Wednesday, April 12, 2017

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக

By ஷக்தி  |   Published on : 12th April 2017 01:16 PM  | 

bairvaa_vijay

சன் டிவிக்கும் பிறந்த தினம்
தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் சன் தொலைக்காட்சிக்கும் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. முக்கியமாக கடந்த 24 ஆண்டுகள் வெளிவந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் பணிபுரிந்தவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, 2017-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் ‘பைரவா’ என்று பல ஹைலைட்டுகளை உள்ளடக்கியுள்ளது. பரதன் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், டேனியல் பாலாஜி நடித்துள்ள இத்திரைபப்டம் சன் டிவியில் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் என்ன புதுசு?



ஏப்ரல் 17, 2015-ல் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் சூப்பர் ஹிட் படம் ஓகே கண்மணி விஜய் டிவியில் காலை பதினொரு மணிக்கு ஒளிப்பரப்பாகும். ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளல் இசையில், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும் மறுமுறை பார்க்கலாம்.



அதனைத் தொடர்ந்து எம்.எஸ்.தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி ஒளிபரப்பாகிறது. இது கிரிக்கெட் வீரர் தோனியில் வாழ்க்கையை ஒட்டி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழ் டப்பிங்கிலும் சூப்பர் ஹிட்டானது. இரவு எட்டு மணிக்கு விஜய் டிவியில் இந்தப் படத்தைக் காணலாம்.

ஜெயா தொலைக்காட்சியில் காஷ்மோரா



காலை 11 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘காஷ்மோரா’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் கொண்டாடிய வித்தியாசமான படம் இது.

ஜீ தமிழில் என்ன தமிழ்ப் படம்?



மாலை நான்கு மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் நடித்துள்ள‘சைத்தான் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.



மாலை ஆறு மணிக்கு இயக்குநர் முருகதாஸின் ‘கத்தி’ ஒளிபரப்பாகிறது. விஜய், சமந்தா, சதீஷ் நடித்துள்ள இப்படத்தில் அனிருத்தின் இசை அசத்தல். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும் படம் இது.

ஒவ்வொரு சானலிலும் அட்டகாசமான படங்கள். எதைப் பார்ப்பது எதை விடுவது என்று ரசிகர்கள் திண்டாட வேண்டாம். திரையில் பார்க்கத் தவறிய படங்களை சின்னத் திரையில் கண்டு ரசியுங்கள். திரைப்படங்களில் மட்டும் மூழ்கிவிடாமல் அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் கைகுலுக்க, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எனக்கு ஒரு போன் செய்திருக்கலாமே? இளையராஜா மீது எஸ்பிபி ஆதங்கம்!

By எழில்  |   Published on : 12th April 2017 04:50 PM  |
spb_duel
Ads by Kiosked
 காப்புரிமை விவகாரம் தொடர்பாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தகவல் சொல்லியிருக்கலாம். அதற்குப் பதிலாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது மனத்தைக் காயப்படுத்தியது என்று பாடகர் எஸ்பிபி பேட்டியளித்துள்ளார்.

திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்னையை ஃபேஸ்புக்கில் தெரிவித்த எஸ்பிபி இவ்வாறு கூறினார்: இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மேடைகளில் இனி பாட மாட்டோம்: இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். என்றார். இதையொட்டி சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்பிபி அளித்த பேட்டியில் கூறியதாவது:

1979 முதல் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். இந்தமுறை என் நிகழ்ச்சிகளில் ராஜா பாடல்களைப் பாடாமல் இருந்தது மனத்தைப் பாதித்தது. ஆனால் இசை நிகழ்ச்சிகளைப் பாதிக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து பேஸ்புக்கில், இதுபோல நடந்துள்ளது. அவர் பாடலைப் பாடமுடியாமல் போகலாம் என்றுதான் அறிக்கை வெளியிட்டேன். கடவுள் புண்ணியத்தில் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பாடல்கள் பாடியுள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் ராஜாவின் பாடல்களைப் பாடமுடியாதது மனத்துக்குக் கஷ்டமாக உள்ளது.

வருங்காலத்தில் ராஜா பாடல்களைப் பாடுவேனா என்பதைக் காலம்தான் பதில் சொல்லவேண்டும். ராஜாவுக்கும் எனக்கும் எவ்வித அபிப்ராய வேறுபாடுகள் கிடையாது. நாங்கள் இப்போதும் நண்பர்கள்தான். காலம் சொன்னபடி எதுவும் நடக்கட்டும். எதையும் நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்வேன். எந்தப் பாடலையும் என் சொந்தம் என நினைக்கமாட்டேன். ஒவ்வொரு பாடலுக்கும் பல சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்.

காப்புரிமைச் சட்டத்தைப் புரிந்துகொள்வது கஷ்டமாக உள்ளது. ராஜா பாடல்களைப் பாட அனுமதி வாங்கவேண்டும் என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. அப்படி முன்பே தெரிந்திருந்தால் நான் அவருக்குப் போன் செய்து உன் பாடல்களைப் பாடலாமா என்று கேட்டிருப்பேன். இப்படிக் கேட்க நான் தயங்கியிருக்கமாட்டேன்.

இந்தமுறை ஆகஸ்ட் முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எல்லா இடங்களிலும் ராஜா பாடல்களைப் பாடியே வந்தோம். ஆனால் அமெரிக்க நிகழ்ச்சிகளுக்குத் திடீரென ஏன் இவ்வாறு நடந்தது எனத் தெரியவில்லை. இதுகுறித்து ராஜாவிடம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். எனக்கும் சுய மரியாதை, தன்மானம் உள்ளது இல்லையா?

மயிலையே கயிலை’ என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?

எஸ்.கதிரேசன்



‘சென்னை நகரின் இதயம்' என்று சொன்னால், மயிலாப்பூரைத்தான் சொல்லவேண்டும். மயிலாப்பூருக்குத்தான் எத்தனை பெருமை?! 'மயிலையே கயிலை' என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?

வரலாற்று ரீதியாக மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்று சொல்லும்படி மயிலாப்பூரைச் சுற்றிலும் ஏழு சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. மேலும் மயிலையின் காவல் தெய்வமாக கோலவிழி அம்மனும், முண்டகக்கண்ணி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். திருவள்ளுவர் பிறந்ததும்கூட மயிலாப்பூரில்தான் என்று சொல்லப்படுகிறது. இப்படி பல மகத்துவங்கள் நிறைந்த மயிலாப்பூருக்கு அந்தப் பெயர் வந்த கதையும், அதன் பின்னணியில் இருக்கும், தொண்டர்களின் பெருமையை உணர்த்துவதான சம்பவமும் பற்றி தெரிந்துகொள்ளலாமே...



'திருத்தொண்டர்களின் பெருமை, இறைவனை விடவும் பெரிது' என்று அந்தச் சிவப் பரம்பொருளுக்கே அன்னை உணர்த்திய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலாப்பூர்.

கயிலையில் ஒருநாள் சிவபெருமான், அன்னை உமையவளுக்கு வேதப் பொருளை விளக்கிக்கொண்டிருந்தார். அந்தவேளையில் அழகான மயில் ஒன்று, அன்னையின் எதிரில் வந்து தோகை விரித்து ஆடியது. அதன் ஆட்டம், ஜகன்மாதாவின் சிந்தையைச் சிதறச் செய்தது. மயூரத்தின் ஆட்டத்தில் லயித்துப்போனாள்.



சிவபிரான் சினம் கொண்டார். ‘‘தேவி, நான் வேதப்பொருள் பற்றி கூறுகையில் நீ மயிலின் ஆட்டத்தை ரசிக்கிறாயே’’ என்று கேட்கிறார். அதற்கு இறைவி, ‘‘மயில், நம் குழந்தை முருகனின் வாகனம் அல்லவா? முருகனுக்குத் தொண்டு செய்கிறது அல்லவா? அதைப் பார்த்ததுமே எனக்கு முருகனின் நினைவு வந்துவிட்டது. அதனால்தான் நான் மயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்று கூறினாள்.
‘அப்படியானால் என்னை விடவும் அந்த மயில் உனக்கு உயர்வாகத் தெரிகிறதா?’ என்று ஈசன் கேட்டார்.



‘சுவாமி! தொண்டர்கள்தான் பெரியவர்கள் என்பது சத்தியம் அல்லவா? அப்படி முருகனுக்கு தொண்டு செய்யும் மயிலும் பெரிதுதானே’ இது இறைவியின் கேள்வி.

‘அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’

‘முடியும்!’

‘எப்போது?’

‘இதோ, இப்போதே’

உடனே அன்னை உமையவள், எந்த மயிலின் காரணமாக இந்த விவாதம் தொடங்கியதோ அந்த மயிலின் வடிவம் கொண்டு, நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் மயிலாப்பூர் தலத்தை அடைகிறாள்.

தேவி மயிலாக உலவிக் கொண்டிருக்கும் அந்த மயிலாப்பூரிலேயே இறைவியின் பிரிவைத் தாங்கமாட்டாமல், ஈசனும் அங்கிருந்த புன்னைமரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளுகிறார்.

அவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்ய அங்கு யாரும் இல்லையே! தொண்டர்கள் இல்லாமல் ஈசன் தவித்திருப்பது கண்டு மயில் உருவம் கொண்டிருந்த அன்னை, அருகில் இருந்த பொய்கையில் நீராடி, தன் அலகினால் மலர்களையும் கனிகளையும் எடுத்து வந்து சிவலிங்கதுக்கு அர்ப்பணிக்கிறாள். அன்னையின் தொண்டில் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்குத் தரிசனம் தந்தார். அன்னை சுய உருவம் ஏற்றாள்.



‘தேவி! தொண்டர்களின் பெருமையை உலகத்தவர் உணர்ந்திடவே நாம் இந்த நாடகத்தை நடத்தினோம். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். கருணையே வடிவானவள் அல்லவா இறைவி!

‘ஐயனே! தொண்டர்தம் பெருமையை உலகறியச் செய்ய தாங்கள் எழுந்தருளிய இத்தலத்திலேயே தங்கள் சாந்நித்யம் நிலைத்திருக்க வேண்டும்.’ என வேண்டினாள். அப்படியே வரம் தந்த சிவபெருமான், ‘தேவி! நீயும் இங்கே வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் தரும் கற்பகமாக நிலைத்திருப்பாயாக’’ என அருளினார். இப்படி அம்மையும் அப்பனுமாய் இன்றைக்கும் மயிலையில் எழுந்தருளி, மனமுருக வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் அருள்புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.



மயிலையின் தல வரலாறே தொண்டர்தம் பெருமையை உலகத்தவர்க்கு உணர்த்தியதன் காரணமாகத்தான், மயிலையில் அறுபத்துமூவர் விழா தனிச்சிறப்பு பெறுகிறது. மயிலாக அன்னை இறைவனை வணங்கி அருள் பெற்றதால்தான் மயிலாப்பூர் என பெயர் பெற்றது.

மருந்து நீர், நைவேத்தியம், குலதெய்வ வழிபாடு... தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? 
 
இரா.செந்தில் குமார்

தமிழ்ப் புத்தாண்டு வரப்போகிறது, தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். இந்தப் புத்தாண்டு பங்குனி 31-ம் தேதி இரவு (13-4-17) 12.43 மணிக்குப் பிறக்கிறது. வரப்போகும் வசந்தத்துக்கு முன்னோட்டமாகத் திகழும் சித்திரை முதல் நாளை நாம் எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும், அன்றைக்கு நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாமே...



புத்தாண்டு அன்று வீட்டை சுத்தம் செய்து,வாயில்களில் அழகாகக் கோலமிட வேண்டும்.மேலும் செம்மண் பூசியும் அழகு செய்யலாம்.

கதவுகளில், மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கவேண்டும்.

புத்தாண்டு அன்று காலையில் மருத்துநீரில் நீராடவேண்டும். இந்த மருத்து நீரானது தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு போன்றவற்றைச் சேர்த்து காய்ச்சப்படும்.மருத்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.புத்தாண்டிற்கு முதல் நாள் அருகில் இருக்கும் கோயில்களில் மருத்து நீரானது கிடைக்கும். இது மருந்து நீர் என்றும் அழைக்கப்படுகிறது.

நீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும்.

காலையில் பூஜை அறையில் சுவாமி படங்களைச் சுத்தம் செய்து,பொட்டு வைக்க வேண்டும். மேலும் பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வணங்க வேண்டும்.

காலையில் இல்லத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும்.

பாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.



மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ணவேண்டும்.

இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுபோல் அன்று நாம் உண்ணும் உணவு பல சுவைகளில் இருக்கும்.

கண்டிப்பாக அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடவேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்த புத்தாண்டு வரை கூட சிலர் வைத்திருப்பர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் பரிமாறி, மகிழலாம்.

மாலையில் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். தமிழ்ப் புத்தாண்டு அன்று குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுதல் அதிக நன்மைகளைத் தரும்.



இந்த ஆண்டிற்கு உரிய ராஜா புதன், எனவே சொக்கநாதருக்கு பூஜை செய்வது நல்லது. மேலும், சூரியனை வழிபட்டால் மேன்மைகள் பெருகும்.நன்மைகள் விளையும்.

திருப்பதி லட்டு மகா பிரசாதம்... எவ்வளவு ருசிக்கலாம்? 


பாலு சத்யா


பிரசாதங்களில் பிரத்யேகச் சுவைகொண்டது; உலகம் முழுக்கப் பிரபலமானது; `இன்னொன்று கிடைக்காதா?’ என பக்தர்களை ஏங்கச் செய்வது... திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாராகும் லட்டு! நாள் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. என்னதான் நெய்யின் அளவைக் கூட்டி, ஏலக்காயும் முந்திரியும் சேர்த்து, பல வாசனைப் பொருட்களைப் போட்டாலும், இது தரும் சுவை எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த சமையல் கலைஞருக்கும் கைகூடுவதில்லை. இது மந்திரஜாலமா... ஏழுமலையானின் மகிமையா? இப்படிக் கேட்டால் பக்தர்கள் அடித்துச் சொல்வார்கள்... அது ஏழுமலையானின் மகிமைதான் என்று!



ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலில் வெங்கடாஜலபதிக்கு நைவேத்தியப் பிரசாதமாகப் படைக்கப்படும் லட்டு, பெருமாளுக்குப் பிரியமான ஒன்று. இதை `ஸ்ரீவாரி லட்டு’ என்றும் சொல்வார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டுதான் இதைத் தயாரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறது. திருமலையில், கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் பெருமாளின் `லட்டு பொட்டு’ என்கிற சமையற்கூடத்தில்தான் இதைத் தயாரிக்கிறார்கள். இன்றைக்கும் திருப்பதிக்குப் போகும் எந்த பக்தரானாலும், இந்த லட்டைக் கையில் வாங்கி, ஒரு விள்ளலாவது சுவைக்காமல் அவருக்கு அந்தப் புனிதப் பயணம் திருப்தியாக நிறைவு பெறுவதில்லை. அதேபோல திருப்பதிக்குச் சென்று திரும்பியவர் என்று தெரிந்தால், தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும், `லட்டு பிரசாதம் எங்கே?’ என்று கேட்காமலும் இருப்பதில்லை. இதன் அற்புதச் சுவை அலாதியானது!

முதன்முதலில் லட்டு பிரசாதமாக சீனிவாச பெருமாளுக்குப் படைக்கப்பட்டது, ஆகஸ்ட் 2, 1715-ம் ஆண்டில் என்கிறார்கள். 300 ஆண்டுகளாகியும் இதன் சுவை, மணம் குறையாமல் இருப்பது ஆச்சர்யம். அதாவது, இதற்கான பிரத்யேக சமையற்காரர்கள் கையால் உருட்டி உருட்டி லட்டைப் பிடித்த காலம் தொடங்கி, இயந்திரங்களின் உதவியோடு தயாரிக்கும் இந்தக் காலத்திலும் லட்டின் தரத்திலோ, சுவையிலோ இம்மிகூட மாற்றமில்லை என்பது உலகையே வியக்கவைக்கும் செய்தி. ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லட்டுக்கு மேல் தயாரிக்கப்படுகின்றன. தரிசனம் செய்பவர்களுக்கு இலவசமாக ஒரு சிறிய லட்டு தரப்படும். மேற்கொண்டு வாங்கும் (ஒருவருக்கு இரண்டு - சீசனுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்) லட்டுகளுக்கு பணம் செலுத்தி, டோக்கன் வாங்கி, வரிசையில் நின்று வாங்க வேண்டும். 2016-ம் ஆண்டு மட்டும் திருப்பதியில் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.



உண்மையில் இதில் ஒன்றைத் தயாரிக்க ஆகும் செலவு 25 ரூபாய் என்றால், திருப்பதியில் 10 ரூபாய்க்குதான் (டோக்கன் விலையில்) விற்கிறார்கள். அளவிலும் சற்று பெரியது; ஒன்று சுமார் 175 கிராம் எடை கொண்டது. கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லட்டைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் 270 பேர் சமையல்காரர்கள். இவற்றைத் தயாரிக்கும் இடம் புனிதமான பிரசாதம் தயாரிக்கும் இடம் என்பதால், வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. லட்டின் சுத்தம், சுகாதாரத்தை அறிய தனியாக லேப், தரக்கட்டுப்பாடு, அதற்கான சோதனை எல்லாம் இருக்கின்றன. 300 ஆண்டுகளுக்கு முன்னரே இது திருப்பதி பாலாஜிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டிருந்தாலும், இதற்கான காப்புரிமையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெற்றது 2009-ம் ஆண்டில்தான். ஆக, `திருப்பதி லட்டு’ என்கிற பெயரில் வெளியாட்கள் யாரும் இதை விற்பனை செய்ய முடியாது.

`பெருமாள், அலங்காரப் பிரியர்’ என்று சொல்வார்கள். மலர் மாலைகளைச் சூடி, தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் ஜொலிக்க காட்சி தருவார் ஏழுமலையான். அப்பேர்ப்பட்ட அலங்காரப் பிரியரான பாலாஜிக்கு, வேறெங்கும் கிடைக்காத லட்டு பிரசாதம் உகந்ததாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், 300 ஆண்டுகளில் மிகப் பெரியதாக இருந்த இதன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. திருப்பதியில் பெருமாளை தரிசித்துவிட்டு, லட்டுப் பிரசாதத்தை கிள்ளி, வாயில் போட்டு அது கரையும்போது, பெருமாளைப் பார்க்க ஏழு மலை ஏறி வந்த களைப்பெல்லாம் கரைந்துபோகும். மனநிறைவோடு இல்லம் திரும்புவார்கள்.



திருப்பதி லட்டை வடிவமைத்தவர் `லட்டு அரசர்’ என்று அழைக்கப்படும் கல்யாணம் அய்யங்கார். அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் லட்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டார்கள். இதற்காக தனித் தொழில்நுட்பம் உருவானது; 2001-ம் ஆண்டு வரை, இவர்கள் 51 லட்டுகளைத் தயாரித்தால், அதில் பதினொன்றை இவர்களின் குடும்பத்துக்குப் பங்காகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதற்கு எதிராக திருப்பதி தேவஸ்தானம் வழக்குத் தொடுத்தது. உச்ச நீதிமன்றம் இந்த வாரிசுரிமையை 2001-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வந்தது.

திருப்பதியில் `அஸ்தானம்’, `கல்யாணோத்சவம்’, `புரோக்தம்’ என மூன்று வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அஸ்தானம் வகை விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுவது, இதன் எடை சுமார் 750 கிராம். இது நம் குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. திருப்பதியில் நிகழும் பெருமாளுக்கான பிரத்யேக கொண்டாட்டங்களான கல்யாணோத்சவம், ஆர்ஜித சேவா ஆகியவற்றின் ஒரு பகுதிதான் கல்யாணோத்சவ லட்டு. சற்று பெரிய அளவிலான இதற்கு எப்போதும் பக்தர்களிடையே டிமாண்ட் உண்டு. `புரோக்தம்’ பக்தர்களுக்கு வழங்கப்படுவது. 175 கிராம் எடை கொண்டது.



திருப்பதி லட்டு மருத்துவரீதியாக பலன் தருவதுதானா? பதில் சொல்கிறார் டயட்டீஷியன் சௌமியா... `` இது, கலோரி, புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு என அனைத்தும் நிறைந்தது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி ஆகியவை குறைந்த அளவில் உள்ளன. இதை கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை எல்லாம் கலந்து தயாரிக்கிறார்கள். அதிக அளவில் இனிப்பு சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை. சோம்பல் ஏற்படும்; அதிகப் பசி உண்டாகும், இதன் காரணமாகவே அதிகம் சாப்பிடத் தோன்றும்; எடை அதிகரிக்கும்; கொழுப்பு கூடும்.

ஆனால், திருப்பதி லட்டில் சேர்க்கக்கூடிய முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை அருமையான மருத்துவப் பலன்களை அளிக்கக்கூடியவை. அதோடு தனியாக இதற்காக தரக்கட்டுப்பாடு, அதற்கான பரிசோதனை எல்லாம் உண்டு. எனவே, ஆரோக்கியமான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. எப்போதாவது, பிரசாதமாகத்தான் இதை நாம் சாப்பிடுகிறோம்; அதிலும் அதிக அளவில் சாப்பிடுவதில்லை என்பதால் தாராளமாகச் சாப்பிடலாம். சர்க்கரைநோய் உள்ளவர்கள் சின்னஞ்சிறு விள்ளல் சாப்பிடவும். மற்றவர்களும், `இது பிரசாதம்’ என்ற உணர்வோடு குறைவாகச் சாப்பிடுவது நல்லது’’ என்கிறார் டயட்டீஷியன் சௌமியா.

மலைக்கவைக்கும் சுவை, மகா பிரசாதம்... மனமார ருசிக்கலாம் அளவோடு!

பச்சை... மஞ்சள்... சிவப்பு நிற கோழிகளை வளர்த்திருக்கிறீர்களா? #VillageNostalgia
பொன்.விமலா


“கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா... அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா..”

90-களில் பஞ்சாயத்து டிவி பெட்டிகளில் ’ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில் காதலன் படத்தில் வரும் இந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம், கலர் கோழிக்குஞ்சுகள் மீது அத்தனை ஈர்ப்பு எனக்கு. கோழிகளை கவிழ்த்து வைக்கும் கூடைகளுக்குள் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவதென்றால் அவ்வளவு பிடிக்கும். 90-களின் ஆரம்பங்களில் தான் பிராய்லர் கோழிகளைப் பற்றி முதல் முறையாக தெரிந்து கொண்டிருந்தேன்.



‘கீச்..கீச் ..கீச்..கீச்...’ என தட்டையான கூடைக்குள் செல்லமாய் கொஞ்சிக் கொண்டிருக்கும் கோழிக்குஞ்சுகளை தெருவில் தலையில் சுமந்து கொண்டு விற்றுச் செல்வார்கள். நாட்டுக் கோழிகளில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு,கறுப்பு நிறங்கள் தாண்டி வேறு நிறங்களில் கோழிகள் இருந்தததாய் நான் அறியவில்லை. ஆனால் பச்சை,மஞ்சள், இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா என நாம் நினைக்கும் நிறங்களில் கிடைக்கும் பிராய்லர் கோழிக்குஞ்சுகளைப் பஞ்சு உருண்டை போல கையில் எடுத்து அப்படியே கன்னத்தில் ஒட்டிக் கொண்டால் ஆஹா.. அத்தனை சுகம்.

பிராய்லர் குஞ்சுகள் மீதான மோகத்தில் அம்மா கொடுக்கும் சில்லறைகளை எல்லாம் சேகரித்து ரூபாய்க்கு இரண்டு கலர் கோழிக் குஞ்சுகளை வாங்கி அதைகூடைக்குள் வைத்து வளர்த்துக் கொண்டிருப்போம். ’எல்லாமே மேஜிக் தான்’ என்பது போலவே எண்ணி நான்காவது நாளே கலர் குஞ்சுகள் சாயம் வெளுத்துப் போய் புழுதியில் புரண்டு பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அதோடு விட்டிருக்கலாம். கோழிக்குஞ்சுகளை குளிப்பாட்டுகிறேன் என அவைகளை கையில் பிடித்து சோப்பு போட்டுக் குளிக்க வைத்து நாங்கள் செய்கிற சேட்டையில் சில குஞ்சுகள் மூச்சு திணறி சிறகுகள் அடித்துக் கொள்வதைப் பார்க்கையில் அம்மாவின் ஊதாங்கோல் வாசலில் பறக்கும். சாயம் வெளுத்து, காகமும், கீரியும் தூக்கிக் கொண்டு போனது போக, கடைசியாக வளர்ந்து நிற்கும் ஒற்றைக் கோழிக்குஞ்சும் தெரு நாய்க்கு இரையாகிப் போயிருக்கும். நாட்டுக் கோழிகளுக்கு இருக்கும் வீரியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் பிராய்லர் கோழிகளுக்கு இருப்பதில்லை.

பொசுக்கு பொசுக்கென்று கலர் காட்டிவிட்டு செத்துப் போய்விடும் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகள் மீது தான் அராஜகப் பிரியம் இருக்கும். அதென்ன அராஜகப் பிரியம் என்கிறீர்களா? ’கூரை ஏறி கோழிப் பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்’ என தெருநடையில் உட்கார்ந்து கொண்டு பழமொழி பேசித் தீர்க்கும் கிழவிக்குப் போட்டியாக முட்டையிட வேண்டிய கோழியை தத்தி தத்திப் பாய்ந்து போய் பிடித்து வந்து கூண்டுக்குள் போடுவதே பெருஞ்சவால் தான்.

கோழிகள் வளர்ப்பதொன்றும் அத்தனை சாதாரணமானது அல்ல. சந்தைக்குப் போய் புதிதாய் பெட்டைக் கோழி ஒன்றையும் சேவைலையும் பிடித்து வந்தால், அவற்றின் கால்களை கட்டி அடுப்புக்கு முன்பாக காட்டி ‘இனிமே இதுதான் உன் வீடு’ என சொல்லி மூன்று முறை அந்த அடுப்பைக் காட்டி சுத்திவிட்டு வாசலில் விடவேண்டும். கோழிக்கு நம் வீடு இரண்டொரு நாளில் தெரிந்துவிட்டப் பிறகு, அடுத்ததாக அதை கூண்டில் அடைத்துப் பழக்கப் பழக்கப்படுத்துவது முக்கியம்.

இப்படியே பழகினால் கோழிகள் மேய்ந்து விட்டு சாயங்காலம் ஆனதும் தவறாமல் கூண்டுக்குள் உறங்கப் போய்விடும். கோழிகளில் ஆண்பால் பெண்பால் பேதம் நிச்சயமாக இருக்கும். சேவல்கள் தலையில் பெரிய கொண்டைகளோடு தன் றெக்கையை அடித்துக் கொண்டு கோழிகளை மிரட்டி துரத்துவதைப் பார்க்கும் போது, அந்த காட்சி நமக்கு வேண்டுமானால் கோழியை சேவல் விரட்டுவது காதலின் வெளிப்பாடாக இருக்கலாம். அதில் நிச்சயம் காதல் இருக்கும். அதே நேரத்தில், ஆண் கோழி குப்பையைக் கிளற வந்துவிட்டால் பெண் கோழி அந்த இடத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தூரமாய் இருந்து வேடிக்கைப் பார்க்கும்.

கோழிக்கு தீவனம் போட அழைத்தால் கூட சேவலே முந்திக் கொண்டு ஓடிவரும். தவறி பெட்டைக்கோழி தீவனத்தில் தன் அலகை வைத்துவிட்டால் கூட சேவல் தன் கூரிய அலகால் பெட்டையை கொத்தி தூரத் துரத்திவிடும். இதில் கவனிக்க இன்னொன்றும் இருக்கிறது. கோழிகள் தன் குஞ்சுகளோடு தீவனத்தைக் கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சேவல்களுக்கு வழிவிட்டு தூரமாய் வேடிக்கைப் பார்க்கும். அல்லது உடன் இணைந்து தானும் தீவனம் உட்கொள்ளும். என்னதான் ‘கொக்கரக்கோ’ என சேவல் கூவினாலும் மொத்தமாய் கோழிகளை தீவனத்துக்கு அழைக்க ’பொபொபொபொ’ என்று பெண்பாலை தான் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் சேவல்களுக்கு ஒருபடி கீழாக தான் பெட்டைக் கோழிகளின் வாழ்க்கைமுறை அமைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.



கோழிகளுக்கு கூடு கட்டுவது கூட ஒரு அழகான கலைதான். கிடைக்கும் செங்கல் கருங்கல் எல்லாவற்றையும் மண்பூசி சாணம் பூசி மெழுகுவது தான் கோழிக் கூண்டுக்கு அழகு. மூன்றுக்கு மூன்றடி கூண்டு என்றாலும் அதில் 10 கோழிகள் கூட அடங்கிவிடும். கோழிகள் மாதத்தில் குறைந்தது 7 நாட்களாவது முட்டையிடும். கோழிகளின் முட்டைகளை சேகரித்து மணல் கூடையில் அவற்றை அடுக்கி வைத்து அதன் மேல் கோழியை வைத்து 22 நாட்கள் வரை அடைக்காக்க வைக்க வேண்டும். அடைக்காத்தலின் போது கோழிகளுக்கு பேன் பிடிக்கும். சீதாப்பழ இலைகளை அடைகாக்கும் இடத்தில் வைப்பதுதான் இதற்கான முதல் தீர்வு. கோழிக்குஞ்சுகள் கோழியின் கதகதப்பில் 22 வது நாட்களில் தன் முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும். குஞ்சுகள் வெளிவந்த பிறகு கோழியையும் கோழிக்குஞ்சுகளையும் காகத்திடம் இருந்து பாதுகாப்பது அவசியமானது. கோழிக்குஞ்சுகள் நம் கன்முன்னே வளரவளர ஒரு தலைமுறை நம் கண்முன்னே வளரும் சந்தோஷம் நமக்கு கிடைத்துவிடும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கோழிக் கூண்டைப் பராமரிப்பது சவாலான விஷயம். கூண்டுக்குள் இருக்கும் கோழிக் கழிவைத் தினமும் பெருக்கித் துடைக்காவிட்டால் பாம்புகள் உள்ளே நுழையலாம். இப்படி எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்து ஆசையாய் வளர்த்த கோழிகளை அறுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் கோழிகள் எப்போதும் நம்மிடம் இருந்து தூரமாய் தொலைந்துப் போய்விடுவதில்லை. ஊருக்குப் போனால் கோழிகள் குப்பையை சாவகாசமாய்க் கிளறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் ’கோழிக்கிறுக்கல் மாதிரி இருக்கு உன் கையெழுத்து’ என்று பலரும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தாலும், நகர வாழ்க்கை மறந்து கோழியின் கால்தடங்களின் அந்த கிறுக்கல்களைப் பார்த்த போது அதெல்லாம் கிராமத்து அத்தியாயத்தின் அழிக்க முடியாத கவிதைகளாகவே என் கண்களுக்குப் பட்டன!

இப்போது விஜயபாஸ்கர்... அடுத்த குறி எடப்பாடி, 29 அமைச்சர்கள்!

2016-ம் ஆண்டு, கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, தமிழகத்தை விட்டு இன்னும் நகரவில்லை. நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன் என்று பெரிய தலைகளை வாரிச்சுருட்டிய அந்தச் சூறாவளி, தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையை அதகளம் செய்துள்ளது. இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் அரசியல் காரணம், அலுவல் காரணம் என்று இரண்டு காரணங்கள் உள்ளன.

அரசியல் காரணங்கள்...

அ.தி.மு.க என்ற கட்சியைவிட்டு சசிகலா குடும்பத்தினர் மொத்தமாக ஒதுங்கிவிட வேண்டும் என்பதுதான் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசின் ஒரே நோக்கம். இதற்கு ஒப்புக்கொள்ளாதவரை, சசிகலா குடும்பத்தையும் அந்தக் குடும்பத்தை ஆதரிப்பவர்களையும் ரெய்டுகள், வழக்குகள், சிறைச்சாலைகள் துரத்திக்கொண்டே இருக்கும்.

இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிவைக்கப்பட்டு இருப்பதற்கும் அதுதான் காரணம். சசிகலாவுக்கு ஆதரவாக கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்துவைத்து அ.தி.மு.க அரசாங்கத்தைக் காப்பாற்றியதில் தினகரனுக்குத் துணையாக இருந்தவர் விஜயபாஸ்கர். கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்களை மீட்கிறோம் என்று போலீஸ் படை அங்கு போனபோது, உடனடியாக சபாநாயகருக்குக் கடிதம் எழுதி ‘உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டுவருவோம்’ என ரகளைசெய்து, போலீஸ் படையை வந்த வழியே திருப்பி அனுப்பியது விஜயபாஸ்கரின் அதிரடிதான். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசாங்கம் அமைந்தாலும்கூட, அந்த அரசாங்கத்தின் ஆல்-இன்-ஆல் ஆக வலம்வருபவர் விஜயபாஸ்கர். அவரை வளைப்பதற்குக் கையில் எடுக்கப்பட்ட விஷயம்தான் இந்த வருமானவரிச் சோதனை.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை முடக்குவதற்கு இந்த ரெய்டுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சம்பந்தமான ஆட்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் நேரத்தில், நடிகர் சரத்குமாரும் இந்த வில்லங்கத்தில் சிக்கிக்கொண்டதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தான் காரணம். தினகரனை ஆதரித்துப் பிரசாரம் செய்யப்போவதாக சரத்குமார் அறிவித்தார். அப்போதே அவர் பெயரும் ரெய்டு பட்டியலில் சேர்ந்துவிட்டது.

இந்தச் சுற்றிவளைப்புகள் இதோடு ஓயப்போவதில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்பட 29 பேர் ரெய்டு பட்டியலில் இருக்கின்றனர். அதோடு போயஸ் கார்டனுக்குள் விரைவில் வருமானவரித் துறை, மத்திய போலீஸ் பாதுகாப்புப் படையோடு நுழையப்போகிறது. தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் வீடுகளும் தப்பாது.
அலுவல் காரணங்கள்...

சுகாதாரத் துறையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள்தான் ரெய்டுக்கான முதல் பிள்ளையார்சுழி. அதை வைத்து சுகாதாரத் துறையில் நடக்கும் குளறுபடிகள் அலசப்பட்டன. அரசு மருத்துவமனைகளுக்கு மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது, கட்டடங்கள் கட்டுவது, பணியிடங்களை நிரப்புவது, டிரான்ஸ்ஃபர் என்று அத்தனையிலும் அமைச்சருக்கு கமிஷன் போவதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி அரசு டாக்டர்கள் சங்கமும், சுகாதாரத் துறை பணியாளர்கள் சங்கமும் பல புகார்களை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் மாத்திரையில் 30 பைசா கமிஷன் போகிறது என்று பகீர் புகார் கிளப்பப்பட்டது. அதுபோல, பதவியிடங்கள் நியாயமான முறையில் நிரப்பப்படுவதில்லை. முறையாக வரவேண்டிய பதவி உயர்வுக்கும் பணம் கொடுக்க வேண்டிய நிலை. இதெல்லாமே இந்த ரெய்டுகளுக்கு மிக முக்கியக் காரணம்.

உதாரணமாக, எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கீதா லெட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு அவர் நிறையவே செலவுசெய்தார் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் புலம்பினார்கள். கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கிளம்பிய குற்றச்சாட்டுகள், தமிழ்நாடு மருத்துவப் பொருள்கள் கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்வை காரணம் காட்டி என்.ஆர்.ஐ மாணவர்கள் 169 பேரிடம் வசூல் செய்யப்பட்ட பணம் போன்றவை இந்த ரெய்டுக்கு அலுவல் ரீதியான காரணங்கள் என்கிறார்கள்.
இடைத்தேர்தல்...

ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா நடந்ததற்கு ஆதாரங்கள், டோக்கன்கள், கட்டுக்கட்டாகப் பணம் என ரெய்டில் சிக்கிய ஆதாரங்கள் அனைத்தும், இடைத்தேர்தலைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றன.

ரெய்டு நடந்த வெள்ளிக்கிழமை மதியம், டெல்லியில் டெலிமெடிசன் சொசைட்டி விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விஜயபாஸ்கர் விருது பெறுவதாக இருந்தது. விருதுக்கு முன்பாக ரெய்டு வந்துவிட்டது.

- ஜோ.ஸ்டாலின்

NEWS TODAY 30.12.2025