Wednesday, April 12, 2017


மயிலையே கயிலை’ என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?

எஸ்.கதிரேசன்



‘சென்னை நகரின் இதயம்' என்று சொன்னால், மயிலாப்பூரைத்தான் சொல்லவேண்டும். மயிலாப்பூருக்குத்தான் எத்தனை பெருமை?! 'மயிலையே கயிலை' என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?

வரலாற்று ரீதியாக மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்று சொல்லும்படி மயிலாப்பூரைச் சுற்றிலும் ஏழு சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. மேலும் மயிலையின் காவல் தெய்வமாக கோலவிழி அம்மனும், முண்டகக்கண்ணி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். திருவள்ளுவர் பிறந்ததும்கூட மயிலாப்பூரில்தான் என்று சொல்லப்படுகிறது. இப்படி பல மகத்துவங்கள் நிறைந்த மயிலாப்பூருக்கு அந்தப் பெயர் வந்த கதையும், அதன் பின்னணியில் இருக்கும், தொண்டர்களின் பெருமையை உணர்த்துவதான சம்பவமும் பற்றி தெரிந்துகொள்ளலாமே...



'திருத்தொண்டர்களின் பெருமை, இறைவனை விடவும் பெரிது' என்று அந்தச் சிவப் பரம்பொருளுக்கே அன்னை உணர்த்திய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலாப்பூர்.

கயிலையில் ஒருநாள் சிவபெருமான், அன்னை உமையவளுக்கு வேதப் பொருளை விளக்கிக்கொண்டிருந்தார். அந்தவேளையில் அழகான மயில் ஒன்று, அன்னையின் எதிரில் வந்து தோகை விரித்து ஆடியது. அதன் ஆட்டம், ஜகன்மாதாவின் சிந்தையைச் சிதறச் செய்தது. மயூரத்தின் ஆட்டத்தில் லயித்துப்போனாள்.



சிவபிரான் சினம் கொண்டார். ‘‘தேவி, நான் வேதப்பொருள் பற்றி கூறுகையில் நீ மயிலின் ஆட்டத்தை ரசிக்கிறாயே’’ என்று கேட்கிறார். அதற்கு இறைவி, ‘‘மயில், நம் குழந்தை முருகனின் வாகனம் அல்லவா? முருகனுக்குத் தொண்டு செய்கிறது அல்லவா? அதைப் பார்த்ததுமே எனக்கு முருகனின் நினைவு வந்துவிட்டது. அதனால்தான் நான் மயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்று கூறினாள்.
‘அப்படியானால் என்னை விடவும் அந்த மயில் உனக்கு உயர்வாகத் தெரிகிறதா?’ என்று ஈசன் கேட்டார்.



‘சுவாமி! தொண்டர்கள்தான் பெரியவர்கள் என்பது சத்தியம் அல்லவா? அப்படி முருகனுக்கு தொண்டு செய்யும் மயிலும் பெரிதுதானே’ இது இறைவியின் கேள்வி.

‘அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’

‘முடியும்!’

‘எப்போது?’

‘இதோ, இப்போதே’

உடனே அன்னை உமையவள், எந்த மயிலின் காரணமாக இந்த விவாதம் தொடங்கியதோ அந்த மயிலின் வடிவம் கொண்டு, நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் மயிலாப்பூர் தலத்தை அடைகிறாள்.

தேவி மயிலாக உலவிக் கொண்டிருக்கும் அந்த மயிலாப்பூரிலேயே இறைவியின் பிரிவைத் தாங்கமாட்டாமல், ஈசனும் அங்கிருந்த புன்னைமரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளுகிறார்.

அவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்ய அங்கு யாரும் இல்லையே! தொண்டர்கள் இல்லாமல் ஈசன் தவித்திருப்பது கண்டு மயில் உருவம் கொண்டிருந்த அன்னை, அருகில் இருந்த பொய்கையில் நீராடி, தன் அலகினால் மலர்களையும் கனிகளையும் எடுத்து வந்து சிவலிங்கதுக்கு அர்ப்பணிக்கிறாள். அன்னையின் தொண்டில் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்குத் தரிசனம் தந்தார். அன்னை சுய உருவம் ஏற்றாள்.



‘தேவி! தொண்டர்களின் பெருமையை உலகத்தவர் உணர்ந்திடவே நாம் இந்த நாடகத்தை நடத்தினோம். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். கருணையே வடிவானவள் அல்லவா இறைவி!

‘ஐயனே! தொண்டர்தம் பெருமையை உலகறியச் செய்ய தாங்கள் எழுந்தருளிய இத்தலத்திலேயே தங்கள் சாந்நித்யம் நிலைத்திருக்க வேண்டும்.’ என வேண்டினாள். அப்படியே வரம் தந்த சிவபெருமான், ‘தேவி! நீயும் இங்கே வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் தரும் கற்பகமாக நிலைத்திருப்பாயாக’’ என அருளினார். இப்படி அம்மையும் அப்பனுமாய் இன்றைக்கும் மயிலையில் எழுந்தருளி, மனமுருக வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் அருள்புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.



மயிலையின் தல வரலாறே தொண்டர்தம் பெருமையை உலகத்தவர்க்கு உணர்த்தியதன் காரணமாகத்தான், மயிலையில் அறுபத்துமூவர் விழா தனிச்சிறப்பு பெறுகிறது. மயிலாக அன்னை இறைவனை வணங்கி அருள் பெற்றதால்தான் மயிலாப்பூர் என பெயர் பெற்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024