Wednesday, April 12, 2017


பச்சை... மஞ்சள்... சிவப்பு நிற கோழிகளை வளர்த்திருக்கிறீர்களா? #VillageNostalgia
பொன்.விமலா


“கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா... அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா..”

90-களில் பஞ்சாயத்து டிவி பெட்டிகளில் ’ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில் காதலன் படத்தில் வரும் இந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம், கலர் கோழிக்குஞ்சுகள் மீது அத்தனை ஈர்ப்பு எனக்கு. கோழிகளை கவிழ்த்து வைக்கும் கூடைகளுக்குள் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவதென்றால் அவ்வளவு பிடிக்கும். 90-களின் ஆரம்பங்களில் தான் பிராய்லர் கோழிகளைப் பற்றி முதல் முறையாக தெரிந்து கொண்டிருந்தேன்.



‘கீச்..கீச் ..கீச்..கீச்...’ என தட்டையான கூடைக்குள் செல்லமாய் கொஞ்சிக் கொண்டிருக்கும் கோழிக்குஞ்சுகளை தெருவில் தலையில் சுமந்து கொண்டு விற்றுச் செல்வார்கள். நாட்டுக் கோழிகளில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு,கறுப்பு நிறங்கள் தாண்டி வேறு நிறங்களில் கோழிகள் இருந்தததாய் நான் அறியவில்லை. ஆனால் பச்சை,மஞ்சள், இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா என நாம் நினைக்கும் நிறங்களில் கிடைக்கும் பிராய்லர் கோழிக்குஞ்சுகளைப் பஞ்சு உருண்டை போல கையில் எடுத்து அப்படியே கன்னத்தில் ஒட்டிக் கொண்டால் ஆஹா.. அத்தனை சுகம்.

பிராய்லர் குஞ்சுகள் மீதான மோகத்தில் அம்மா கொடுக்கும் சில்லறைகளை எல்லாம் சேகரித்து ரூபாய்க்கு இரண்டு கலர் கோழிக் குஞ்சுகளை வாங்கி அதைகூடைக்குள் வைத்து வளர்த்துக் கொண்டிருப்போம். ’எல்லாமே மேஜிக் தான்’ என்பது போலவே எண்ணி நான்காவது நாளே கலர் குஞ்சுகள் சாயம் வெளுத்துப் போய் புழுதியில் புரண்டு பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அதோடு விட்டிருக்கலாம். கோழிக்குஞ்சுகளை குளிப்பாட்டுகிறேன் என அவைகளை கையில் பிடித்து சோப்பு போட்டுக் குளிக்க வைத்து நாங்கள் செய்கிற சேட்டையில் சில குஞ்சுகள் மூச்சு திணறி சிறகுகள் அடித்துக் கொள்வதைப் பார்க்கையில் அம்மாவின் ஊதாங்கோல் வாசலில் பறக்கும். சாயம் வெளுத்து, காகமும், கீரியும் தூக்கிக் கொண்டு போனது போக, கடைசியாக வளர்ந்து நிற்கும் ஒற்றைக் கோழிக்குஞ்சும் தெரு நாய்க்கு இரையாகிப் போயிருக்கும். நாட்டுக் கோழிகளுக்கு இருக்கும் வீரியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் பிராய்லர் கோழிகளுக்கு இருப்பதில்லை.

பொசுக்கு பொசுக்கென்று கலர் காட்டிவிட்டு செத்துப் போய்விடும் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகள் மீது தான் அராஜகப் பிரியம் இருக்கும். அதென்ன அராஜகப் பிரியம் என்கிறீர்களா? ’கூரை ஏறி கோழிப் பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்’ என தெருநடையில் உட்கார்ந்து கொண்டு பழமொழி பேசித் தீர்க்கும் கிழவிக்குப் போட்டியாக முட்டையிட வேண்டிய கோழியை தத்தி தத்திப் பாய்ந்து போய் பிடித்து வந்து கூண்டுக்குள் போடுவதே பெருஞ்சவால் தான்.

கோழிகள் வளர்ப்பதொன்றும் அத்தனை சாதாரணமானது அல்ல. சந்தைக்குப் போய் புதிதாய் பெட்டைக் கோழி ஒன்றையும் சேவைலையும் பிடித்து வந்தால், அவற்றின் கால்களை கட்டி அடுப்புக்கு முன்பாக காட்டி ‘இனிமே இதுதான் உன் வீடு’ என சொல்லி மூன்று முறை அந்த அடுப்பைக் காட்டி சுத்திவிட்டு வாசலில் விடவேண்டும். கோழிக்கு நம் வீடு இரண்டொரு நாளில் தெரிந்துவிட்டப் பிறகு, அடுத்ததாக அதை கூண்டில் அடைத்துப் பழக்கப் பழக்கப்படுத்துவது முக்கியம்.

இப்படியே பழகினால் கோழிகள் மேய்ந்து விட்டு சாயங்காலம் ஆனதும் தவறாமல் கூண்டுக்குள் உறங்கப் போய்விடும். கோழிகளில் ஆண்பால் பெண்பால் பேதம் நிச்சயமாக இருக்கும். சேவல்கள் தலையில் பெரிய கொண்டைகளோடு தன் றெக்கையை அடித்துக் கொண்டு கோழிகளை மிரட்டி துரத்துவதைப் பார்க்கும் போது, அந்த காட்சி நமக்கு வேண்டுமானால் கோழியை சேவல் விரட்டுவது காதலின் வெளிப்பாடாக இருக்கலாம். அதில் நிச்சயம் காதல் இருக்கும். அதே நேரத்தில், ஆண் கோழி குப்பையைக் கிளற வந்துவிட்டால் பெண் கோழி அந்த இடத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தூரமாய் இருந்து வேடிக்கைப் பார்க்கும்.

கோழிக்கு தீவனம் போட அழைத்தால் கூட சேவலே முந்திக் கொண்டு ஓடிவரும். தவறி பெட்டைக்கோழி தீவனத்தில் தன் அலகை வைத்துவிட்டால் கூட சேவல் தன் கூரிய அலகால் பெட்டையை கொத்தி தூரத் துரத்திவிடும். இதில் கவனிக்க இன்னொன்றும் இருக்கிறது. கோழிகள் தன் குஞ்சுகளோடு தீவனத்தைக் கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சேவல்களுக்கு வழிவிட்டு தூரமாய் வேடிக்கைப் பார்க்கும். அல்லது உடன் இணைந்து தானும் தீவனம் உட்கொள்ளும். என்னதான் ‘கொக்கரக்கோ’ என சேவல் கூவினாலும் மொத்தமாய் கோழிகளை தீவனத்துக்கு அழைக்க ’பொபொபொபொ’ என்று பெண்பாலை தான் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் சேவல்களுக்கு ஒருபடி கீழாக தான் பெட்டைக் கோழிகளின் வாழ்க்கைமுறை அமைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.



கோழிகளுக்கு கூடு கட்டுவது கூட ஒரு அழகான கலைதான். கிடைக்கும் செங்கல் கருங்கல் எல்லாவற்றையும் மண்பூசி சாணம் பூசி மெழுகுவது தான் கோழிக் கூண்டுக்கு அழகு. மூன்றுக்கு மூன்றடி கூண்டு என்றாலும் அதில் 10 கோழிகள் கூட அடங்கிவிடும். கோழிகள் மாதத்தில் குறைந்தது 7 நாட்களாவது முட்டையிடும். கோழிகளின் முட்டைகளை சேகரித்து மணல் கூடையில் அவற்றை அடுக்கி வைத்து அதன் மேல் கோழியை வைத்து 22 நாட்கள் வரை அடைக்காக்க வைக்க வேண்டும். அடைக்காத்தலின் போது கோழிகளுக்கு பேன் பிடிக்கும். சீதாப்பழ இலைகளை அடைகாக்கும் இடத்தில் வைப்பதுதான் இதற்கான முதல் தீர்வு. கோழிக்குஞ்சுகள் கோழியின் கதகதப்பில் 22 வது நாட்களில் தன் முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும். குஞ்சுகள் வெளிவந்த பிறகு கோழியையும் கோழிக்குஞ்சுகளையும் காகத்திடம் இருந்து பாதுகாப்பது அவசியமானது. கோழிக்குஞ்சுகள் நம் கன்முன்னே வளரவளர ஒரு தலைமுறை நம் கண்முன்னே வளரும் சந்தோஷம் நமக்கு கிடைத்துவிடும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கோழிக் கூண்டைப் பராமரிப்பது சவாலான விஷயம். கூண்டுக்குள் இருக்கும் கோழிக் கழிவைத் தினமும் பெருக்கித் துடைக்காவிட்டால் பாம்புகள் உள்ளே நுழையலாம். இப்படி எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்து ஆசையாய் வளர்த்த கோழிகளை அறுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் கோழிகள் எப்போதும் நம்மிடம் இருந்து தூரமாய் தொலைந்துப் போய்விடுவதில்லை. ஊருக்குப் போனால் கோழிகள் குப்பையை சாவகாசமாய்க் கிளறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் ’கோழிக்கிறுக்கல் மாதிரி இருக்கு உன் கையெழுத்து’ என்று பலரும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தாலும், நகர வாழ்க்கை மறந்து கோழியின் கால்தடங்களின் அந்த கிறுக்கல்களைப் பார்த்த போது அதெல்லாம் கிராமத்து அத்தியாயத்தின் அழிக்க முடியாத கவிதைகளாகவே என் கண்களுக்குப் பட்டன!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024