Wednesday, April 12, 2017


திருப்பதி லட்டு மகா பிரசாதம்... எவ்வளவு ருசிக்கலாம்? 


பாலு சத்யா


பிரசாதங்களில் பிரத்யேகச் சுவைகொண்டது; உலகம் முழுக்கப் பிரபலமானது; `இன்னொன்று கிடைக்காதா?’ என பக்தர்களை ஏங்கச் செய்வது... திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாராகும் லட்டு! நாள் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. என்னதான் நெய்யின் அளவைக் கூட்டி, ஏலக்காயும் முந்திரியும் சேர்த்து, பல வாசனைப் பொருட்களைப் போட்டாலும், இது தரும் சுவை எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த சமையல் கலைஞருக்கும் கைகூடுவதில்லை. இது மந்திரஜாலமா... ஏழுமலையானின் மகிமையா? இப்படிக் கேட்டால் பக்தர்கள் அடித்துச் சொல்வார்கள்... அது ஏழுமலையானின் மகிமைதான் என்று!



ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலில் வெங்கடாஜலபதிக்கு நைவேத்தியப் பிரசாதமாகப் படைக்கப்படும் லட்டு, பெருமாளுக்குப் பிரியமான ஒன்று. இதை `ஸ்ரீவாரி லட்டு’ என்றும் சொல்வார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டுதான் இதைத் தயாரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறது. திருமலையில், கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் பெருமாளின் `லட்டு பொட்டு’ என்கிற சமையற்கூடத்தில்தான் இதைத் தயாரிக்கிறார்கள். இன்றைக்கும் திருப்பதிக்குப் போகும் எந்த பக்தரானாலும், இந்த லட்டைக் கையில் வாங்கி, ஒரு விள்ளலாவது சுவைக்காமல் அவருக்கு அந்தப் புனிதப் பயணம் திருப்தியாக நிறைவு பெறுவதில்லை. அதேபோல திருப்பதிக்குச் சென்று திரும்பியவர் என்று தெரிந்தால், தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும், `லட்டு பிரசாதம் எங்கே?’ என்று கேட்காமலும் இருப்பதில்லை. இதன் அற்புதச் சுவை அலாதியானது!

முதன்முதலில் லட்டு பிரசாதமாக சீனிவாச பெருமாளுக்குப் படைக்கப்பட்டது, ஆகஸ்ட் 2, 1715-ம் ஆண்டில் என்கிறார்கள். 300 ஆண்டுகளாகியும் இதன் சுவை, மணம் குறையாமல் இருப்பது ஆச்சர்யம். அதாவது, இதற்கான பிரத்யேக சமையற்காரர்கள் கையால் உருட்டி உருட்டி லட்டைப் பிடித்த காலம் தொடங்கி, இயந்திரங்களின் உதவியோடு தயாரிக்கும் இந்தக் காலத்திலும் லட்டின் தரத்திலோ, சுவையிலோ இம்மிகூட மாற்றமில்லை என்பது உலகையே வியக்கவைக்கும் செய்தி. ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லட்டுக்கு மேல் தயாரிக்கப்படுகின்றன. தரிசனம் செய்பவர்களுக்கு இலவசமாக ஒரு சிறிய லட்டு தரப்படும். மேற்கொண்டு வாங்கும் (ஒருவருக்கு இரண்டு - சீசனுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்) லட்டுகளுக்கு பணம் செலுத்தி, டோக்கன் வாங்கி, வரிசையில் நின்று வாங்க வேண்டும். 2016-ம் ஆண்டு மட்டும் திருப்பதியில் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.



உண்மையில் இதில் ஒன்றைத் தயாரிக்க ஆகும் செலவு 25 ரூபாய் என்றால், திருப்பதியில் 10 ரூபாய்க்குதான் (டோக்கன் விலையில்) விற்கிறார்கள். அளவிலும் சற்று பெரியது; ஒன்று சுமார் 175 கிராம் எடை கொண்டது. கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லட்டைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் 270 பேர் சமையல்காரர்கள். இவற்றைத் தயாரிக்கும் இடம் புனிதமான பிரசாதம் தயாரிக்கும் இடம் என்பதால், வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. லட்டின் சுத்தம், சுகாதாரத்தை அறிய தனியாக லேப், தரக்கட்டுப்பாடு, அதற்கான சோதனை எல்லாம் இருக்கின்றன. 300 ஆண்டுகளுக்கு முன்னரே இது திருப்பதி பாலாஜிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டிருந்தாலும், இதற்கான காப்புரிமையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெற்றது 2009-ம் ஆண்டில்தான். ஆக, `திருப்பதி லட்டு’ என்கிற பெயரில் வெளியாட்கள் யாரும் இதை விற்பனை செய்ய முடியாது.

`பெருமாள், அலங்காரப் பிரியர்’ என்று சொல்வார்கள். மலர் மாலைகளைச் சூடி, தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் ஜொலிக்க காட்சி தருவார் ஏழுமலையான். அப்பேர்ப்பட்ட அலங்காரப் பிரியரான பாலாஜிக்கு, வேறெங்கும் கிடைக்காத லட்டு பிரசாதம் உகந்ததாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், 300 ஆண்டுகளில் மிகப் பெரியதாக இருந்த இதன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. திருப்பதியில் பெருமாளை தரிசித்துவிட்டு, லட்டுப் பிரசாதத்தை கிள்ளி, வாயில் போட்டு அது கரையும்போது, பெருமாளைப் பார்க்க ஏழு மலை ஏறி வந்த களைப்பெல்லாம் கரைந்துபோகும். மனநிறைவோடு இல்லம் திரும்புவார்கள்.



திருப்பதி லட்டை வடிவமைத்தவர் `லட்டு அரசர்’ என்று அழைக்கப்படும் கல்யாணம் அய்யங்கார். அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் லட்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டார்கள். இதற்காக தனித் தொழில்நுட்பம் உருவானது; 2001-ம் ஆண்டு வரை, இவர்கள் 51 லட்டுகளைத் தயாரித்தால், அதில் பதினொன்றை இவர்களின் குடும்பத்துக்குப் பங்காகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதற்கு எதிராக திருப்பதி தேவஸ்தானம் வழக்குத் தொடுத்தது. உச்ச நீதிமன்றம் இந்த வாரிசுரிமையை 2001-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வந்தது.

திருப்பதியில் `அஸ்தானம்’, `கல்யாணோத்சவம்’, `புரோக்தம்’ என மூன்று வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அஸ்தானம் வகை விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுவது, இதன் எடை சுமார் 750 கிராம். இது நம் குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. திருப்பதியில் நிகழும் பெருமாளுக்கான பிரத்யேக கொண்டாட்டங்களான கல்யாணோத்சவம், ஆர்ஜித சேவா ஆகியவற்றின் ஒரு பகுதிதான் கல்யாணோத்சவ லட்டு. சற்று பெரிய அளவிலான இதற்கு எப்போதும் பக்தர்களிடையே டிமாண்ட் உண்டு. `புரோக்தம்’ பக்தர்களுக்கு வழங்கப்படுவது. 175 கிராம் எடை கொண்டது.



திருப்பதி லட்டு மருத்துவரீதியாக பலன் தருவதுதானா? பதில் சொல்கிறார் டயட்டீஷியன் சௌமியா... `` இது, கலோரி, புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு என அனைத்தும் நிறைந்தது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி ஆகியவை குறைந்த அளவில் உள்ளன. இதை கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை எல்லாம் கலந்து தயாரிக்கிறார்கள். அதிக அளவில் இனிப்பு சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை. சோம்பல் ஏற்படும்; அதிகப் பசி உண்டாகும், இதன் காரணமாகவே அதிகம் சாப்பிடத் தோன்றும்; எடை அதிகரிக்கும்; கொழுப்பு கூடும்.

ஆனால், திருப்பதி லட்டில் சேர்க்கக்கூடிய முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை அருமையான மருத்துவப் பலன்களை அளிக்கக்கூடியவை. அதோடு தனியாக இதற்காக தரக்கட்டுப்பாடு, அதற்கான பரிசோதனை எல்லாம் உண்டு. எனவே, ஆரோக்கியமான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. எப்போதாவது, பிரசாதமாகத்தான் இதை நாம் சாப்பிடுகிறோம்; அதிலும் அதிக அளவில் சாப்பிடுவதில்லை என்பதால் தாராளமாகச் சாப்பிடலாம். சர்க்கரைநோய் உள்ளவர்கள் சின்னஞ்சிறு விள்ளல் சாப்பிடவும். மற்றவர்களும், `இது பிரசாதம்’ என்ற உணர்வோடு குறைவாகச் சாப்பிடுவது நல்லது’’ என்கிறார் டயட்டீஷியன் சௌமியா.

மலைக்கவைக்கும் சுவை, மகா பிரசாதம்... மனமார ருசிக்கலாம் அளவோடு!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024