இப்போது விஜயபாஸ்கர்... அடுத்த குறி எடப்பாடி, 29 அமைச்சர்கள்!
2016-ம் ஆண்டு, கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, தமிழகத்தை விட்டு இன்னும் நகரவில்லை. நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன் என்று பெரிய தலைகளை வாரிச்சுருட்டிய அந்தச் சூறாவளி, தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையை அதகளம் செய்துள்ளது. இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் அரசியல் காரணம், அலுவல் காரணம் என்று இரண்டு காரணங்கள் உள்ளன.அ.தி.மு.க என்ற கட்சியைவிட்டு சசிகலா குடும்பத்தினர் மொத்தமாக ஒதுங்கிவிட வேண்டும் என்பதுதான் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசின் ஒரே நோக்கம். இதற்கு ஒப்புக்கொள்ளாதவரை, சசிகலா குடும்பத்தையும் அந்தக் குடும்பத்தை ஆதரிப்பவர்களையும் ரெய்டுகள், வழக்குகள், சிறைச்சாலைகள் துரத்திக்கொண்டே இருக்கும்.
இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிவைக்கப்பட்டு இருப்பதற்கும் அதுதான் காரணம். சசிகலாவுக்கு ஆதரவாக கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்துவைத்து அ.தி.மு.க அரசாங்கத்தைக் காப்பாற்றியதில் தினகரனுக்குத் துணையாக இருந்தவர் விஜயபாஸ்கர். கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்களை மீட்கிறோம் என்று போலீஸ் படை அங்கு போனபோது, உடனடியாக சபாநாயகருக்குக் கடிதம் எழுதி ‘உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டுவருவோம்’ என ரகளைசெய்து, போலீஸ் படையை வந்த வழியே திருப்பி அனுப்பியது விஜயபாஸ்கரின் அதிரடிதான். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசாங்கம் அமைந்தாலும்கூட, அந்த அரசாங்கத்தின் ஆல்-இன்-ஆல் ஆக வலம்வருபவர் விஜயபாஸ்கர். அவரை வளைப்பதற்குக் கையில் எடுக்கப்பட்ட விஷயம்தான் இந்த வருமானவரிச் சோதனை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை முடக்குவதற்கு இந்த ரெய்டுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சம்பந்தமான ஆட்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் நேரத்தில், நடிகர் சரத்குமாரும் இந்த வில்லங்கத்தில் சிக்கிக்கொண்டதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தான் காரணம். தினகரனை ஆதரித்துப் பிரசாரம் செய்யப்போவதாக சரத்குமார் அறிவித்தார். அப்போதே அவர் பெயரும் ரெய்டு பட்டியலில் சேர்ந்துவிட்டது.
இந்தச் சுற்றிவளைப்புகள் இதோடு ஓயப்போவதில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்பட 29 பேர் ரெய்டு பட்டியலில் இருக்கின்றனர். அதோடு போயஸ் கார்டனுக்குள் விரைவில் வருமானவரித் துறை, மத்திய போலீஸ் பாதுகாப்புப் படையோடு நுழையப்போகிறது. தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் வீடுகளும் தப்பாது.
சுகாதாரத் துறையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள்தான் ரெய்டுக்கான முதல் பிள்ளையார்சுழி. அதை வைத்து சுகாதாரத் துறையில் நடக்கும் குளறுபடிகள் அலசப்பட்டன. அரசு மருத்துவமனைகளுக்கு மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது, கட்டடங்கள் கட்டுவது, பணியிடங்களை நிரப்புவது, டிரான்ஸ்ஃபர் என்று அத்தனையிலும் அமைச்சருக்கு கமிஷன் போவதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி அரசு டாக்டர்கள் சங்கமும், சுகாதாரத் துறை பணியாளர்கள் சங்கமும் பல புகார்களை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் மாத்திரையில் 30 பைசா கமிஷன் போகிறது என்று பகீர் புகார் கிளப்பப்பட்டது. அதுபோல, பதவியிடங்கள் நியாயமான முறையில் நிரப்பப்படுவதில்லை. முறையாக வரவேண்டிய பதவி உயர்வுக்கும் பணம் கொடுக்க வேண்டிய நிலை. இதெல்லாமே இந்த ரெய்டுகளுக்கு மிக முக்கியக் காரணம்.
உதாரணமாக, எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கீதா லெட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு அவர் நிறையவே செலவுசெய்தார் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் புலம்பினார்கள். கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கிளம்பிய குற்றச்சாட்டுகள், தமிழ்நாடு மருத்துவப் பொருள்கள் கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்வை காரணம் காட்டி என்.ஆர்.ஐ மாணவர்கள் 169 பேரிடம் வசூல் செய்யப்பட்ட பணம் போன்றவை இந்த ரெய்டுக்கு அலுவல் ரீதியான காரணங்கள் என்கிறார்கள்.
இடைத்தேர்தல்...
ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா நடந்ததற்கு ஆதாரங்கள், டோக்கன்கள், கட்டுக்கட்டாகப் பணம் என ரெய்டில் சிக்கிய ஆதாரங்கள் அனைத்தும், இடைத்தேர்தலைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றன.
ரெய்டு நடந்த வெள்ளிக்கிழமை மதியம், டெல்லியில் டெலிமெடிசன் சொசைட்டி விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விஜயபாஸ்கர் விருது பெறுவதாக இருந்தது. விருதுக்கு முன்பாக ரெய்டு வந்துவிட்டது.
- ஜோ.ஸ்டாலின்
No comments:
Post a Comment