பெங்களூருவை சேர்ந்த சுருதி பசபா என்ற பெண் தனது ஐஸ்லாந்து நாட்டு கணவர் மற்றும் 4 வயது மகளுடன் கடந்த வாரம் பெங்களூருவில் இருந்து ஐஸ்லாந்துக்கு விமானத்தில் சென்றார். ஜெர்மனி வழியாக சென்ற இவர்களை அங்குள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுருதி பசபாவை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களையும் படி உத்தரவிட்டு உள்ளார். எந்த வித காரணமும் இன்றி தனது மகளின் கண்எதிரே ஆடைகளை களைய கூறியது சுருதி பசபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இருப்பினும் பெண் பாதுகாப்பு அதிகாரி அவரை தொடர்ந்து வற்புறுத்தவே அவர் தனது கணவரை அழைத்தார்.
சுருதி பசபாவின் கணவரை பார்த்ததும் அந்த அதிகாரி தனது முடிவை மாற்றிக்கொண்டார். ஆடைகளை களைய தேவையில்லை என கூறி அவர் சுருதி பசபாவை அனுப்பி வைத்து விட்டார்.
இந்த மோசமான அனுபவம் குறித்து சுருதி பசபா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர், தான் ஒரு இந்தியப்பெண் என்பதால் அந்த பெண் பாதுகாப்பு அதிகாரி தன்னிடம் அப்படி நடந்து கொண்டதாகவும் தனது கணவர் வெளிநாட்டுக்காரர் என தெரிந்தும் அவரது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த விவகாரம் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பார்வைக்கு வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய தூதரக தலைமை அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment