்கடையில் போலீஸ் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை நடைபெற்றது.
No comments:
Post a Comment